உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவிக்கு 4,398 பேர் விண்ணப்பம்: ஆட்சியர் தலைமையிலான குழு விரைவில் பரிசீலனை
சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவிக்கு 4,398 பேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தமிழக சட்டப்பேரவையில் ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புற ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளி ஒருவரை நியமன உறுப்பினர்களாக நியமனம் சட்டமுன்வடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது.
அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சிகளை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி மன்றத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி, நகர் மன்றத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி, உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு மாற்றுத்திறனாளி உறுப்பினரை நியமிப்பது சட்டமாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 13,357 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது, உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 650, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2,984 மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
அந்தவகையில், முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக இணைவதற்கு விண்ணப்பம் கடந்த மாதம் 1ம் தேதி முதல் பெறப்பட்டு வந்தன. மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்பட்டன. மேலும், படிவங்கள் நேரில் மற்றும் இணையதளம் வாயிலாக அனுப்பப்பட்டு கடந்த மாதம் 17ம் தேதி வரை பெறப்பட்டன. இந்நிலையில் நியமன பதவிக்கு எதிர்பார்த்ததை விட அதிகப்படியான விண்ணப்பம் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் முதல்கட்டமாக 9 மாவட்டங்களில் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக, சில கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பதாரர்களை உள்ளூர் அதிகாரிகள் ஊக்குவிக்க வேண்டியிருந்தது. மாற்றுத்திறனாளிகள் செயல்படும் இடங்களில் நல்ல வரவேற்பு என்பது கிடைத்தது. இதன் காரணமாக எதிர்பார்த்த எண்ணிக்கையை காட்டிலும் 4,398 பேர் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதை ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட குழு பரிசீலனை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.