சென்னை: செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற தலைப்பில் நடந்த இலக்கிய போட்டியில் வென்ற 34 பேருக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். செம்மொழியான தமிழ் மொழியைப் போற்றும் வகையிலும் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு செம்மொழி விருது வழங்கி வருகிறது. கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி செம்மொழி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது.
இத்தகைய செம்மொழிக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் விதமாகவும், தமிழ் தொண்டை போற்றும் வகையிலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் ”செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெறும் வகையில் கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன அதில், சொற்பொழிவுப் போட்டியில் 450 பேரும், கவிதைப் போட்டியில் 875 பேரும், வினாடி வினாப் போட்டியில் 1021 பேரும், அறநெறிக்கதைகள் போட்டியில் 1020 பேரும், என்னுள் இருக்கும் கலைஞர் போட்டியில் 920 பேருமாக மொத்தம் 4286 பேர் கலந்து கொண்டனர். இதில் 34 பேர் வெற்றி பெற்றவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் போட்டியில் வென்றவர்களுக்கு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்து, வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். நிகழச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜராம், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) பாஸ்கரன், ஊடக ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேல், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் மற்றும் ஊடக மைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.