பட்டியலின மக்கள் குறித்து அவதூறு பேச்சு அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு: போலீசாருக்கு எஸ்.சி-எஸ்.டி ஆணையம் உத்தரவு
சென்னை: மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன்படி, தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை குறித்து தனியார் தொலைக்காட்சியில் விவாதம் நடைபெற்றது.
அதில், அதிமுக செய்தி தொடர்பாளரும் ஐடி பிரிவு பொறுப்பாளருமான கோவை சத்யன் ‘வாக்காளர் தீவிர திருத்த நடவடிக்கை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை மட்டுமே பாதிக்கிறது என்று சொல்வது உண்மையல்ல. அரசு எப்போதெல்லாம் சட்டத்தை கொண்டு வருகின்றதோ அப்போதொல்லாம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் நாங்கள் ஒதுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம், நசுக்கப்பட்டோம் என்று கூச்சலிடுகிறார்கள்’ என்று பேசினார்.
கோவை சத்யன் தொலைக்காட்சி பொதுவழி விவாதத்தின்போது பேசியது நம் நாட்டில் வாழும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை இழிவுப்படுத்தும் வகையில் இருக்கிறது. எனவே, அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989ம் கீழ் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
  
  
  
   
