லோக்சபாவில் கேள்வி எழுப்ப பணம் வாங்கிய வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையை எதிர்த்து திரிணாமுல் எம்பி மனு
புதுடெல்லி: பணத்திற்காகக் கேள்வி எழுப்பிய வழக்கில், சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லோக்பால் அளித்த அனுமதியை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியாக இருந்த மஹுவா மொய்த்ரா, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பணம் மற்றும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு, அவருக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியதாக பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ரா தனது மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற லாகின் விவரங்களை ஹிராநந்தானியுடன் பகிர்ந்து கொண்டதை ஒப்புக்கொண்ட மொய்த்ரா, லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு அமைப்பான லோக்பால், கடந்த 12ம் தேதி சிபிஐக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில், லோக்பாலின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மஹுவா மொய்த்ரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘எனது தரப்பு வாதங்களையும், எழுத்துப்பூர்வமான விளக்கங்களையும் கருத்தில் கொள்ளாமல், இயற்கை நீதிக்கு முரணாக லோக்பால் செயல்பட்டுள்ளது.
சிபிஐயின் செயல்பாடுகள் வெறும் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ போல இருக்கிறது. எனது மனு மீது தீர்ப்பு வரும் வரை லோக்பால் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளையும் எடுக்க சிபிஐக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார். இந்த மனு, விரைவில் டெல்லி உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.


