Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கரம் வலுப்படுத்துவோம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது, ஒரு மாநிலத்தில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் நேற்றுமுன்தினம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளித்துள்ளது. சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர் தரப்பு தாமதிக்க கூடாது எனவும் அந்த தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி உச்ச நீதிமன்றத்திடம் ஏற்கனவே விளக்கம் கேட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆளுநர் நீண்ட காலத்திற்கு மசோதாவை நிறுத்தி வைப்பது என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அதனை சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால், அதனை சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

ஒரு சட்டப்பிரிவுக்கு 2 வகையான வாய்ப்பு இருந்தால், எது சுமுக நிலையோ, அதையே பின்பற்ற வேண்டும். காரணம் தெரிவிக்காமல் நீண்ட காலம் மசோதாவை நிறுத்தி வைக்க கூடாது, அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.  இந்திய அரசியலமைப்பு சட்டம், சில தனி உரிமைகளை ஆளுநருக்கு வழங்கி இருக்கிறது. காரணமின்றி மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை.

ஒன்று - மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும், இரண்டு - ஜனாதிபதிக்கு அனுப்பலாம். மூன்று - சட்டசபைக்கு திருப்பி அனுப்பலாம். இந்த மூன்று வாய்ப்புகள் மட்டுமே ஆளுநருக்கு உள்ளது. இந்த மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுப்பதே ஆளுநருக்கான தனிப்பட்ட அதிகாரம் ஆகும். மசோதாக்களை நிறுத்தி வைக்கும் நான்காவது வாய்ப்பு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபட கூறியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அவ்வாறான10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து விளக்கம்கோரி அரசியல் சாசனத்தின் 143வது பிரிவின்கீழ் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கேட்ட விளக்கத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசின், பல்கலைக்கழகங்கள் தொடர்பான 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது ‘சட்டவிரோதம்’ எனக்கூறி, சட்டப்பிரிவு 142-ன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது உச்ச நீதிமன்றம். அதோடு, மசோதாக்களுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்கவும் வலியுறுத்தியது.

மாநில சட்டப்பேரவையால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை காலவரம்பின்றி நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், ஆளுநர் செயல்படாவிட்டால் நீதிமன்றம் தலையிடும் எனவும் எச்சரித்துள்ளது. இது, ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள சம்மட்டி அடி ஆகும்.

மசோதவை நிறைவேற்ற ஒரு காலக்கெடுவை, நிர்ணயிக்க வேண்டும் இது, நிறைவேறும் வரை ஓயமாட்டோம் என முதல்வர் சூளுரைத்துள்ளார். நியாயத்தின் பக்கம் நின்று போராடும் அவருக்கு தோளோடு தோள் கொடுத்து, அவரது கரத்தை வலுப்படுத்துவோம்.