மதுபான பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனையா? திடீர் சோதனை நடத்த வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறதா என்று திடீர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. சென்னை ஓட்டேரியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை ஒட்டிய பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாகவும் இரவு 10 மணிக்கு மேல் மது பானங்கள் விற்கப்படுவதாக கூறி தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடன் கூட்டு சேர்ந்து பார் உரிமம் பெற்றவர், விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நேரங்களில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்று வருகிறார்.
டாஸ்மாக் நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் மது பான கடைகளுடன் இணைந்த பார்களில் சட்ட விரோதமாக மது பானங்கள் விற்கப்படுகிறதா என்று திடீர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும். மனுதாரரின் புகார் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.

