புதுடெல்லி: இந்தியாவில் ஏற்கனவே 540 சமூக வானொலி நிலையங்கள் உள்ளன. இவை கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் போன்ற லாபநோக்கமற்ற நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. மேலும் சில பள்ளிகள் கல்வியை அடிப்படையாக கொண்ட சமூக வானொலியை நடத்தி வருகின்றன. அந்த வகையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உதவுவதற்காக சமூக வானொலியை தொடங்க முடிவு செய்துள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ வௌியிட்ட அறிவிப்பில், “சமூக வானொலியை தொடங்கும் திட்டத்தை வாரியத்தின் நிர்வாகக்குழு அங்கீகரித்துள்ளது. இதற்கான உரிம விண்ணப்பத்தை தயாரித்து செயலாக்குவது குறித்து அனைவரிடமும் கருத்து கேட்க ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும். உரிமம் பெற்ற பின்னர் சமூக வானொலியில் இடம்பெறும் உள்ளடக்கங்கள் குறித்து முடிவு செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.