Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அனைத்து கன்டெய்னர், டாரஸ் லாரிகள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்: மற்றொரு தரப்பினர் வாகனத்தை இயக்குவோம் என அறிவிப்பு

சென்னை: அனைத்து கன்டெய்னர், டாரஸ் லாரிகள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் என அறிவித்துள்ள நிலையில், மற்றொரு தரப்பினர் லாரிகளை இயக்குவோம் என தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களுக்கான ஆண்டு தரச்சான்றிதழ் பெறுவதற்கான புதுப்பிப்பு கட்டணம் அதிகபட்சமாக ரூ.28 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டதை கண்டித்து வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். இது உள்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நள்ளிரவு முதல் அனைத்து கன்டெய்னர் லாரிகள், டாரஸ் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் அனைத்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

இதுதொடர்பாக ராயபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் லாரி உரிமையாளர்கள் கூறியதாவது: சென்னையில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள், மோட்டார் வெளிச்சம், ஆல் இந்தியா மோட்டார் சர்வீஸ் அமைப்புகள் சார்பில் புதிய வாகன சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், எல்லை சோதனைசாவடிகளை அகற்றக்கோரியும், அதிக எடை ஏற்றும்போது போடப்படும் அபராதத்தை பொருட்கள் அனுப்புபவரே ஏற்றுகொள்ள வேண்டும், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி 9ம் தேதி (இன்று) நள்ளிரவில் இருந்து வாகனங்களை இயக்க மாட்டோம்.

ஒன்றிய அரசு எங்களுடைய 9 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலைநிறுத்தம் தொடரும். இந்த போராட்டத்தில் சுமார் 13 துறைமுக சங்கங்கள், மோட்டார் வெளிச்சத்தில் உள்ள 75 சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இதில் மற்ற சங்கத்தினரும் இணைவார்கள். எங்களுடைய 9 கோரிக்கைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இதனால் நேரடியாக 5 லட்சம் குடும்பத்தினரும், மறைமுகமாக மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 45 லட்சம் முதல் 1 கோடி வரையிலான குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கங்களில் ஒரு தரப்பினர் வாகன புதுப்பிப்பு கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் வாகனத்தை இயக்கும்போது வாகன ஓட்டுநர்களுக்கும், வாகனத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை காட்டுப்பள்ளி துறைமுக ஒப்பந்ததாரர்கள் கமிட்டியில் உள்ள 7 சங்கத்தை சேர்ந்தவர்கள் அதன் தலைவர் எம்.எம். கோபி தலைமையில் தண்டையார்பேட்டையில் உள்ள வடக்கு மண்டல காவல் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எம்எம்.கோபி கூறியதாவது: தமிழகத்தில் 4 பிரிவுகளாக வாகன தரசான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து சம்பந்தப்பட்ட துறையிடம் மனு அளித்துள்ளோம். மனுவிற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சிலர் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். எங்கள் அமைப்பில் உள்ள 7 சங்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.