தேனி: மது அருந்த பணம் தராததால் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (62). இவரது மனைவி அம்சக்கொடி. கடந்த 2022ம் ஆண்டு மனைவியிடம் மது குடிப்பதற்கு கணேசன் பணம் கேட்டுள்ளார். பணம் தராததால் ஆத்திரமடைந்த கணேசன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை வீட்டிற்குள் வைத்துள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிந்து கணேசனை கைது செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி அனுராதா முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் கணேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் அபராத தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
Advertisement