புதுடெல்லி: லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கிந்திய மற்றும் ஆப்பிரிக்க ஆராய்ச்சி பள்ளியின் புகழ்பெற்ற இந்தி மொழி பேராசிரியர் பிரான்செஸ்கா ஆர்சினி. ஹாங்காங்கில் இருந்து இவர் திங்களன்று டெல்லி சர்வதேச இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் அவர் வந்த சிறிது நேரத்திலேயே நாடு கடத்தப்பட்டார். விசா நிபந்தனைகளை மீறியதற்காக கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அவர் கருப்பு பட்டியலில் உள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இந்தி மற்றும் உருது இலக்கிய கலாச்சாரங்கள் குறித்த ஒர்சினியின் படைப்பு இந்தியாவின் கூட்டு கலாச்சார பாரம்பரியம் குறித்த நமது கூட்டு புரிதலை வளப்படுத்தியுள்ளது. அவரை நாட்டிற்குள் வராமல் தடை செய்யும் முடிவு குடியேற்ற நடைமுறை விஷயம் அல்ல. மாறாக சுதந்திரமான தீவிர சிந்தனை கொண்ட தொழில்முறை புலமைக்கு மோடி அரசின் விரோதத்தின் அறிகுறியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
