லீஜ் சிட்டி: கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் நேற்று, லைஸ்டென்ஸ்டீன் அணிக்கு எதிரான போட்டியில் பெல்ஜியம் அணி 7 கோல்கள் அடித்து அபார வெற்றி பெற்று உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் 2026 ஜூனில், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெற உள்ளன. போட்டிகளை நடத்தும் இந்த நாடுகளின் அணிகள் நேரடி தகுதி பெற்றுள்ளன. மற்ற அணிகளை தேர்ந்தெடுப்பதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. பெல்ஜியம் நாட்டின் லீஜ் சிட்டியில் நேற்று நடந்த போட்டியில் லைஸ்டென்ஸ்டீன் அணிக்கு எதிராக பெல்ஜியம் அணி மோதியது. போட்டியின் துவக்கம் முதல் பந்தை தங்கள் முழு கட்டுப்பாட்டில் பெல்ஜியம் அணி வீரர்கள் வைத்திருந்தனர். பெல்ஜியம் அணியின் ஜெரீமி டோகு, சார்லஸ் டி கெடெலேர் தலா 2 கோலடித்து அசத்தினர்.
மேலும், ஹான்ஸ் வானகேன், பிரான்டன் மெஷெல், அலெக்சிஸ் ஸீல்மாக்கர்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் போட்டனர். மாறாக, லைஸ்டென்ஸ்டீன் அணியால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. இதனால், 7-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி அபார வெற்றி பெற்று உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ஆட தகுதி பெற்றது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஸ்பெயின் அணி, துருக்கி அணியுடனான போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தபோதும், இ பிரிவில் முதலிடம் பிடித்ததால் உலகக் கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெற்றது. மேலும், நேற்றைய போட்டிகளில் கிடைத்த முடிவுகள் அடிப்படையில், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, பனாமா, குராகவோ ஆகிய நாடுகளும் உலகக் கோப்பை போட்டிகளில் ஆட தகுதி பெற்றன.
* கால்பந்தில் கலக்கும் குட்டி நாடு குராகவோ
வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா, கரீபியன் நாடுகளின் கால்பந்து கூட்டமைப்பான கான்காகாஃப்பின் கீழ் உள்ள 41 உறுப்பு நாடுகளில் ஜமைக்கா, குராகவோ உள்ளன. இவை இடையிலான கால்பந்து போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் நேற்று நடந்தது. கடைசி வரை இரு அணிகளும் கோல் போட முடியாததால் இப்போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து, குரூப் பி-யில் 6 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்ற குராகவோ அணி முதலிடம் பிடித்து உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ஆட தகுதி பெற்றுள்ளது. கரீபியன் நாடுகளில் ஒன்றான குராகவோவின் மக்கள் தொகை ஒன்றரை லட்சம் மட்டுமே. இந்த நாட்டின் பரப்பளவு வெறும் 444 சதுர கி.மீ. இதன் மூலம், உலகக் கோப்பை போட்டிகளில் ஆட தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு என்ற பெருமையை குராகவோ பெற்றுள்ளது.


