தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இருளை நீக்கி, ஒளியேற்றும் தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும். தீபாவளிக்கான புராண கதைகள் ஒருபுறம் இருந்தாலும், இந்திய மக்கள் மனதில் இன்பத்தை பாய்ச்சும் பண்டிகையாகவே எப்போதும் தீபாவளி பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் அந்தநாள் முதல் இந்த நாள் வரை தீபாவளியை ஒட்டி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கிடும் போனஸ் முக்கிய காரணமாகும்.
தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பண்ட பலகாரங்கள் வகையறாக்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குஷிப்படுத்தும். ஜவுளி நிறுவனங்களில் தீபாவளியை ஒட்டி கூட்டம் நிரம்பி வழிவதோடு, நம் மண்ணின் தயாரிப்பான சிவகாசி பட்டாசுகளுக்கு வாழ்வு கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி தென்படுகிறது. தீபாவளி தினத்தன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்துவிட்டு, புத்தாடை உடுத்தி, பண்ட பலகாரங்களை உண்பது வழக்கம்.
இதன் காரணமாக பலசரக்கு கடைகள், ஸ்வீட் ஸ்டால்கள் என தீபாவளி வர்த்தகம் பலரது வாழ்வில் ஒளியேற்றுகிறது. புதியதாக மணவாழ்வில் நுழைந்தவர்களுக்கு தலைத்தீபாவளி என்பது மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் இன்பம் ஈட்டி தரும் நன்னாளாகும். இன்பம் பொங்கும் தீபாவளி பண்டிகை இவ்வாண்டு இன்று சீரும், சிறப்புமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடிட திராவிட மாடல் அரசு எடுத்த நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியவை.
தீபாவளி பண்டிகை என்றாலே சென்னை, கோவை நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தேவையான சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்கியுள்ளது. சற்று சொகுசு பயணங்களை விரும்புவோர் ஆம்னி பஸ்களை நாடி செல்வது வழக்கம். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்த நிலையில், ஆம்னி பஸ்களுக்கான கட்டணத்தை ஒவ்வொரு இடத்திற்கும் நிர்ணயம் செய்து, அக்கட்டணங்கள் அடிப்படையில் ஆம்னி பஸ்கள் இயங்கிட வரைமுறை வகுத்து பயணிகள் வயிற்றில் பாலை வார்த்தது அரசு.
தீபாவளி ஒருகாலத்தில் ஒருநாள் மட்டுமே விடுமுறை என்ற நிலை காணப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு சென்று, வருவோர், தீபாவளி அன்றே சென்னைக்கு ரயில் மற்றும் பஸ்கள் ஏறினால் மட்டுமே மறுதினம் வேலைக்கு செல்ல முடியும் என்கிற அவல நிலை காணப்பட்டது. பொதுமக்களின் கஷ்டங்களை உணர்ந்து கொண்ட திராவிட மாடல் அரசு, தீபாவளிக்கு மறுதினமும் விடுமுறையை அறிவித்துள்ளது. பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் இதனால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தீபாவளி வடநாட்டில் இருந்து வந்த பண்டிகை என்றாலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், முதலாளிகள் உள்ளிட்டோர் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குதல், புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் ஒரு சமத்துவ பண்டிகையாக கடந்த சில நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் இரண்டற கலந்து விட்டது. மகிழ்ச்சி பெருக்கெடுக்க இன்றைய தீபாவளியை கொண்டாடி மகிழ்வோம். சிறுவர்களுக்கு பட்டாசுகள், புத்தாடைகள், இளைஞர்களுக்கு புதிய திரைப்படங்கள், அனைவருக்கும் பண்ட, பலாரங்கள் என இந்த தீபாவளி திருநாள் சிறக்கட்டும். இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்.