Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

லே நகரில் வெடித்த வன்முறைக்கு 4 பேர் பலி; லடாக்கில் ஊரடங்கு உத்தரவு: 50 இளைஞர்கள் அதிரடி கைது

லே: லே நகரில் வெடித்த வன்முறைக்கு 4 பேர் பலியானதை தொடர்ந்து லடாக் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக 50 பேர் கைது செய்யப்பட்டனர்.லடாக் யூனியன் பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிக்க கேட்டு ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை கடந்த 4 மாதமாக கிடப்பில் போடப்பட்டதால் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் செப்.10 ஆம் தேதி உண்ணாவிரதம் இருந்தார்.

அந்த உண்ணாவிரதத்தில் இருந்த 2 பேர் மயக்கம் அடைந்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் நேற்று முன்தினம் முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது அவர்கள் பேரணியாக சென்ற போது பயங்கர வன்முறை வெடித்தது. பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டனர். பா.ஜ அலுவலகம், பாதுகாப்பு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கண்ணீர்குண்டு வீசப்பட்டது. தடியடி நடத்தப்பட்டது. இதில் 4 பேர் பலியானார்கள்.

80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். வன்முறையில் காயமடைந்தவர்களில் மூன்று பேர் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் வன்முறையின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். நேற்று லடாக் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 5 பேருக்கு மேல் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டது.

வன்முறை நடந்த லே நகரில் நேற்று போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் ரோந்து சென்று அமைதியை கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர். மேலும் வன்முறை தொடர்பாக 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கார்கில், ஜான்ஸ்கர், நுப்ரா, பதம், சாங்டாங், டிராஸ் மற்றும் லமாயுரு ஆகிய இடங்களில் கலவரத் தடுப்புப் பிரிவு காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே லே நகரில் வன்முறை வெடித்ததற்கு காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் தூண்டுதலே காரணம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. லடாக்கின் லெப்டினன்ட் கவர்னர் கவிந்தர் குப்தா கூறுகையில், ‘இந்த வன்முறையில் ஈடுபட்ட அனைவர் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். மேலும், இந்த வன்முறை சம்பவத்துக்கு காரணம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது.

* லடாக் வன்முறையிலிருந்து பாடம் கற்க வேண்டும்

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறுகையில், ‘ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து உறுதியளிக்கப்பட்டது, ஆனால் அது எங்கே? அவர்கள் லடாக்கில் நடந்த வன்முறையில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எங்கே? வேலைகள் எங்கே? வெளியிலிருந்து வேலைக்கு திணிக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியாது.

லடாக் வன்முறைக்கு காங்கிரசை குற்றம் சாட்டுவது பொறுப்பைத் திசைதிருப்பும் முயற்சி. லடாக் நிர்வாகம் பா.ஜ கையில் உள்ளது. அப்படி இருக்கும் போது காங்கிரஸ் எங்கிருந்து வந்தது?. லடாக்கில் சீனா எவ்வளவு நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்பது முழு உலகிற்கும் தெரியும். எங்கள் நிலத்தில் நாங்கள் ரோந்து கூட செய்ய முடியாது. பொய்களின் உலகில் எவ்வளவு காலம் வாழ்வோம்?’ என்றார்.

* வெளிநாட்டு நிதி உரிம அனுமதி ரத்து

சோனம் வாங்சுக் நிறுவிய லடாக் மாணவர் கல்வி மற்றும் கலாச்சார இயக்கத்தின் வெளிநாட்டு நிதி பங்களிப்பு உரிமத்தை ஒன்றிய உள்துறை அமைச்சகம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ரத்து செய்துள்ளது. நிதிமுறைகேடு என்று கூறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையும் தொடங்கி உள்ளது.

* என்னை சிறையில் அடைத்தால் மேலும் வன்முறை வெடிக்கும்

காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் கூறுகையில், ‘லடாக்கில் சமீபத்தில் நடந்த வன்முறை போராட்டங்களுக்கு என்னைக் குறை கூறும் உள்துறை அமைச்சகத்தின் செயல் பலிகடா தந்திரம் ஆகும். என்னை கடுமையான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் என்னைக் கொண்டு வந்து இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்க அவர்கள் ஒரு வழக்கை உருவாக்குகிறார்கள். நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்.

என்னை சிறையில் அடைத்தால், அது மேலும் வன்முறையை தூண்டுவதாக இருக்கும். இளைஞர்கள் ஏற்கனவே விரக்தியடைந்திருப்பதால் புத்திசாலித்தனத்தை விட ஞானம் நமக்குத் தேவை. வன்முறைக்கு உண்மையான காரணம் 6 ஆண்டுகால வேலையின்மை மற்றும் ஒவ்வொரு மட்டத்திலும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தான்’ என்றார்.

* இளைஞர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்

மூத்த காங்கிரஸ் தலைவர் கரண் சிங் கூறுகையில், ‘1947 முதல் லடாக் மக்கள் உறுதியாக இந்திய ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர். லடாக்கில் உள்ள இளைஞர்கள் தங்கள் வேலை வாய்ப்புகள் மறைந்து வருவதாகத் தோன்றுவதால் மிகவும் கோபமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இளைஞர்களின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலிக்க வேண்டும்’ என்றார்.

* ஒன்றிய அரசு தான் காரணம்

காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘லடாக்கில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது துயரகரமானது. அங்கு இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்குப் பதில், ஒன்றியஅரசின் குறுகிய பார்வை ஜம்மு மற்றும் லடாக்கை வன்முறை நெருப்பில் தள்ளியுள்ளது. தற்போது பாஜ மக்களின் கோரிக்கைகளை நியாயமற்ற முறையில் புறக்கணிக்க முயல்கிறது’ என்றார்.