*உரிமம் பெறாத 24 நர்சரி மீது நடவடிக்கை
தர்மபுரி : விவசாயத்தை பிரதானமாக கொண்ட தர்மபுரி மாவட்டத்தில் சின்னாறு, வாணியாறு, தொப்பையாறு, நாகாவதி, கேசர்குளி, தும்பலஅள்ளி, வள்ளிமதுரை அணைகளும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஈச்சம்பாடி அணைக்கட்டும் உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 43 ஆயிரத்து 741 ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலங்கள் உள்ளது.
1 லட்சத்து 62 ஆயிரத்து 896 ஹெக்டேர் சாகுபடி பரப்பாக கொண்டுள்ளது. மாவட்டத்தில் ராகி, சோளம் மற்றும் பயறு வகை, சிறுதானிய பயிர்கள் மானாவாரி நிலங்களில் அதிகம் பயிரிடப்படுகின்றன. நெல், கரும்பு, மஞ்சள், மரவள்ளி, பருத்தி, தக்காளி, வெண்டை, கத்திரி உள்ளிட்ட பயிர்களும், காய்கறிகளும் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் அதப்பாடி, வண்ணாத்திப்பட்டி, திப்பம்பட்டி, சங்கம்பட்டி மற்றும் நல்லம்பள்ளி பாளையம்புதூர் பகுதிகளில் ஏராளமான காய்கறி நாற்றுப்பண்ணைகள் உள்ளன. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பழக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய முறையான விதை விற்பனை உரிமம் பெற்று 233 நாற்றுப் பண்ணை உரிமையாளர்கள், விவசாயிகளுக்கு நாற்றுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
பெரும்பாலான விவசாயிகள் தற்சமயம் தக்காளி, மிளகாய் உள்ளிட்ட பயிர் சாகுபடிக்கு குழித்தட்டு நாற்றாங்காலில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகளை நடவு செய்கின்றனர்.
மேலும், பிற மாவட்ட விவசாயிகளுக்கும் பழக்கன்றுகள், காய்கறி நாற்றுகளை விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், நாற்றுப்பண்ணைகளில் தரமில்லாத தென்னங்கன்று, காய்கறி விதைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் மணி தலைமையில் விதை ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்டோர், நாற்றுப்பண்ணைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் மணி கூறியதாவது: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 233 நாற்றுப் பண்ணைகள் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. விதைச் சட்டத்திற்கு உட்பட்டு விவசாயிகளுக்கு தரமான காய்கறி நாற்றுகள், பழமரக்கன்றுகள், தென்னங்கன்றுகள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யவும் தவறு செய்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வதையும் தமிழ்நாடு அரசின் விதைச்சான்று துறையின் விதை ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
வேளாண்மை உற்பத்தி ஆணையர், தனியார் நாற்றங்காலில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள், நடவு பொருட்களின் தரம், அவற்றுக்கான விதைகள் பெறப்பட்ட ஆதாரம் ஆகியவை விதை சட்டத்தின்படி உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். விதை ஆய்வாளர்கள் நாற்று பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நடப்பாண்டில் (2025-2026) சட்டவிதிகளை பின்பற்றாத 14 நாற்றுப்பண்ணைகளுக்கு, விளக்கம் கேட்டு உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், உரிமம் பெறாமல் செயல்படும் 24 நர்சரிகளுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் நீதிமன்ற உத்தரவு பெற்று உரிமம் பெறாத இடத்திலுள்ள காய்கறி நாற்றுகள் மற்றும் தென்னங்கன்றுகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே பழக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகள் வணிக முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் அனைத்து நாற்றுப் பண்ணை உரிமையாளர்களும் உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். விதை மற்றும் நாற்றுகள் விற்பனை உரிமம் பெறுவதற்கு, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகம் அல்லது தங்கள் பகுதிக்கான விதை ஆய்வாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
