Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களவையில் கடும் அமளிக்கு இடையே ஆன்லைன் கேம்களுக்கு தடை மசோதா நிறைவேற்றம்: சூதாட்ட செயலிகளை நடத்துபவர்களுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்

புதுடெல்லி: பணத்தை வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களுக்கு தடை செய்து ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் ஆன்லைன் பண விளையாட்டுகளை நடத்துவோர் மற்றும் விளம்பரப்படுத்துவோருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கும் கடுமையான தண்டனைகள் இடம் பெற்றுள்ளன. ஆன்லைன் விளையாட்டு செயலிகளில் பணத்தை வைத்து விளையாடும் கேம்கள் பெருகி வருகின்றன. நிஜ பணத்தை வைத்து விளையாடுவதால், இந்த விளையாட்டுகளுக்கு பலர் அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்யும் முடிவுக்கு செல்கின்றனர்.

மேலும் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கும் வழிவகுக்கிறது. இந்த விளையாட்டு மூலம் பணத்தை இழப்பவர்கள் மனநல பிரச்னைகளாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், இதுபோன்ற பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து இந்த மசோதாவை ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு நடுவே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அமளி காரணமாக மசோதா மீது விவாதம் நடக்காமல் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அமளியால் அவை மாலை 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 5 மணிக்கு அவை தொடங்கியதும், அமளிக்கு மத்தியில் மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்படும்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வரும் பட்சத்தில் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்கள் முழுமையாக தடை செய்யப்படும். ஆன்லைன் பண விளையாட்டுகளை வழங்கும் அல்லது விளம்பரப்படுத்தும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ. 1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து கடுமையான தண்டனை விதிக்கப்படலாம். விதிகளை மீறி இந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விளம்பரம் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இந்த விளையாட்டுகளுக்காக நிதி பரிமாற்றங்களில் ஈடுபடும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் பண விளையாட்டுகளை விளையாடுபவர்களைக் குற்றவாளிகளாக இந்த மசோதா கருதுவதில்லை. மாறாக, அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறது. குற்றத்தைத் தூண்டுபவர்கள் மற்றும் அதை ஊக்குவிப்பவர்களை மையப்படுத்தி அவர்கள் மீதே மசோதா அதிக கவனம் செலுத்துகிறது.

ஆன்லைன் பண விளையாட்டுகள் தொடர்பான விதிமீறல்களில் மீண்டும் மீண்டும் தண்டனை பெறும் நபர்களுக்கு 3-5 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்படும் உள்ளிட்ட அம்சங்கள் அவற்றில் இடம்பெற்றுள்ளன. இந்த மசோதா, ஆன்லைனில் பணத்தை இழக்கச் செய்யும் விளையாட்டுகளுக்கும் இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆன்லைனில் ஒன்றாக சேர்ந்து ஒரு குழுவாக விளையாடும் விளையாட்டுகளுக்கும் இடையே தெளிவான வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. அதே சமயம், திறன் வளர்க்கும் விளையாட்டுகள், வாய்ப்பு சார்ந்த விளையாட்டுகள் என பணம் சார்ந்த எந்த விளையாட்டுகளுக்கும் இந்த மசோதாவில் விதிவிலக்குகள் கிடையாது.

* பல கோடி பணம் கொட்டும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தான் பல ஆன்லைன் கேம் செயலிகள் செயல்படுகின்றன.

* இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்களாக இத்தகைய பேன்டஸி கேம் செயலிகள் இருக்கின்றன. இந்த மசோதாவால் அந்நிறுவனங்களின் வருவாய் கடுமையாக பாதிக்கும்.

* இந்தியாவில் மொத்தம் 4 லட்சம் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ.31 ஆயிரம் கோடி. 2029ல் இவற்றின் மதிப்பு ரூ.80 ஆயிரம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 86 சதவீதம் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் பணம் வைத்து விளையாடும் கேம்கள்.

* கேமிங் துறைக்கு மரண அடி

இந்த மசோதா ஆன்லைன் கேமிங் துறைக்கு ஏற்பட்ட மரண அடி என இந்திய ஆன்லைன் கேமிங் கூட்டமைப்புகள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளன. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் ஸ்கில் கேமிங் துறையானது ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புடையது. இது ஆண்டுக்கு ரூ.31,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவதுடன், ரூ.20,000 கோடிக்கும் மேல் நேரடி மற்றும் மறைமுக வரிகளை அரசுக்கு செலுத்துகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதோடு கேமிங் துறையில் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் பாதிப்பும் உண்டு என்கின்றனர் இத்துறையினர். மேலும் வெளிநாட்டின் சூதாட்ட தளங்களுக்கு மக்கள் மாறுவார்கள் என்பதால் தகவல் கசிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்றும் வலியுறுத்துகின்றனர். இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு துறையில் சுமார் 20 லட்சம் இளைஞர்கள் ேவலை பார்ப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.