Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முறையற்ற வாழ்க்கை முறையால் உயிருக்கு உலை வைக்கும் உயர் ரத்த அழுத்த நோய்: அலட்சியப் படுத்தினால் ஆபத்து; மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

* இந்தியா முழுவதும் 20 கோடி பேர் பாதிப்பு

* 2% பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை உடல் உழைப்பு இல்லாத பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் என்றும், உடல் உழைப்பு உள்ளவர்கள், ஏழை, எளிய மக்களுக்கு வராது என்றும் கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலை மாறி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடு இன்றி யாருக்கு வேண்டுமானாலும் இந்த ேநாய் வரும் என்ற நிலை உள்ளது. நமது வாழ்க்கை முறையில் நாம் செய்யும் தவறுகள் தான் நமக்கு நோய்கள் ஏற்பட அச்சாரமாக உள்ளது. சுகாதாரமான உணவு, சரியான நேரத்திற்கு சாப்பிடுவது, உறங்குவது, ஓய்வெடுப்பது, உடற்பயிற்சி என எதையும் கடைபிடிக்காமல் இருப்பதே மனிதர்களின் ஆயுட்காலம் குறைவதற்கு காரணமாக அமைகிறது.

மனிதனின் உடலில் உள்ள உறுப்புகளுக்கு வாய் இருந்தால் அது மனிதர்களை எப்படி திட்டி தீர்க்கும் என்பதற்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவே ஒரு சாட்சி. இரவு 12 மணிக்கு பிரியாணி சாப்பிட்டுவிட்டு ஒரு மணிக்கு தூங்க செல்வது, துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது, மதுப்பழக்கம், புகைப்பழக்கம், சரியான நேரத்திற்கு தூங்காமல் இருப்பது போன்ற பழக்கங்களை தவிர்த்தாலே உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற வியாதிகள் வராது.

பெரிய அளவில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை வந்தால் மட்டுமே நமக்கு உடல் மீது அக்கறை வருகிறது. அதன் பிறகுதான் தங்களது தவறை உணர்கின்றனர். அதற்கு முன்பு எவ்வளவு தான் சொன்னாலும் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

குறிப்பாக, உணவு விஷயத்தில் யாரும் பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை. சுவைக்கு தரும் முக்கியத்துவத்தை சுகாதாரத்திற்கு கொடுப்பது இல்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வணிக நிறுவனங்கள், விதவிதமான கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் வெளியிட்டு மனிதர்களை நோயாளியாக மாற்றி வருகின்றனர். இரவு 10 மணிக்கு ஒரு ஓட்டலில் சிக்கன் அதிக அளவில் விற்பனையாகாமல் தேங்கி விட்டது என்றால் உடனடியாக அந்த ஓட்டல் உரிமையாளர் ஆன்லைனில் உணவு டெலிவரி செயலிக்குள் சென்று, ஒரு கிரில் சிக்கன் வாங்கினால் சில்லி சிக்கன் இலவசம் என விளம்பரம் செய்கின்னர். அடுத்த சில மணி நேரத்தில் அந்த சிக்கன்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விடுகின்றன.

குப்பைக்கு போக வேண்டிய பொருட்கள் மனிதனின் உணவுக்குழாய்க்குள் சென்று விடுகின்றன. இவ்வாறு பலரும் அந்த ஆபர்களை தேடிப் பிடித்து தங்கள் வயிற்றை நிரப்புவார்கள். இவ்வாறு நேரம், காலம் பார்க்காமல் கண்டதையும் வாங்கி சாப்பிடும் நபர்கள் என்றைக்கு மருத்துவமனையில் சென்று படுக்கிறார்களோ அன்று தெரியும் தரமற்று உணவின் பாதிப்பு. அந்த வகையில் சமீப காலமாக சர்க்கரை நோய்க்கு அடுத்தபடியாக மக்களை அதிகம் பாதித்து வரும் ஒரு நோய் உயர் ரத்த அழுத்தம் எனப்படும் பி.பி., ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த நோய் இருந்தால், எண்ணெய், மசாலா உணவுகளை தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்க வேண்டும். ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்ட பலர், மாத்திரைகளை போட்டுக் கொண்டு தங்கள் இஷ்டத்திற்கு சாப்பிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு செய்வதால், அந்த நோய் பாதிப்பு அதிகரித்து ஒரு கட்டத்தில் உயிரை பறிக்கும் அபாயம் கொண்டது. சமீப காலமாக உயர் ரத்த அழுத்தத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக, ஐ.சி.எம்.ஆர் (இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரிசர்ச்) சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில், இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 20 கோடி மக்கள் உயர் ரதத அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 2 சதவீதம் பேர் மட்டுமே முறையான சிகிச்சை பெறுவதாகவும், மீதமுள்ளவர்கள் அதனை பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை எனவும் அந்த ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அவர்கள் கொடுத்துள்ள புள்ளி விவரம் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. கூடவே, உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க அல்லது வந்தவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து சில வழிமுறைகளையும் ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ளது.

அதில் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்க்க வேண்டும். பேக்கரி உணவை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். கார்பனேட் உள்ள குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உள்ளிட்ட வழிமுறைகளை அவர்கள் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி உள்ளனர்.

ஒரு நோய் வந்த பின்பு அதற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை போட்டுக் கொள்ள வேண்டுமா என மனிதர்கள் கேட்பது இயல்புதான். இது ஒருபுறம் இருக்க குறிப்பிட்ட நோய் வராமல் பார்த்துக் கொள்வது எவ்வாறு என்பதை மனிதர்கள் உணர வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்கள் நோய்களிலிருந்து விடுபடலாம்.

இந்த உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடும் முறைகள் குறித்து பெரம்பூரைச் சேர்ந்த சென் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது: நமது உடலில் இதயம் ஒரு குறிப்பிட்ட அளவு தான் ரத்தத்தை பம்ப் செய்யும். அந்த ரத்தம் உடலுக்கு தேவையான அனைத்து இடங்களுக்கும் செல்லும். இந்த பிரஷர் அளவு 120க்கு 80 என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். எப்போதெல்லாம் மனித உடலில் இதயத்தில் அதிக அளவில் ரத்தம் பம்ப் செய்து ரத்தம் உள்வாங்கி வெளியிடப்படுகிறதோ அப்போதெல்லாம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலர் இரவில் சரியாக தூங்க மாட்டார்கள். அவர்கள் சரியாக தூங்காத காரணத்தினால் உடலில் ஒரு விதமான அட்ரீனல் சுரப்பி சுரந்து அது இதயத்தில் ரத்தத்தின் அளவை அதிகரிக்க செய்கிறது. யார் இரவில் அதிகமாக கண் விழிதது இருக்கிறார்களோ அவர்களுக்கு அட்ர்னல் சுரப்பி அதிகமாக சுரக்கும்.

தற்போது, ஐ.டி துறையில் நிறைய இளைஞர்கள் இரவு முழுவதும் கண் விழித்து வேலை செய்கிறார்கள். பகல் நேரத்தில் கண்ட நேரத்தில் சாப்பிட்டுவிட்டு தூங்குகிறார்கள். அவர்களுக்கு இதயத்தில் ஒரு சீரான ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் அட்ரீனல் சுரப்பி அதிகமாக சுரந்து இதயத்தில் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது. இது காலப்போக்கில் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்த நோயாக மாறிவிடுகிறது. சிலருக்கு அவர்களது உடல் ஒருவித கட்டுப்பாட்டில் வந்துவிடும். உயர் ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தாலும் அதனை அவரது உடல் தாங்கிக் கொள்ளும். அதனால் அது பெரியதாக வெளியே தெரியாது. பொதுவாக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தலை வலி இருக்கும். பதற்றமாக இருப்பார்கள். இதயம் அதிகமாக துடிப்பது போன்று ஒரு உணர்வை அவர்கள் உணர்வார்கள். உடல் மயக்கமாக இருக்கும்.

இது போன்ற சில விஷயங்கள் இருப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்த நோயின் அறிகுறிகளாக இவை தென்படுகின்றன. இதை கவனிக்காமல் விட்டு விட்டால் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அதிக ரத்தம் சென்று ஸ்டோக் எனப்படும் ஒரு நிலை கூட வரலாம். நீண்ட நாட்களாக உயர் ரத்த அழுத்தம் உள்ள ஒருவர் அதனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் பல்வேறு இணை பிரச்னைகள் வரும். ஒவ்வொரு உறுப்புகளுக்கும் இவ்வளவுதான் ரத்தம் போக வேண்டும் என்ற ஒரு அளவு உண்டு. இதில் கிட்னிக்கு 24 மணி நேரத்தில் 180 லிட்டர் ரத்தம் செல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட அளவு தான் செல்ல வேண்டும் என்ற அளவு உள்ளது. அதை தாண்டி செல்லும்போது கிட்னி தாங்க முடியாமல் கிட்னி செயலிழப்பு ஏற்படுகிறது. இதற்கு அலட்சியம் தான் முக்கிய காரணம்‌.

உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் தாங்களாகவே சோடா வாங்கி குடிப்பது, லோ பிபி என்றால் சாக்லெட் வாயில் போட்டுக் கொள்வது போன்ற விஷயங்களை அந்த நேரத்திற்கு கையாண்டு விட்டு அதன் பிறகு அதனை கண்டுகொள்ள மாட்டார்கள். அவ்வாறு இருக்க கூடாது. தற்போது அரசாங்கத்தால் பல்வேறு விஷயங்கள் மருத்துவத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. மக்களை தேடி மருத்துவம் என்ற ஒரு திட்டம் வந்துள்ளது. அது ஒரு பயனுள்ள திட்டம். அதில் வீட்டிற்கு சென்று பி.பி., சுகர் உள்ளிட்டவற்றை சோதனை செய்கிறார்கள். இதன் மூலம் எளிதில் நமக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதா, இல்லையா என்பதை கண்டறிந்து கொள்ளலாம். அவ்வாறு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் மருத்துவர்களை அணுகி அதற்கு முறையான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரியை சேர்ந்த இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவ மருத்துவர் சந்தோஷ் சரவணன் கூறுகையில், ‘‘மனிதர்களிடம் உணவு சார்ந்த விஷயத்தில் விழிப்புணர்வு குறைந்து வருவதன் காரணமாகத்தான் இது போன்ற உயர் ரத்த அழுத்த நோய்கள் அனைவரையும் தாக்குகின்றன. தற்போது, பலருக்கு உடல் உழைப்பு கிடையாது. மன உளைச்சல் அதிகரித்துவிட்டது. இப்படி பல்வேறு பிரச்னைகளால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இந்த நோய் இருப்பது தெரியவந்தால், கண்டிப்பாக மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நமது உடல் உறுப்புகளில் ஒவ்வொன்றாக பாதிப்பை ஏற்படுத்தும். உயர் ரத்த அழுத்த நோய் வந்துவிட்டால் முதலில் அதற்கான தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொண்டு ரத்த அழுத்தத்தை குறைக்க வேண்டும். அதன் பிறகு வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஓட்டலில் சாப்பிடக் கூடாது, தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும் போன்ற விஷயங்களை படிப்படியாக மக்கள் பின்பற்றத் தொடங்கினார்கள் என்றால் படிப்படியாக உயர் ரத்த அழுத்தம் குறைந்து எளிதில் அவர்கள் வெளியே வந்து விடலாம். அந்த காலத்தில் நமது முன்னோர்கள் ஒரு விஷயத்தை சொல்வார்கள் கூழோ கஞ்சியோ வீட்டில் இருந்து எடுத்து வந்து சாப்பிட வேண்டும் எனக் கூறுவார்கள். அதனை அனைவரும் பின்பற்றினாலே பெரும்பாலான நோய்களிலிருந்து விடுபடலாம்,’’ என்றார்.

இரவில் நீண்ட நேரம் கண்விழிப்பது ஆபத்து

தற்போது உயர் ரத்த அழுத்தம் அதிகரித்து வருவதற்கு மனிதர்களின் வாழ்க்கை முறை இரவில் அதிக நேரம் கண்விழிப்பது உடலில் உள்ள ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பது போன்றவை காரணமாக அமைந்து விடுகிறது. ரத்த குழாயில் கொழுப்புகள் சேர சேர அது ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது. எனவே ரத்தத்தில் கொழுப்புகளை அதிகளவு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சீரான உடற்பயிற்சி செய்ய வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்க வேண்டும். உணவு உணவு பழக்க வழக்கத்தை முறை படுத்த வேண்டும். இதன்மூலம் உயர் ரத்த அழுத்த நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

எண்ணெய் உணவு தவிர்க்க வேண்டும்

உயர் ரத்த அழுத்தத்தை தெரிந்துகொள்ள மிகப் பெரிய அளவு செலவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்யலாம். தனியார் மருத்துவமனைகளில் ₹20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் வந்தவர்கள் அனைவருக்கும் கேட்கின்ற ஒரே கேள்வி. சாகும் வரை நாங்கள் மாத்திரை சாப்பிட வேண்டுமா என்பது தான். நோய் வந்தால் மாத்திரை சாப்பிட வேண்டும். இந்த மாத்திரையை நிறுத்துவதற்கு 2 வழிகள் உள்ளது. ஒன்று மருத்துவர்கள் கூறும் மருந்துகளை முறையாக கையாண்டு அதிலிருந்து வெளியே வருவது. 2வது வழிமுறை என்பது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். வாழ்க்கை முறையை மாற்றுவது என்றால் ஊறுகாய், சிப்ஸ், அப்பளம் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

வாழ்க்கை முறையில் மாற்றம்

நோய் பாதிப்பு உள்ள பலர் மாத்திரை எடுத்துக் கொள்ள தயங்குகிறார்கள். காரணம் மாத்திரையை எடுத்து கொண்டால் காலம் முழுவதும் மாத்திரையை சாப்பிட வேண்டிய சூழல் வரும் என கூறுகின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை. மாத்திரையை எடுத்துக் கொள்ளும்போது கூடவே அவரது வாழ்க்கை முறையை மற்றும் உணவு முறையை மாற்றிக் கொண்டால், படிப்படியாக உயர் ரத்த அழுத்தம் குறைந்து விடும். அதன் பிறகு ரத்த அழுத்தத்தின் அளவு குறைய தொடங்கினால் மருத்துவர்கள் படிப்படியாக மாத்திரையை நிறுத்தி விடுவார்கள். ஆனால் பெரும்பாலான நபர்கள் மாத்திரை போட்டு விட்டோம் என நினைத்து உணவு முறையில் மாற்றத்தை கொண்டு வருவது கிடையாது. இதனால் தான் காலம் முழுவதும் அவர்கள் மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு வந்து விடுகிறார்கள்.

தடுக்கும் வழிமுறைகள்

இரவில் கண்டிப்பாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். கொழுப்பை குறைக்க வேண்டும். உணவில் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். புரோட்டின் உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். இவற்றையெல்லாம் சரியாக செய்தால் கண்டிப்பாக படிப்படியாக மாத்திரைகளில் இருந்து விடுபடலாம். உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை மாற்றினால் மாத்திரைகளை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

தொடர்ச்சியாக ஓட்டலில் சாப்பிடுபவரா நீங்கள்?

மூன்று வேளையும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்பதை விட பசித்தால் தான் சாப்பிட வேண்டும், என்ற நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சாப்பிடவில்லை என்றால் வயிற்றில் புண் வரும் என கூறுகிறார்கள். ஆனால் கண்டதையும் சாப்பிட்டால் வயிறு என்ன ஆகும் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பது கிடையாது. பெரும்பாலான மக்கள் தற்போது ஓட்டல்களில் அதிகளவில் சாப்பிட தொடங்கிவிட்டனர்.தொடர்ச்சியாக ஓட்டலில் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்த நோய் வரும் என்பதை இன்றைய தலைமுறை இளைஞர்கள் உணர வேண்டும். தற்போதுள்ள பெரும்பாலான பெண்களுக்கு எண்ெணய் இல்லாமல் சமைக்க தெரியாது. தற்போதுள்ள எண்ணெய்களில் அதிக அளவு கலப்படம் வந்துவிட்டது. அதனால் ஓட்டலில் தரமான எண்ணெய்கள் அதிக அளவில் பயன்படுத்துவது கிடையாது. எனவே, ஓட்டல் உணவுகளை தொடர்ந்து சாப்பிட கூடாது.

ஆலோசனை அவசியம்

இப்போது பல யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வரும் செய்திகளை வைத்து உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்துகளை தயார் செய்து பலர் சாப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் எதனையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. பொதுவாக சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் என்பது ஒருவித நோய் கிடையாது. நாம் உடலை சரியாக வைத்துக் கொள்ளவில்லை என்பதை நமக்கு அது உணர்த்துகிறது. அதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை மாற்றிவிட்டால் அந்த நோயிலிருந்து நாம் விடுபட்டு விடலாம். அதே நேரம் அலட்சியம் செய்தால் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும்.