மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆந்திரா அரசு அதிரடி உத்தரவு: மாஜி எம்எல்ஏ உட்பட 3 பேர் மீண்டும் கைதாகின்றனர்
திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆட்சியின்போது நடந்த மதுபான ஊழல் வழக்கில் சந்திரகிரி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி, அவரது மகன் மோஹித் ரெட்டி, கேவிஎஸ் இன்ப்ரா எம்டி செவிரெட்டி லட்சுமி ஆகியோரின் பெயரில் உள்ள சொத்துக்கள், செவிரெட்டியின் மற்றொரு மகன் ஹர்ஷித் ரெட்டியின் சொத்துக்களை முடக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் முன்னாள் எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி குடும்பத்தினர் மதுபான ஊழல் மூலம் மது தொழிற்சாலைகளிடம் இருந்து பெற்ற கமிஷன்கள் மூலம் பெரும் சொத்துக்களை வாங்கி உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. செவிரெட்டி குடும்பத்தினர் ரூ.54.87 கோடியை கருப்புப் பணமாக மாற்றியுள்ளனர். இதன் மூலம் திருப்பதி, நெல்லூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் அதிகாரத்தின் ஆதரவுடன் மோசடி நில பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக சிஐடி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் ஊழல் மற்றும் குற்றத் தடுப்பு சட்டங்களின் பிரிவுகளின் கீழ் சொத்துகளை பறிமுதல் செய்து மேலும் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை உள்துறை முதன்மை செயலாளர் குமார் விஸ்வஜித் பிறப்பித்துள்ளார். இதனிடையே தனுஞ்சய ரெட்டி, கிருஷ்ணமோகன் ரெட்டி, பாலாஜி கோவிந்தப்பா ஆகியோருக்கு ஏசிபி (ஊழல் தடுப்பு) நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கடந்த மாதம் 3 பேரும் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த நிலையில், 3 பேரின் ஜாமீனை ரத்து செய்ய சிஐடி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 3 பேரின் இடைக்கால ஜாமீனை உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் 3 பேரும் மீண்டும் கைது செய்யப்பட உள்ளனர்.


