Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ரூ.39 கோடியில் கட்டப்பட்ட 146 நூலக கட்டிடங்கள் முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் 26 புதிய நூல்களை வெளியிட்டு, பொது நூலக இயக்ககத்தின் சார்பில் ரூ.39.33 கோடி மதிப்பில் 146 நூலகக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நாட்டுடைமை நூல்கள், நூற்றாண்டு காணும் ஆளுமைகள், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம், இளந்தளிர் இலக்கியத் திட்டம், செவ்வியல் நூல்கள், அரிய நூல்கள் வெளியீடு ஆகிய திட்டங்களின் கீழ் நூல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. மொத்தம் 26 புதிய நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.

ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 90 நூலகங்களும், பேரூராட்சிகள் இயக்ககம் மூலம் 32 நூலகங்களும், நகராட்சி நிர்வாகத் துறை (நகராட்சி) மூலம் 20 நூலகங்களும் என அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் ரூ.31 கோடியே 24 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 142 நூலகக் கட்டிடங்கள்; ஆலாம்பாளையத்தில் ரூ.50 லட்சம் செலவில் 1484 சதுரடியில் கிளை நூலகம், என மொத்தம் ரூ.39 கோடியே 33 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 146 நூலகக் கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், கள்ளக்குறிச்சியில் 14369 சதுரடியில் நான்கு தளங்களுடன் கூடிய மாவட்ட மைய நூலகம் ரூ.4 கோடியே 1 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, பொது நூலக இயக்குநர் ஜெயந்தி ஆகியோர் பங்கேற்றனர்.