Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்டப்பேரவையில் பேச அனுமதிப்பதில் மோதல்: ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ பேச அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு

 

சென்னை: பாமக சட்டமன்றக் குழுத் தலைவராக ஜி கே மணியை மாற்றக்கோரி சபாநாயகரிடம் கொடுத்த கடிதங்களின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அன்புமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று கோல்ட்ரிப் மருந்து விவகாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் ராமதாஸ் தரப்பு எம் எல் ஏ அருளுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் மூவரும் சபாநாயகரின் இருக்கை முன்பாக கீழே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது விளக்கமளித்த சபாநாயகர், சட்டப்பேரவையை பொறுத்தவரை எதிர்க்கட்சி வரிசையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும் தான் குறிப்பிட்ட இடத்தில் இருக்கை ஒதுக்குவதற்கான விதிமுறை இருப்பதாகவும், மீதமுள்ள உறுப்பினர்களுக்கு இருக்கை ஒதுக்குவது தன்னுடைய முடிவு எனவும், பாமகவின் உட்கட்சி பிரச்னைகளை சட்டமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் 8 உறுப்பினர்கள் இருக்கும் கட்சி ஒரு குழுவாக மட்டுமே செயல்படும் எனவும், தன்னிடம் கொடுத்த கடிதம் பரிசீலனையில் இருக்கும் நிலையில் அன்புமணி தரப்பு எம் எல் ஏக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கேட்டுக் கொண்டார். ஆனால் தொடர்ச்சியாக அன்புமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், உடனடியாக இருக்கைக்கு செல்லவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். தங்களின் கோரிக்கையை பரிசீலிக்காத சபாநாயகரின் செயல்பாடுகளை கண்டித்து அன்புமணி ஆதரவு எம் எல் ஏக்கள் வெளிநடப்பு செய்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.