Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

8 பந்தில் 32 ரன் விளாசல்: ரஷித் கானுக்கு எதிராக லிவிங்ஸ்டன் உலக சாதனை

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் லியாம் லிவிங்ஸ்டன், தனது அதிரடி பேட்டிங்கால் உலக கிரிக்கெட்டில் ஒரு பிரம்மாண்டமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் மன்னனாக வலம் வரும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானுக்கு எதிராக, இதுவரை எந்த ஒரு வீரரும் செய்யாத சாதனையை படைத்து, கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் லியாம் லிவிங்ஸ்டன். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘‘தி ஹன்ட்ரட்’’ தொடரின் ஒரு பகுதியாக, பிர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் மற்றும் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், பிர்மிங்ஹாம் அணிக்காக விளையாடிய லிவிங்ஸ்டன், ரஷித் கான் வீசிய 8 பந்துகளை எதிர்கொண்டு 32 ரன்களை விளாசினார். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 200 ரன்களை கடந்த உலகின் முதல் மற்றும் ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.

இங்கிலாந்து அணிக்காக ஏற்கனவே அதிவேக டி20 சதம் (42 பந்துகள்) மற்றும் அதிவேக அரைசதம் (17 பந்துகள்) போன்ற சாதனைகளை தன்வசம் வைத்துள்ள லிவிங்ஸ்டன், தற்போது இந்த புதிய உலக சாதனையின் மூலம் தனது மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லைப் பதித்துள்ளார். ரன்களில் மட்டுமல்ல, சிக்ஸர் விளாசுவதிலும் ரஷித் கானுக்கு எதிராக லிவிங்ஸ்டன்தான் முதலிடத்தில் உள்ளார். ரஷித் கான் பந்துவீச்சில் இதுவரை 21 சிக்ஸர்களை விளாசி, இந்த பட்டியலிலும் மற்ற வீரர்களை விட வெகுதூரம் முன்னிலையில் இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சாளருக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த ஒட்டுமொத்த டி20 சாதனையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் தன்வசம் வைத்துள்ளார். அவர் தனது சக நாட்டு வீரரான டுவைன் பிராவோவிற்கு எதிராக 345 ரன்கள் குவித்துள்ளார்.

அதேபோல், ஒரு பந்துவீச்சாளருக்கு எதிராக அதிகபட்சமாக 30 சிக்ஸர்கள் அடித்த சாதனையும் ரசல் வசமே உள்ளது. இதுவும் பிராவோவிற்கு எதிராக செய்த சாதனை தான். இருப்பினும், ரஷித் கான் போன்ற ஒரு டாப்-கிளாஸ் சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக லியாம் லிவிங்ஸ்டன் இந்த சாதனையை படைத்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.