ஊட்டி: ஊட்டி அருகே குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நுழைந்து வளர்ப்பு நாயை தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான கிராம பகுதிகளில் சிறுத்தை, கரடி, புலி, யானை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக சமீப நாட்களாக குடியிருப்புகளில் வளர்க்கப்படும் நாய்களை சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக வேட்டையாடி செல்கின்றன. இதனால், இரவு நேரங்களில் நடமாடவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில், ஊட்டி ரோஸ் மவுண்ட் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று குடியிருப்புக்குள் நுழைந்து அங்கிருந்த வளர்ப்பு நாயை தூக்கி செல்கிறது.
நாய் அலறும் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, நாயை அடித்துக் கொன்று சிறுத்தை தூக்கி சென்றுள்ளது. இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். நாயை அடித்துக் கொன்று சிறுத்தை தூக்கிச் செல்லும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனவே, குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.