Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தடைகளை தகர்ப்போம்

தமிழ்நாட்டில், குலக்கல்வி திட்டத்தை குழிதோண்டி புதைக்க, ஆட்சி பொறுப்பு ஏற்றதும் 6 ஆயிரம் ஆரம்ப பள்ளிக்கூடங்கள், 6 ஆயிரம் மேல்நிலை பள்ளிக்கூடங்கள் என மொத்தம் 12,000 பள்ளிகளை திறந்து, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் கர்மவீரர் காமராஜர். அவருக்கு பின்னால் ஆட்சி பொறுப்பேற்ற அறிஞர் அண்ணா, கலைஞர், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது ஆட்சியில், இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒப்பற்ற கல்வி வளர்ச்சியை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியில் பகல் உணவு திட்டமானது எம்ஜிஆர் ஆட்சியில், சத்துணவு திட்டமாக மாறியது. கலைஞர் ஆட்சி காலத்தில் அது ேமலும் விரிவடைந்து, 2 முட்டை அல்லது 2 வாழைப்பழம் என்று இத்திட்டம் மேலோங்கியது. இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில், இவை எல்லாவற்றையும் தாண்டி, காலை சிற்றுண்டி திட்டத்தையும் குழந்தைகளுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.  இதன்காரணமாக, பள்ளிக்கு பிள்ளைகள் வருகை அதிகரித்துள்ளது.

வகுப்பறையில் படிப்பில் கவனம் கூடுகிறது. நல்ல கல்வி வளர்ச்சி பெருகுகிறது. இதை அழித்துவிட வேண்டும் என ஒன்றியத்தில் உள்ள பாஜ. அரசு, ஏதேதோ காரணங்களை சொல்லி, மாநிலத்துக்கு வரவேண்டிய உரிமைத் தொகையான, கல்வி மேம்பாட்டு நிதியை வழங்க மறுக்கிறது. ஆனாலும், தடைகளை தகர்த்து, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என அலைகடல் போல், தமிழகத்தில் கல்வித்துறையில் அமைதிப்புரட்சி ஏற்பட்டு வருகிறது.

காலை உணவு திட்டம் மட்டும் அல்ல, தமிழ்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என மாணவ, மாணவிகளின் உயர்கல்வி வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வர் வழங்கி வருவதால் கல்வி வளர்ச்சி தடையின்றி மேலோங்குகிறது. முதல்வரின் திட்டங்களே, அகில இந்திய அளவில், கல்வி வளர்ச்சியில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகிக்க, அடித்தளமாக அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகம் பேர் உயர்கல்வி படிக்கக்கூடிய மாநிலமாகவும் தமிழகம் உயர்ந்துள்ளது.

தற்போது, தமிழகத்தின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 52 சதவீதமாக உள்ளது. ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 29 சதவீதம் மட்டுமே. குறிப்பாக, புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்களுக்கு பிறகு, பிளஸ் 2 முடித்த மாணவர்களில் 75 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேருகிறார்கள்.  பெண்கள் உயர்கல்வியில் சேர்வது அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் கல்வி முன்னேற்றங்களில், பெண்களின் கல்வி முன்னணி வகிக்கிறது. பெண்களின் கல்வியை முன்னிறுத்தி, தமிழகம் தேசிய அளவில் முன்னணியில் உள்ளது, இது, ஒட்டுமொத்த பெண்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றுகிறது. நமது மாநிலத்தின் இந்த வளர்ச்சியை பிற மாநிலங்கள் அடைய இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளாகும். அந்த அளவுக்கு கல்வி வளர்ச்சியில் தமிழகம் சிறப்பாக முன்னேற்றம் அடைந்துள்ளது.

இதற்கு முழு காரணம், திராவிட இயக்கங்களின் ஆட்சிகள் தான். கல்வியை திறம்பட கற்றால், தனி நபர் மட்டுமல்ல, குடும்பம் முன்னேறும். அடுத்த தலைமுறையும் முன்னேறும். அதை சார்ந்து ஒட்டுமொத்த தேசமும் முன்னேறும். கல்வி ஒரு சக்திவாய்ந்த கருவி. அதை, திறம்பட கற்றால், பொருளாதார நிலையை மேம்படுத்தும்.

சமுதாயம் வளர்ச்சி அடையும். படிப்புதான் நமது வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை. கல்வியில் தமிழகம் பெற்ற எழுச்சி, பல மாநிலங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதற்கு தடை போட்டு, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை தடுத்துவிட வேண்டும் என ஒன்றிய பாசிச ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். இதற்கு அடிபணியாமல், தமிழ் மண்ணை காக்க ஓரணியில் திரள்வோம்.