Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கட்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: கட்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை. இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அந்நாட்டு பிரதமரிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை தந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகவிடம், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கச்சத்தீவு மீட்பது உள்ளிட்ட முக்கியமான தமிழ்நாடு மீனவர் பிரச்சினைகளை பிரதமர் நரேந்திர மோடி முன் வலியுறுத்தி தீர்வுகள் காண வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் தனது கடிதத்தில், இந்தியாவும் இலங்கையும் இடையே பல தசாப்தங்களாக நீடித்து வரும் மீனவர் பிரச்சினை தற்போது மிகவும் கடுமையான கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள், மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுகின்றனர், படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன, சிலர் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இது மனிதநேயத்திற்கும் கடல்சார் ஒத்துழைப்பிற்கும் எதிரானது.

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதேபோல், அவர்களுடைய படகுகளையும் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான படகுகள் தற்போது இலங்கையால் நாட்டுடைமையாக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்நாடு கடலோர மீனவர்கள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்” என ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இந்தியா–இலங்கை கூட்டு பணிக்குழு மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும். இந்த குழு கடல்சார் எல்லை பிரச்சினைகள், மீனவர் பாதுகாப்பு, பொருளாதார இழப்பீடு போன்ற விஷயங்களை பரஸ்பர ஒத்துழைப்புடன் ஆராயும் அமைப்பாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த குழு செயல்படவில்லை. தற்போது இலங்கை அதிபர் இந்தியா வருகை தந்திருக்கும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த குழுவை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.