பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டப்பேரவை இன்று கூடுகிறது: வெள்ளிக்கிழமை வரை கூட்டத்தொடர் நடைபெறும்
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் வருகிற வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். சபாநாயகர் அப்பாவு தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இன்று காலை பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. மூத்த அமைச்சர்கள், அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சபாநாயகர் அப்பாவு பேட்டி: அலுவல் ஆய்வு குழு கூட்டம் முடிந்தபிறகு சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது: இன்று (செவ்வாய்) முதல் 17ம் தேதி (வெள்ளி) வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடியதும், மறைந்த 8 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக கரூரில் நடந்த துயர சம்பவம், மறைந்த முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தன், முன்னாள் ஜார்கண்ட் சட்டமன்ற உறுப்பினர் சிபுசோரன், நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி, மேலும் ஐஏஎஸ் அதிகாரி மருத்துவர் பியூலா வெங்கடேசன் ஆகியோருக்கு சட்டமன்றத்தில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்.
அதைத்தொடர்ந்து வால்பாறை சட்டமன்ற பேரவை உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பேரவை நிகழ்ச்சியில் அன்றைய தினம் ஒத்திவைக்கப்படும். அதன் தொடர்ச்சியாக 15ம் தேதி (நாளை) 20252026ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை பேரவைக்கு அளிக்கப்படும். தொடர்ந்து மறுநாள் விவாதம் நடைபெறும். 17ம் தேதி (வெள்ளி) மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலுரை மற்றும் வாகெடுப்பு நடைபெறும். 15, 16, 17ம் தேதி ஆகிய மூன்று நாட்களும், கூட்டம் தொடங்கியதும் கேள்வி-நேரம் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர். பாமகவில் பிளவு ஏற்பட்ட பிறகு அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திக்கும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.
சட்டமன்ற பாமக கட்சி தலைவர் ஜி.கே.மணியை மாற்ற வேண்டும் என்று அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துள்ளனர். இதனால், இருக்கை மாற்றம் இருக்குமா? என்பதும் இன்று தெரியவரும். அதுபோல, அதிமுக தலைமையுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் சந்திக்கும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இதுவாகும். இந்த கூட்டத்தொடரில் காசாவில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. மேலும், கரூரில் 41 பேர் பலியான சம்பவம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்தும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற பரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டம் கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.