Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சின்ன அய்யாக்கு எதிராக இறுதி ஆயுதத்தை எடுக்கத் தயாராகும் பெரிய அய்யா பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலத்துக்காரர் விட்ட டோஸால் கடும் அப்செட்டில் இருக்காராமே மாஜி அமைச்சர் ஒருத்தர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் சேலத்துக்காரர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாம்.. இதனால் சேலத்துக்காரர் ஹேப்பியாக இருப்பார் என மாஜி அமைச்சர் மணியானவர் நினைச்சிருக்கார்.. இதன் மூலம் தனது செல்வாக்கு மேலும் உயரும் எனவும் ஆவலாக இருந்தாராம்.. ஆனால், உண்மையில் நிலைமை தலைகீழாக உள்ளதாம்..

கடலோர மாவட்டத்தில் உள்ள கட்சியின் தொண்டர்களை, மணியானவர் அரவணைத்து செல்வது இல்லையாம்.. இந்த விஷயம் சேலத்துக்காரரின் கவனத்துக்கு சென்றுள்ளது.. தொடர்ந்து, மணியானவரை அழைத்து, சேலத்துக்காரர் டோஸ் விட்டுள்ளார். இதனால் அவர் கடும் அப்செட்டில் இருந்து வர்றாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வீடு கேட்டு மனு செய்த கணவனை இழந்த பெண்ணை தாலுகா தலைமை அதிகாரி கர்ப்பிணி ஆக்கின செய்தி தான் பரபரப்பு பேச்சா இருக்காமே எங்க..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘குயின்பேட்டை மாவட்டத்துல கோணம் பாதியான தாலுகாவுல தலைமை அதிகாரியா இருக்குறது திருப்பதி சாமி பெயர் கொண்டவரு.. இவர்கிட்ட கணவனை இழந்த பெண் ஒருவரு, வீடு கேட்டு மனு கொடுத்தாராம்.. அதற்கு அவர் விசாரணைக்கு வரவழைத்து அந்த பெண்ணிடம் ஆதரவாக பேசி வேலை வாங்கி தருவதாகவும் ஆசைவார்த்தை கூறி, தனிமையில சந்திக்கணும்னு சொல்லியிருக்காரு.. இதனால அந்த பெண் கர்ப்பமே ஆயிட்டாங்களாம்.. அதை மாத்திரை கொடுத்து கலைக்கவும் செஞ்சிட்டாராம்..

இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண் தனது உண்மையான பெயரை சொல்லாமல் கோணம் நகராட்சி முகவரியில் இருந்து சென்னைக்கு புகார் அனுப்பியிருக்காங்க.. இந்த புகார் சம்பந்தமாக வட்டாரத்தில் பேசிய தகவல் கசிந்து போயிருக்குது.. இதுக்கு அந்த தலைமை அதிகாரி சொல்லியிருக்காரு, நான் 2வது முறையாக இங்க பணிபுரிவதால எனது துறையில் இருக்குறவங்க எனக்கு எதிராக செயல்படுறாங்க.. இது ஒரு மொட்டை பெட்டிஷனாக இருக்கும்னு கூலா... சொல்றாராம்..

இந்த புகார் பெட்டிஷன் மேட்டர் தான் கோணம் பாதியான ஏரியாவுல இருக்குற வருவாய்த்துறை டிபார்ட்மெண்ட் முழுவதுமாக பரபரப்பு பேச்சாக இருக்குது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மகனுக்கு எதிராக இறுதியான ஆயுதம் ஒன்றை தைலாபுரத்துக்காரர் எடுக்கப் போறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் விவகாரம் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லாத நிலையில்தான் இருக்குதாம்.. நிறுவனரை முற்றிலும் ஓரம் கட்டியதால்தான் அவர் கொதித்து எழுந்தாராம்..

அதே நேரத்தில் தந்தையின் கேள்விக்கு மகனின் நேரடி பதில் எதுவுமே இல்லையாம்.. தந்தை பொதுக்குழுவை அறிவித்த நிலையில், மகனும் பொதுக்குழுவை கூட்டி அனைத்து பவரையும் பெற்றுக்கிட்டாராம்.. அதே நேரத்தில் தந்தையும் மகளிர் மாநாட்டை நடத்தி சிறிய அளவிலான அதிகாரத்தை பெற்றிருந்தாலும், இன்னும் நாலு நாளில் அவரும் ஒரு பொதுக்குழுவை கூட்டியிருக்காராம்.. இதற்கான அழைப்பிதழை அனைவருக்கும் அனுப்பியுள்ள நிலையில், அக்குழுவின் மூலம் அனைத்து பவரையும் அவரும் பெறப்போகிறாராம்..

யாருடன் கூட்டணி அமைப்பது, வெற்றி பெறுவதற்கான தொகுதிகள் எவை, எத்தனை சீட்டுகளை பெறுவது போன்ற அனைத்து பவரையும் அவரிடம் வழங்கப்போறாங்களாம்.. ஒரே கட்சியில் இருவரும் தனித்தனி பவரைப்பெறும் நிலையில் யாரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தப்போகிறார்கள் என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்திருக்காம்.. குறிப்பாக மகன் மலராத கட்சியோடு சேருவதற்கு ரொம்பவே ஆவலாக இருக்காராம்.. ஆனால் தந்தையோ இலைக்கட்சியுடன் சேரலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க..

ரெண்டுபேருமே தேர்தல் பேச்சுவார்த்தையின்போது ஒரே டீமிடம் பேசுவாங்களாம்.. ஒருவர் இலைக்கட்சி கொடுப்பதை வாங்கிக்குவாராம்.. இன்னொருவர் மலராத கட்சி கொடுப்பதை பெற்றுக்கொள்வாராம்.. இப்படியே நாங்கள் தேர்தலை சந்திக்கப்போறோமுன்னு கட்சிக்காரங்க சிரிச்சிக்கிட்டே சொல்றாங்க.. அதே நேரத்தில் மகனின் சட்டமிரட்டல் தந்தைக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்காம்.. தனக்கு எதிராக பொதுக்குழுவை கூட்டியது, தன்னைத்தானே தலைவர் என்று கூறிக்கொள்வதை இவரால் ஏற்றுக்கொள்ளவே முடியலையாம்.. இறுதியான ஆயுதம் ஒன்றை தந்தை எடுத்திருக்காராம்..

அதுதான் கட்சியில் இருந்தே கல்தா கொடுப்பது. அதற்கு முன்பாக விளக்கம் கேட்டுவிட்டு, கடுமையான முடிவை எடுக்கப்போவதாக கட்சிக்காரங்க கிசுகிசுக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேனிக்காரருக்கு மலராத கட்சியின் டெல்லி பிரதிநிதி ஒருவரை சந்திக்க வந்த அழைப்பை கேட்டு ஆதரவு 80 மா.செ.க்களும் கொதிச்சுட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சியின் கூட்டணியில் இருந்து தேனிக்காரர் வெளியே வந்ததை அவரது கட்சிக்காரர்களால் கூட இன்னும் நம்ப முடியலையாம்..

எட்டு ஆண்டுகளாக பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டிருந்தவருக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது என்பதுதான் ஒரே கேள்வியாக இருக்குதாம்.. இதனால் அவர்கள் ரொம்பவே மகிழ்ச்சியா வேற இருக்காங்களாம்.. அதே நேரத்தில் இலைக்கட்சி தலைவரை மிரட்டுவதற்காகவே தேனிக்காரரை மலராத கட்சியின் தலைமை கைக்குள் வச்சிருந்ததாம்.. இலைக்கட்சி தலைவர் சொல் பேச்சை கேட்கவில்லை என்பதால், தேனிக்காரரின் கையை தூக்கிப்பிடிச்சு கிட்டே இருந்தாங்களாம்..

ஆனால் பிரதமரை பார்க்க கூட முடியாத நிலை வந்தவுடன் தான் தேனிக்காரருக்கு ரோஷம் அதிகமாகிப்போச்சாம்.. இந்நிலையில் மலராத கட்சியின் டெல்லி பிரதிநிதி ஒருவரை சந்திக்க தேனிக்காரருக்கு அழைப்பு வந்துச்சாம்.. இதை கேள்விப்பட்டதும் தேனிக்காரரின் 80 மாவட்ட செயலாளர்களும் கொதிச்சு போனாங்களாம்.. இனிமேல் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தென் மாவட்டங்களில் நமக்கென செல்வாக்கு இருக்குது..

பலாப்பழத்தில் நின்று மூன்றரை லட்சம் ஓட்டு வாங்கினோம்.. அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு என வந்தால் பிரதமர் அல்லது உள்துறை என்ற ரெண்டுபேர் தான் வரவேண்டும். வந்தாலும் ஒருங்கிணைந்த இலைக்கட்சி என்ற ஒரே நோக்கத்தில் தான் இருக்கிறோம்... அதற்கு சம்மதம் என்றால் மட்டுமே பேச்சுவார்த்தை. இல்லை என்றால் தேனிக்காரரின் பின்னால் இருக்கும் ஒரு மா.செ. கூட செல்லமாட்டோம் என அடிச்சி சொல்லிட்டாங்களாம்...

இதனால முன்வைத்த காலை தேனிக்காரர் பின்வச்சிட்டாராம்.. மேலும் இலைக்கட்சியில் சேர்க்கவில்லை என்றால் இலைக்கட்சியை முடக்குவோமுன்னுன்னு மா.செ.க்கள் கொக்கரிக்காங்களாம்... ஆனால் தேனிக்காரரை நன்கறிந்தவர்கள் இனிமேல் மலராத கட்சியின் கூட்டணிக்குள் வர வாய்ப்பு மிகவும் குறைவுன்னு சொல்றாங்க... குக்கர் கட்சிக்காரங்களும் இதையே சொல்றாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.