புஞ்சை புளியம்பட்டி அருகே மலைக்குன்றின் மீது படுத்திருந்து கால்நடைகளை வேட்டையாட காத்திருந்த சிறுத்தை
*கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை
சத்தியமங்கலம் : புஞ்சை புளியம்பட்டி அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை மலை குன்றின் மீது படுத்திருந்த காட்சி விவசாயிகள் மற்றும் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி, ஓலக்காரன்பாளையம், மல்லியம்பட்டி, மாராயிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வைத்து பராமரித்து வருகின்றனர்.
பகல் நேரத்தில் மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இதற்கிடையே சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை கடந்த சில நாட்களாக மாராயிபாளையம் கிராமத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் நடமாடி வருகிறது.
கடந்த அக்டோபர் மாதத்தில் குடியிருப்பு பகுதியில் கட்டி வைத்திருந்த ஆட்டை வேட்டையாடி கொன்றது. கால்நடைகளை வேட்டையாடி பழகியதால் சிறுத்தை வனப்பகுதிக்குள் செல்லாமல் அப்பகுதியில் உள்ள மலை குன்றில் முகாமிட்டுள்ளது.
நேற்று காலை மலைக்குன்றின் மீது சிறுத்தை படுத்திருந்ததை நேரில் பார்த்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனவர் கர்ணன், வனக்காப்பாளர் ஆலமலை மற்றும் வனத்துறை ஊழியர்கள் சிறுத்தை நடமாடிய மலைக்குன்றில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவதோடு மக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இரவு நேரத்தில் வனத்துறை ஊழியர்கள் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டு சிறுத்தை நடமாட்டத்தை டிரோன் கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த பின் கூண்டு வைத்து பிடிப்பது குறித்து உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என தெரிவித்தனர். ஊருக்குள் நுழைந்த சிறுத்தை மலைக்குன்று மீது பட்ட பகலில் படுத்திருந்த காட்சி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

