Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அடியோடு ஒழிப்போம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் நேற்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து, அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.  இந்த ஆணையத்தில், சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் மாற்றுவியல் அறிஞர்கள் இடம் பெறுவார்கள்.

இந்த ஆணையம் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளை பெற்று, ஆணவ படுகொலைகளை தடுக்க தேவையான, உறுதியான பரிந்துரைகளை தமிழக அரசுக்கு வழங்கும். ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த சமூகக் கொடுமையை தடுப்பதற்கென தமிழக அரசு உறுதியான புதிய சட்டங்களை இயற்றும் என்றும் முதலமைச்சர் தெளிவுபட பேசியுள்ளார்.

ஆணவ படுகொலையின் அடிப்படை நோக்கம், ‘‘கவுரவத்தை” நிலைநிறுத்துவது அல்லது குடும்பத்தின் ‘‘பெயருக்கு களங்கம்” ஏற்படாமல் தடுப்பது ஆகும். சாதி அல்லது சமூக பின்னணியில் வேறுபாடுகள் உள்ள ஒருவரை காதலித்து திருமணம் செய்வது ஆணவ படுகொலைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. தங்கள் சாதிக்கு வெளியே ஒருவரை திருமணம் செய்யும்போது, அது குடும்பத்துக்கு அவமானம் என்று கருதப்பட்டு, கொலைக்கு வழி வகுக்கிறது.

விவாகரத்து செய்துகொள்வதோ அல்லது திருமண உறவுக்கு புறம்பாக செயல்படுவதோ குடும்பத்தின் கவுரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எண்ணி கொலை செய்யப்படுகிறார்கள். குடும்பத்தின் கட்டுப்பாடுகளையோ அல்லது பாரம்பரிய கட்டுப்பாடுகளையோ மீறி நடப்பதாகவும், அதனால் கொலை செய்யப்படுவதாகவும் கருதப்படுகிறது. பொதுவாக பெண்களே இத்தகைய கொலைகளுக்கு இலக்காகின்றனர்.

வளர்ந்துவிட்ட சமுதாயத்தில் இப்படி ஒரு கொலை நடப்பது மனிதகுலத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. எல்லா துறையிலும் முன்னேறி வருகிறோம் என மார் தட்டுகிற நாம், கவுரவம் என்ற ஒற்றை சொல்லுக்காக இன்னொரு மனித உயிரை பறிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. இது, எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்பதை எண்ணி பார்ப்பதும் இல்லை. இந்த அவலத்தை சமுதாயத்தில் இருந்து அடியோடு நீக்க வேண்டும்.

வேரும், வேரடி மண்ணோடும் துடைத்தெறிய வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஆணையத்தை அமைத்துள்ளார். இந்த ஆணையம் பரிந்துரைக்கும் அம்சங்கள் அனைத்தும் சட்ட முன்வடிவமாக மாறும். அதன்பிறகு, சட்டத்தின்பிடி இறுகும். ஆணவ படுகொலைகள் அடியோடு தடுக்கப்படும் என்பதே நிதர்சனம். சட்டம் கடுமையாக்கப்பட்டால் தான் குற்றங்கள் குறையும் என்பதை மேற்கத்திய நாடுகள் சில இன்னமும் தங்களது முக்கிய கொள்கையாக பின்பற்றுகின்றன. அந்த நிலையை நாமும் உருவாக்கித்தான் ஆக வேண்டும்.

இதை செய்தால்தான் ஆணவ படுகொலைகளை தடுக்கமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காகத்தான் இந்த ஆணையம். முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியபடி, உலகம் அறிவு மயமாகிறது, ஆனால் அன்பு மயமாவது தடுக்கப்படுகிறது. எல்லோரிடத்திலும் அன்பு காட்டுவோம், இழிச்சொல் தவிர்ப்போம். வீண் வறட்டு கவுரவம் தடுப்போம். நம் உயிரைப்போல், எல்லா உயிர்களையும் நேசிப்போம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பதை விட்டொழித்து, மனிதகுலம் வாழ வழிகாண்போம். ஆணவ படுகொலையை அடியோடு ஒழிப்போம்.