Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிக்கனம் கடைபிடிப்போம் சேமிப்போம், சிறப்பாக வாழ்வோம்: முதல்வர் பதிவு

சென்னை: சிக்கனம் கடைப்பிடிப்போம். சேமிப்போம், சிறப்பாக வாழ்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உலக சிக்கன நாள் வாழ்த்துச் செய்தி: ஆண்டுதோறும் அக்டோபர் திங்கள் 30ம் நாள் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் “உலக சிக்கன நாளாக” கொண்டாடப்பட்டு வருகிறது. வருவாயை உயர்த்தியும், செலவுகளை களைந்தும் திறம்பட வாழவேண்டும் என்பதை அய்யன் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகப் பொதுமறையாம் திருக்குறளில், ‘வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை ஆராய்வான் செய்க வினை’ - ‘வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்’ என்று கூறியுள்ளார்.

பண்டைய காலங்களில் மண் உண்டியல் மூலம் சேமிக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது. பாதுகாப்பற்ற அந்த முறையினின்றும் மாறி இன்று வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் சேமிக்கும் வாய்ப்புகள் பெருகியுள்ளன. ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயில் ஒரு பகுதியைச் சேமிக்க வேண்டும். அத்தகைய சேமிப்பும் பாதுகாப்பானதாக அமைய வேண்டும். ஒருவர் சேமிக்கும் தொகையானது முதுமையில் நம்பிக்கையையும், பாதுகாப்பினையும் அளிக்கிறது. சிறுகச் சிறுகச் சேமிப்பதன் மூலம் குடும்பத்திற்கு தேவைப்படக்கூடிய அவசரச்செலவுகள் குறிப்பாக, உயர்கல்விக்கான செலவு, திருமணச் செலவு, மருத்துவச் செலவு, வீடு கட்டுதல் போன்ற இனங்களில் ஏற்படும் செலவு போன்ற அனைத்தையும் எளிதில் எதிர்கொள்ள முடிகிறது. எனவே, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, வரவுக்குள் செலவு செய்து சிக்கனமாக வாழப் பழகிட வேண்டும். வாழ்க்கை சிறப்பாக அமைய அனைவரும் சிக்கனமாகச் செலவு செய்து சேமித்திட அருகிலுள்ள அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கை தொடங்கிட வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.