எல்ஐசி நிறுவனத்தின் 13,200 கோடி ரூபாய் பங்குகளை நடப்பு ஆண்டிற்குள் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முயற்சி!!
டெல்லி : எல்ஐசி நிறுவனத்தை தனியார் மயமாக்க முயன்று வரும் ஒன்றிய அரசு, அந்த நிறுவனத்தின் 13,200 கோடி ரூபாய் பங்குகளை நடப்பு ஆண்டிற்குள் விற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றிய பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியான நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக திகழும் எல்ஐசி நிறுவனத்தை தனியார் மயமாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு எல்.ஐ.சி.யின் 3.5% பங்குகள் IPO வாயிலாக விற்பனை செய்தது.
எல்.ஐ.சி நிறுவனம் 96.5% பங்குகளை வைத்துள்ள நிலையில், 2027ம் ஆண்டு மே மாதத்திற்குள் மேலும் 6.5% பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் ரூ.13,200 கோடி மதிப்புள்ள பங்குகளை நடப்பாண்டிற்குள் விற்க ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய சந்தை நிலவரப்படி எல்.ஐ.சி நிறுவனம் ரூ.5.85 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை வைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
