Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சட்டமன்றப் பேரவையில் வினா - விடை நேரத்தின்போது பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை: சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ். மணியன் : பேரவைத் தலைவர் அவர்களே, வேதாரண்யம் தொகுதி, காடந்தேத்தியில் உள்ள அருள்மிகு அய்யனார் திருக்கோயிலில் பக்தர்களுக்கு தங்குமிடம் கட்ட அரசு ஆவண செய்யுமா ?

அமைச்சர் : பேரவைத் தலைவர் அவர்களே, காடந்தேத்தியில் அருள்மிகு ஆதீனமலையார் திருக்கோயிலுக்கு பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்குண்டான போதிய இடவசதி இல்லை. இருப்பினும், அந்த திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்திலோ, மாவட்டத்தில் இருக்கின்ற திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களிலோ ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து உறுப்பினர் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்குண்டான முயற்சியை துறை மேற்கொள்ளும். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் 261 கோடி ரூபாய் செலவில் 38 பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு உத்தரவிடப்பட்டு அதில் திருவண்ணாமலை உட்பட 16 பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டி முடிக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது என்பதை பேரவை தலைவர் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் அவையில் இல்லாததால் அவருக்கு பதிலாக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி : பேரவை தலைவர் அவர்களே, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி காடந்தேத்தியில் அமைந்துள்ள பழமையான அருள்மிகு அய்யனார் திருக்கோயிலுக்கு வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மிக அதிக அளவில் பொதுமக்கள் வருகை தந்து வழிபாடு செய்கின்றனர். இது இப்பகுதி மக்களின் மனதில் பயபக்தி மிக்க கோயிலாக உள்ளதால் நம்பிக்கையோடு சாமி தரிசனம் செய்கிறார்கள் பிற மாவட்டங்களில் இருந்தும் திருக்கோயிலுக்கு வந்து வழிபடவும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேறிய பின்பு நன்றி கடன் செலுத்தவும் வருகிறார்கள். எனவே பக்தர்களின் நலன் கருதி குளியலறை மற்றும் கழிப்பறை வசதியோடு ஒரு சமுதாயக்கூடம் அமைத்து தர வேண்டும் என்பதை பேரவை தலைவர் வாயிலாக அமைச்சர் அவர்களை கேட்டு அமைகிறேன்.

அமைச்சர் : பேரவை தலைவர் அவர்களே, கடந்த இரண்டு நாட்களாக சமுதாயக்கூடம் மற்றும் திருமண மண்டபங்கள் கட்டுகின்ற கேள்விகள் அவையில் எழுப்பப்படுகின்ற போது நம்முடைய உறுப்பினர் கோவிந்தசாமி இந்த அவையிலே தான் இருந்தார். மாண்பமை உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கின் தீர்ப்பை சட்டப் போராட்டம் நடத்தி திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் எங்கள் முதல்வர் வெற்றி பெற்ற பிறகு நிச்சயமாக அவர் கூறுகின்ற அந்த சமுதாயக்கூடம் கட்டித் தரப்படும் என்பதை பேரவை தலைவர் வாயிலாக உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி : பேரவை தலைவர் அவர்களே, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலே அதிக அளவு தெலுங்கானா, ஆந்திர பக்தர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்யும்போது பல தடைகளை ஏற்படக்கூடிய நிலை இருக்கிறது. ஆகவே அந்த கோயிலுக்காக நம்முடைய அரசின் மூலம் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றது என்பதை அமைச்சர் அவைக்கு தெரிவிப்பாரா என அறிய விரும்புகிறேன்.

அமைச்சர் : பேரவை தலைவர் அவர்களே, பேரவைத் துணைத் தலைவர் கேள்வி எழுப்புகின்ற போது தடைகள் பல ஏற்படுத்துகிறார் என்று குறிப்பிட்டார். உண்மைதான். தடைகள் பல உண்டு என்றாலும் அதை தகர்த்தெறிகின்ற திடந்தோள்கள் நம்முடைய முதல்வருக்கு உண்டு. என்பதை மெய்ப்பிக்கின்ற வகையில் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கிடையே வெற்றியை பெற்று வருகிறோம். சமீபத்தில் கூட மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர், தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக நேரடியாக வந்து களத்தில் ஆய்வு செய்து 34 பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மாண்பமை நீதிபதிகள் நேரடி கள ஆய்வுக்கு பின் 19 பணிகளுக்கு அனுமதி அளித்திருக்கின்றனர். இந்த ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு அந்த திருக்கோயிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை விட தற்போது சுமார் 70% கூடுதலாக பக்தர்களின் வருகை கூடுதலாகி இருக்கின்றது.

முதலமைச்சர் , அந்த மாவட்டத்தின் அமைச்சர் அருமை அண்ணன் வேலு அவர்களையும், அந்த மாவட்டத்தை சேர்ந்த துணை சபாநாயகர் அன்பிற்கினிய பிச்சாண்டி அவர்களையும், துறையின் அமைச்சரான என்னையும் மூன்று பேர் குழுவாக நியமித்து தினந்தோறும் திருவண்ணாமலை திருக்கோயிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அதன்படியே பணிகளை மேற்கொண்டு வருகிறோம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் கூடுதலாக 64.30 கோடி ரூபாய் செலவில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகின்றது.

அதேபோல பொதுப்பணித்துறை சார்பில் அருமை அண்ணன் வேலு முதலமைச்சர் அவர்களின் அனுமதியை பெற்று 12 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியினை (RO Plant) ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும், கிரிவலப் பாதையில் சுமார் 12 இடங்களில் கழிப்பிட வசதிகள் பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களின் முயற்சியால் சி.எஸ்.ஆர். நிதியுதவி மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட முதலமைச்சர் திருவண்ணாமலை திருக்கோயிலில் கோபுரங்கள் மற்றும் விமானங்கள் மின்னொளியால் ஜொலிக்கின்ற வண்ணம் ஏழரை கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை துவக்கி வைத்து இன்றைக்கு கோபுரங்கள் மின்னொளி பெற்று பிரகாசமாக இருக்கின்றது.

அதோடு மட்டுமல்ல இத்திருக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றபோது நீண்ட க்யூ வரிசையில் காத்திருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு சுமார் ரூ. 4.50 கோடி செலவில் க்யூ வரிசை காம்பளக்ஸ் ஏற்படுத்துகின்ற பணியும் தற்போது நடைபெற்று வருகின்றது. போர்க்கால அடிப்படையில் பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றுகின்ற ஒரு அரசாக, ஒரு துறையாக இந்த துறை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பெருந்திட்ட வரைவின் வாயிலாக இத்திருக்கோயிலின் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலையில் அந்த பணிகளை முதலமைச்சர் துவக்கி வைக்க இருக்கிறார்கள் என்பதை பேரவை தலைவர் வாயிலாக துணை தலைவர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.