சிவபெருமானுக்காக தங்க மீனை கடலில் விடும் நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கான மீனவர்கள், சிவனடியார்கள் பங்கேற்பு
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் கடலில் சிவபெருமானுக்காக தங்க மீன் விடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்றனர். நாகை மாவட்டம் நம்பியார் நகரில் மீனவராக பிறந்த அதிபத்த நாயனார் சிவபெருமான் மீது கொண்ட பக்தியினால், வலையில் சிக்கும் முதல் மீனை கடலில் விடுவது வழக்கம். இவரது பக்தியை சோதிக்க நினைத்த சிவபெருமான் தங்க மீன் ஒன்றை வலையில் சிக்க செய்ததாகவும், அந்த மீனையும் அதிபத்த நாயனார் கடலில் விட்டதாகவும், இதன் மூலம் அதிபத்த நாயனார் பக்தியை கண்ட இறைவன் அவருக்கு காட்சி அளித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. இவற்றின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று அதிபத்த நாயனார் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெறுகிறது.
நாகப்பட்டினம் நம்பியார் நகர் மீனவர் கிராமத்தில் சார்பாக நேற்று நடைபெற்ற விழாவில், பூஜிக்கப்பட்ட தங்க மீன் மற்றும் அதிபத்த நாயனார் சிலைகள் ஊர்வலமாக கடற்கடைக்கு எடுத்து செல்லப்பட்டன. அப்போது சிவனடியார்கள் சிவ வாக்கிய கருவிகளை முழங்க பக்தி பரவசத்துடன் தாண்டவ நடனமாடினர். தொடர்ந்து தங்க மீனுடன் படகில் நடுக்கடலுக்கு சென்ற மீனவர்கள் சிவபெருமானுக்காக கடலில் தங்க மீன் விட்டு எடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் சிவனடியார்கள் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்