*தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு
தென்காசி : நகைக்காக தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்ணை காரில் வைத்து கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் ஊரிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையோரம் கடந்த 15.2.2013 அன்று சாக்கு மூடையில் அழுகிய நிலையில் உடல் கிடந்துள்ளது.
தகவலறிந்த நெற்கட்டும்செவல் கிராம நிர்வாக அதிகாரி வைதேகி, புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சென்று சாக்கு மூடையை பிரித்து பார்த்தபோது உள்ளே இளம்பெண் பிணமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரித்த போது அந்தப் பெண் சங்கரன்கோவில் குருக்கள்பட்டி அருகேயுள்ள சூரங்குடி வடக்கு தெருவைச் சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது மனைவி வன்னித்தாய் என்ற வசந்தா (24) என்பது தெரியவந்தது.
இவருக்கும் வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரி வஉசி நகர் 9வது தெருவை சேர்ந்த குருக்கள்பட்டி மேல தெருவில் வசித்து வந்த முத்துபாண்டி மகன் மணிகண்டராஜா (42) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. மணிகண்டராஜா சொந்தமாக ஆம்னி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்த வண்டியில் வசந்தா சென்று வந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மணிகண்ட ராஜாவிற்கு கடன் பிரச்சனை காரணமாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 14.2.2013 அன்று வசந்தாவை மணிகண்ட ராஜா ஆம்னி வேனில் அழைத்துச் சென்றுள்ளார். அவரது கழுத்தில் 11 பவுன் எடை உள்ள தங்கசங்கிலி கிடந்துள்ளது. தனக்கு பணத்தேவை இருந்ததால் வசந்தாவை காரில் வைத்து கத்தியால் குத்திக்கொலை செய்து பிணத்தை சாக்கில் வைத்து கட்டி சாலையோரம் வீசிவிட்டு நகையை எடுத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்ட ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜவேலு, குற்றவாளி மணிகண்ட ராஜாவிற்கு ஆயுள் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.