Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பொய் பொய்யா உருட்டும் சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாங்கனி ஜெயில்ல நடந்த ஆய்வுக்கு பின் பல மணி நேரம் கணக்கு பார்த்தும் ஒன்றும் புரியாததால எல்லா கணக்கும் சூப்பர்னு சொல்லிட்டாங்களாமே அதிகாரிங்க..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மத்திய ஜெயிலிலும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருக்காங்க.. இவர்களுக்கு வாரத்திற்கு ரெண்டு நாள் கோழிக்கறி வழங்கப்பட்டுவருதாம்.. ஒரு நபருக்கு 150 கிராம் கறி வீதம் வழங்கப்படுதாம்... இதுவரை வெளியில் இருந்துதான் சிக்கன் வாங்கினாங்களாம்...

ஆனால் ஜெயிலின் உச்சஆபீசரின் எண்ணத்தில் கைதிகளே கோழிப்பண்ணையை தொடங்கி வளர்க்கலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்திட்டாராம்.. கோழி வளர்ப்பில் தண்டனை கைதிகள் ஈடுபடுத்தப்படுறாங்களாம்.. இதன் மூலம் வெளிச்சந்தையில் இருந்து கறி வாங்குவது நிறுத்தப்பட்டு, கைதிகள் வளர்க்கும் கோழிக்கறி வாரத்திற்கு ரெண்டு நாட்கள் வழங்கப்படுதாம்.. இதன்மூலம் கிடைக்கும் லாபத்தில் தான் கைதிகளுக்கு சம்பளம் வழங்கப்படுதாம்..

இதனால கைதிகள் ரொம்பவே ஹேப்பியா இருப்பதாக சொல்றாங்க.. பண புழக்கம் அதிகமாக இருக்கும் அதே வேளையில் உயரதிகாரிக்கு கொஞ்சம் சந்தேகம் வலுத்திருக்காம்.. இப்படிதான் கைதிகளுக்கு வேலை வழங்குறேன்னு தூங்கா நகர ஜெயிலில் பலகோடிகளை அதிகாரிகள் ஏப்பம் விட்டுட்டாங்களாம்.. இந்த பணம் நிலமாகவும், நகையாகவும், முதலீடாகவும் உலாவிக்கிட்டு இருப்பதாக சொல்றாங்க.. இந்த பணத்தை மீட்பது என்பது யானை வாய்க்குள் சென்ற கரும்பு கதை தானாம்.. ஆனால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை பாய்ந்துள்ள நிலையில், விஜிலென்சும் வழக்கு தொடர்ந்திருக்காம்...

இதனால சென்னை உச்சஅதிகாரிகள் ஒவ்வொரு ஜெயிலையும் கண்காணிக்கும் டிஐஜிக்களை அனுப்பி அவ்வப்போது ஆய்வு செய்ய சொல்லியிருக்காங்களாம்.. இதன்படி முதற்கட்டமா மாங்கனி ஜெயிலுக்கு கோவை அதிகாரி வந்து ஆய்வு செஞ்சாங்களாம்.. பலமணி நேரமா கணக்கு பார்த்ததில் ஒன்றுமே புரியலையாம்... ஆனால் எல்லா கணக்குகளும் சூப்பராக இருப்பதாக ஜெயில் அதிகாரிகள் சொல்றாங்க.. ஆனால் முழுவிவரமும் பின்னாடி தான் தெரியுமாம்.. அதே நேரத்துல கோழிக்கறியை வியாபாரம் செய்ய வார்டன்களை பயன்படுத்துவதை வார்டன்கள் மனம் ஏத்துக்கலையாம்...

கவுரவமான வேலைக்கு வந்தோமா, கறிக்கோழி வியாபாரம் செய்ய வந்தோமான்னும் கேள்வி கேட்குறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கிராமத்து முகத்த காட்டி பொய் சொன்னா நம்புவாங்கன்னு இலைக்கட்சி தலைவர் பொய் பொய்யா சொல்றாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவர் ரெண்டு நாளாக அவரோட புனித பயணத்தை தர்மபுரியில் தொடங்கி நடத்திக்கிட்டிருக்காரு.. சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்களை கூட்டத்திற்கு கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொன்னதால மாங்கனி மாவட்ட தொண்டர்கள் அலைஅலையாக போய் குவிந்தாங்களாம்..

அதே நேரத்துல கரூர் துயர சம்பவத்தை சொல்லி இலைக்கட்சி தலைவர் ஆதாயம் தேடப்பார்க்குறாராம்.. இலைக்கட்சி தலைவரை பொறுத்தவரை அவருக்கு இருப்பது கிராமத்து முகமாம்.. ஒரு சமாச்சாரத்தை அப்பாவியா சொன்னா மக்கள் நம்புவாங்கன்னு நினைக்கிறாராம்.. இதனால் தன்னால் முடிந்த வரையில் அப்பாவி வாயால் பொய்களை அள்ளிவிடுவதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. இலைக்கட்சி ஆட்சியில் தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடுநடத்தி 13 பேரை கொன்னாங்க.. அந்நேரத்தில் இதுபோன்ற சம்பவம் எனக்கு தெரியாதுன்னு சொன்னவர் தான் இலைக்கட்சி தலைவர்..

சாத்தான்குளத்தில் தந்தை, மகனை போலீஸ் ஸ்டேசனுக்குள்ளாற வைத்து சதை கிழிய கிழிய அடித்துகொன்றபோது கூட, உடல்நலம் சரியில்லாமல் போய் தான் இறந்துட்டாங்கன்னும் நெஞ்சில் கொஞ்சம் கூட ஈரமே இல்லாமல் பொய்ய சொன்னதாகவும் அவரது ஆட்சியில் சிறப்பை பற்றி சின்னமம்மியின் ஆதரவாளர்கள் கிழித்து தொங்க விடுறாங்களாம்.. இப்படியெல்லாம் ஒரு ஆட்சியை நடத்திவிட்டு, தற்போதைய ஆட்சிய குறை சொல்லலாமா எனவும் கேள்வி எழுப்புறாங்க...

கரூர் துயர சம்பவத்தை கேள்விப்பட்டதும், வெளிநாட்டில் இருந்த துணை முதல்வர் உடனடியாக ஓடோடி வந்து இறந்துபோனவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, காயம் அடைந்தவர்களுக்கும் ஆறுதல் சொல்லியிருக்காரு.. ஆனால் இலைக்கட்சி தலைவரோ துணை முதல்வர் வரவில்லை எனவும் புழுகுனாராம்.. இதனை கேட்ட ரத்தத்தின் ரத்தங்களோ... எங்கள் தலைவரு பொய்யை சொல்லிக்கிட்டே இருப்பாரு.. அதனை நாங்கள் அப்பாவியாய் கேட்டுக்கிட்டே இருப்போம்...இது தான் அவருக்கு பிடிக்கும் என்பதால் அப்படியே கேட்போமுன்னு சிரிக்கிறாங்க..

அதே நேரத்தில் இப்படி உருட்டினால் தானே நடிகர் கட்சியோட கூட்டணியில் சேரமுடியும் என்ற திட்டத்தையும் எங்கள் தலைவர் செயல்படுத்துறாருன்னும் சொல்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கரன்சியில் புரளும் லேடி அதிகாரியின் நடவடிக்கையால் கொந்தளிப்பில் இருக்காங்களாமே விவசாயிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெற ஏரி வண்டல் மண் எடுக்க இலவச அனுமதியை அரசு வழங்கியதாம்..

ஆனால் மாவட்ட தலைநகர் தாலுகாவில் உள்ள கனிவான அந்த லேடி அதிகாரியோ பர்மிட்டுக்கு ஆயிரக்கணக்கில் ப விட்டமின் கொடுத்தால்தான் அனுமதி கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்காம்.. இல்லையென்றால் அனுமதிக்கு வார கணக்கில் அலைக்கழிப்பு செய்வார்களாம்.. வணிக ரீதியாக வருபவர்கள் பணத்தை கொட்டிக் கொடுப்பதால் அதையே விவசாயிகளிடமும் எதிர்பார்க்கிறாங்களாம் அந்த கனிவான லேடி..

ஏற்கனவே ஆய்வு, உட்பிரிவு பட்டா வழங்கலில் மனை, நகைகளை வாங்கி குவித்து வைத்திருப்பதாக புகார் உள்ள நிலையில் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படாமல் அப்பாவி விவசாயிகளிடமும் நிலத்திற்கு அடிக்கும் வண்டல் மண்ணுக்கும் கரன்சியை கறப்பதால் லேடி அதிகாரி மீதான குற்றச்சாட்டு மேலும் அதிகரித்திருக்கிறதாம்.. மேலிடத்தில் உள்ள பவர்புல் அதிகாரியால் தப்பித்து வரும் இவருக்கு இனியும் ஆளுமைமிக்கவர்கள் கருணை காட்டலாமானு கொந்தளிப்பில் உள்ளார்களாம் அப்பாவி விவசாயிகள்.. இதனால் லேடி மீது எந்த நேரத்திலும் நடவடிக்கை பாயலாம் என்ற பேச்சு புரத்தில் பரவலாக உலாவுகிறதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.