Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல் முறை கடன் வாங்குவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமல்ல: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: வங்கி, நிதி நிறுவனங்களில் முதல் முறையாக கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல எனவும், சிபில் ஸ்கோர் இல்லை எனக் காரணம் காட்டி அவர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் மறுக்கக் கூடாது எனவும் நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள், தங்கள் வருவாய், சொத்து விவரங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

மாதச் சம்பளம் வாங்குவோராக இருந்தால் சம்பளச் சான்றும் தொழில் செய்பவர்களாக இருந்தால் வருமான வரி ரிட்டர்ன் அல்லது இதர வருவாய் ஆதாரங்களை வழங்க வேண்டும். இது எல்லாவற்றுக்கும் மேலாக, விண்ணப்பதாரர் கோரும் கடனை அவரால் திருப்பிச் செலுத்த முடியுமா? தகுதியானவர்தானா? என்பன உள்ளிட்ட முடிவுகளை, பெரும்பாலும், சிபில் ஸ்கோர் அடிப்படையில் தான் வங்கி, நிதி நிறுவனங்கள் எடுக்கின்றன.

சிபில் ஸ்கோர் என்பது, தனிநபரின் கடன் தகுதியை வரையறை செய்யும் முக்கிய அளவுகோலாகப் பின்பற்றப்படுகிறது. 300 முதல் 900 வரை மதிப்பு வழங்கப்படும்.. இதில் 750 அல்லது அதற்கு மேல் சிபில் ஸ்கோர் இருந்தால் கேட்ட கடன் கிடைத்து விடும். 550க்கு மேல் இருந்தால்தான் விண்ணப்பம் பரிசீலனைக்கே செல்லும். சில நிறுவனங்கள் 650 முதல் 750க்குள் இருந்தாலும் கடன் வழங்குகின்றன. ஏற்கனவே கடன் வாங்கி முறையாகத் திருப்பிச் செலுத்தியவர்களுக்கு சிபில் ஸ்கோர் இருக்கும். முதல் முறை கடன் கோரி விண்ணப்பிப்போருக்கு சிபில் ஸ்கோர் இருப்பதில்லை.

இவர்களில் சிபில் ஸ்கோர் பூஜ்யமாகக் கூட இருப்பதுண்டு. எனவே, இதனைக் காரணம் காட்டி வங்கிகள் கடன் வழங்க மறுத்து விடுகின்றன. இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிதியமைச்சகம் அளித்த விளக்கத்தில், முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல எனத் தெரிவித்துள்ளது. மக்களவையில் இதுதொடர்பாக ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், ‘‘புதிதாக கடன் கேட்டு விண்ணப்பம் செய்வோருக்கு, இதற்கு முன்பு கடன் வாங்கி திருப்பிச் செலுத்தியதற்கான தரவுகள் (சிபில் ஸ்கோர்) இல்லை என்பதற்காக அவர்களுக்கு கடன் வழங்க மறுக்கக் கூடாது என, ரிசர்வ் வங்கி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

முதல் முறை கடன் வாங்குவோருக்கு இது பொருந்தும். எனவே இதனை காரணம் காட்டி கடன் வழங்க வங்கிகள் மறுக்க முடியாது. அரசின் கட்டுப்பாட்டில் அல்லாத கடன் வழங்கும் சூழலில், பெரும்பாலான கடன் நிறுவனங்கள் தங்கள் நிர்வாகக்குழு கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை கடைப்பிடிக்கின்றன. அதில், கடன் வழங்க முடிவு செய்வதற்கான பல்வேறு கூறுகளில் சிபில் ஸ்கோரும் ஒன்றாக உள்ளது’’, எனத் தெரிவித்துள்ளார். நிதியமைச்சக தரப்பில் இருந்து இப்படியொரு விளக்கம் அளிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

சிபில் ஸ்கோர் இல்லாவிட்டாலும் கூட, கடன் வழங்குவதற்கு முன்பு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள், விண்ணப்பதாரர் இதற்கு முன்பு கடன் வாங்கி முறையாக திருப்பி செலுத்தியிருக்கிறாரா?, செட்டில் மென்ட் அல்லது கடன் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதா? கடன் தவணையை செலுத்தத் தவறிய பிறகு தள்ளுபடி அல்லது ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளதா என ஆராயுமாறும் நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், கிரெடிட் ஸ்கோர் வழங்கும் நிறுவனங்கள், தனிநபரின் கடன் அறிக்கைகளை வழங்க அதிகபட்சமாக நூறு ரூபாய் வரை மட்டுமே பெற வேண்டும் என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியின் 2016ம் ஆண்டு சுற்றறிக்கையின்படி, கிரெடிட் ஸ்கோர் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு கடன் அறிக்கையை இலவசமாக வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

* தனிநபரின் கடன் தகுதியை வரையறை செய்யும் முக்கிய அளவுகோலாக சிபில் ஸ்கோர் உள்ளது.

* முதல் முறை கடன் கோரி விண்ணப்பிப்போருக்கு சிபில் ஸ்கோர் இருப்பதில்லை. இவர்களது சிபில் ஸ்கோர் பூஜ்யமாகக் கூட இருப்பதுண்டு. இவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுத்து விடுவதாக கூறப்படுகிறது.