Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரையில் இருந்து தொடங்கிய நயினார் பிரசாரத்தை புறக்கணித்த எடப்பாடி: பாஜ தேசியத் தலைவர்களும் பங்கேற்கவில்லை

மதுரை: மதுரையில் பாஜ மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத் துவக்க விழாவை, அந்தக் கட்சியின் தேசியத்தலைவர்களே புறக்கணித்த நிலையில், கூட்டணி கட்சித்தலைவரான எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்காமல் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 2026ல் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசார பணிகளில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மதுரையில் நேற்றிரவு துவக்கினார். மதுரை அண்ணா நகர் பகுதியில் நடந்த பிரசார துவக்க நிகழ்ச்சியை பாஜவின் தேசியத்தலைவர் ஜேபி.நட்டா தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று ஜே.பி.நட்டாவுக்கு நேரில் அழைப்பு விடுத்தார். ஆனால், திடீரென ஜே.பி.நட்டா மதுரை பயணத்தை ரத்து செய்தார்.

இதனால், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரசாரத்தை தொடங்கி வைப்பார் என கூறப்பட்டது. ஆனால் அவரும் நேற்று கலந்து கொள்ளவில்லை. மேலும், முக்கியக் கூட்டணி கட்சியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு சேலத்திற்கு சென்று நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பு விடுத்திருந்தார். அவரும் பங்கேற்காமல் புறக்கணித்தார். பெயருக்கு மதுரை மாவட்டச் செயலாளர்கள் செல்லூர் ராஜூ, உதயக்குமார், ராஜன் செல்லப்பா ஆகியோரை மட்டும் அனுப்பியிருந்தார்.

கடந்த சில நாட்களாக நடிகர் விஜய்யின் தவெக கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் எடப்பாடி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். தவெகவுடன் கூட்டணி அமைந்தால், பாஜவை கூட்டணியில் இருந்து கழட்டி விடுவார் என்றும் பேசப்படுகிறது. இதன் காரணமாக எடப்பாடி இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தாரா என பாஜ நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. எடப்பாடி மற்றும் பாஜ தேசியத் தலைவர்கள் யாருமே பிரசார துவக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்,

மாநில முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, பாஜ பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, மகாராஷ்டிரா எம்எல்ஏ கேப்டன், கூட்டணி கட்சிகள் சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, தமாகா தலைவர் ஜிகே வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நேற்றுக்காலையில் நடந்த நயினார் நாகேந்திரனின் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பிரசார நிகழ்ச்சிக்காக மதுரை வந்த நயினார் நாகேந்திரன் நேற்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லாத நிலையில், நயினார் நாகேந்திரன் பிரசார சுற்றுப்பயணத்தில் பொதுக்கூட்டம் நடத்தி அதன்மூலம் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களை சந்திக்கிறார். இன்று மாலை சிவகங்கை, 14ம் தேதி செங்கல்பட்டு, 15, 16ம் தேதிகளில் சென்னை, 28ல் திண்டுக்கல் கிழக்கு, நவ. 13ல் ராமநாதபுரம், நவ. 14ல் விருதுநகர் என ஒவ்வொரு நாளும் ஒரு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். முதல்கட்ட பிரசாரத்தை நவ. 22ல் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நிறைவு செய்கிறார்.

* திருவள்ளுவருக்கு மீண்டும் ‘காவி’

பாஜ தேர்தல் பிரசார பயணம் மேற்கொள்வதற்கென ஒரு பஸ் நவீன வசதிகளுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. மழை காலம் என்பதால், மேலே நின்று பேசும் நேரத்தில் மழை வந்தால் நனையாதிருக்க சிறப்பு கூரை அமைக்கப்பட்டு, இதில் செங்கோலுடன் பிரதமர் மோடி, மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சித்தலைவர் நட்டா, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரின் படங்களும் இடம்பெற்றுள்ளன. காவி உடையணிந்த திருவள்ளுவர் படத்தையும் இந்த வாகனத்தில் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.

* கூட்டம் தொடங்கியதும் காணாமல் போன கூட்டம்

பாஜ பிரசார பொதுக்கூட்ட மேடையில் திமுகவை விமர்சித்து குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. படம் போட்டதுமே, கூட்டத்திற்கு இடையில் பொதுமக்கள் பலரும் மெல்ல எழுந்து வெளியேறத் துவங்கினர். நிகழ்ச்சி அமைப்பாளர் ஒருவர், மைக்கில் ‘யாரும் கலைந்து செல்ல வேண்டாம்’ என மீண்டும், மீண்டும் கேட்டுக்கொண்டபோதும், இதனை கண்டுகொள்ளாமல் பலரும் எழுந்து சென்றபடியே இருந்ததில் முக்கிய தலைவர்கள் பேசும்முன்பே பெரும்பகுதி இருக்கைகள் காலியாகின.

* கரூர் போன்ற சம்பவம் இனி நடக்கவே கூடாது 41 பேர் என்ன பாவம் செய்தார்கள்? நயினார், அண்ணாமலை வேதனை

பிரசார பயண துவக்க பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசும்போது, ‘‘கண்ணகி நீதி கேட்ட மண்ணில் இருந்து இந்த பயணத்தை மேற்கொள்கிறேன். இது யாத்திரை அல்ல, நீதி கேட்கும் சுற்றுப்பயணம். எங்களுக்கு சிரித்து பேசவும் தெரியும், கடித்து பேசவும் தெரியும். எல்லோரும் சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும். எல்லோரும் என்றால் எல்லோரும் தான். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

கரூர் போன்ற சம்பவம் இனி நடக்கவே கூடாது. கரூரில் தாயின் கண் முன்னால் குழந்தை இறந்துள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டில் 5 லட்சம் பேர் கூடினார்கள், அமைதியாக முடிந்தது’’ என்றார். பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது, ‘‘ஐந்து நிமிடமாவது அரசியல் பேச வேண்டுமென நயினார் நாகேந்திரன் என்னிடம் கூறினார். 167 தொகுதிகளை தாண்டி எடப்பாடி பழனிசாமி யாத்திரை நடந்துள்ளது. 67 தொகுதி மீதியுள்ளது.

நயினார் நாகேந்திரன் 67 கட்சி மாவட்ட வாரியாக செல்கிறார். மக்களை சந்திக்க வேண்டும். கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். என்ன பாவம் செய்தார்கள்? தியேட்டருக்கு செல்லுங்கள் படம் பாருங்கள். சினிமாவில் நடிப்பவர்கள் நன்றாக ஆள்வார்கள் என நினைத்தால் அது சரியல்ல. குழந்தைகள், பெண்கள் எங்களது இந்த பிரசார யாத்திரைக்கு வந்தால், நிச்சயம் பாதுகாப்பாக திரும்பி செல்வார்கள்’’ என்றார்.

ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, ‘‘தமிழகத்திற்கு மோடி ரூ.16 லட்சம் கோடி கொடுத்துள்ளார். 8 வந்தே பாரத் ரயில் கொடுத்துள்ளார். சென்னையில் வந்தேபாரத் ரயில் உருவாக்கப்படுகிறது. ரயில்வே, சாலை, விமான நிலைய. மேம்பாடுகளை செய்துவருகிறார். ஆனால் மோடி தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்கின்றனர். தமிழின் பெருமையை ஐநா சபையில் பேசியவர் பிரதமர் மோடி. தமிழ்மொழி, பண்பாடு கலாச்சாரத் தூணாக பிரதமர் மோடி இருக்கிறார்’’ என்றார்.

* அண்ணாமலை ஆதிக்கம்

பொதுக்கூட்டம் நடந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களில் பாஜ முன்னாள் தலைவரான அண்ணாமலை புகைப்படங்களே அதிகளவில் இருந்தன. இதனால் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘கரூர் துயர சம்பவத்தில் பலியானவர்களுக்கு தமிழக பாஜ தலைவராக உள்ள நயினார் நகேந்திரன் நிதியுதவி தொடர்பாக பேசி முடிவாக அறிவிக்கலாம் என்று இருந்தார். அப்போதும், கரூர் மாவட்ட பாஜ சார்பாக நிதியுதவி வழங்கப்படும் என்று அண்ணாமலை முந்தி கொண்டு நிதியுதவி அறிவித்தார். இப்போதோ அண்ணாமலை படத்தை பெரிதாகப் போட்டு பிளக்ஸ்கள் வைத்து, நயினாரை டம்மியாக்க நினைக்கின்றனர்’’ என வேதனைப்பட்டனர்.

* அதிமுக கூட்டணியில் பாஜ முதல்வர் வேட்பாளர்?

பாஜ தலைமையில் கூட்டணி ஆட்சியை அமித்ஷா தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியோ அதிமுக தலைமையில்தான் ஆட்சி அமையுமென தெரிவித்து வந்தார். நேற்றைய மதுரை பாஜ பிரசார பொதுக்கூட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில், ‘முதல்வர் வேட்பாளர் நயினார் நாகேந்திரன்’ என குறிப்பிடப்பட்டிருந்தது கூடுதல் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தலைமைச் செயலகம் முன்பு நயினார் நாகேந்திரன் நிற்பது போன்றும் பேனர்களில் படங்கள் இடம் பெற்றிருந்தன.

* ‘டிடிவி அளந்து பேச வேண்டும்’

மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை, செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பாஜ கூட்டணி குறித்து டிடிவி.தினரகன் கூறியது தொடர்பாக நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. டிடிவி.தினகரன் பேச வேண்டிய வார்த்தைகளை அளந்து பேசவேண்டும். நேரம் வரும்போது அது குறித்து விரிவாக பேசுகிறேன்.

அதிமுக கூட்டத்திற்கு தவெக கொடியுடன் நிர்வாகிகள் வருவதாக கூறுவதில், எது உண்மை எது பொய் என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டில் சிலர் தங்கள் பாக்கெட்டில் நாலு கட்சிகளின் உறுப்பினர் கார்டு வைத்திருப்பார்கள். கூட்டணியை பொருத்தவரை சம்பந்தப்பட்ட தலைவர்கள் அறிவிப்பார்கள்’ என்றார்.

* ‘கூட்டணின்னு வந்துட்டா... ஒவ்வொருவரிடமும் ஐடியா கேட்டு செயல்படமுடியாது’

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கைத்தறி நகரில் நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சியின் பிரசார பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரனிடம், ‘எடப்பாடி பழனிசாமியை தோளிலிருந்து இறக்கினால், இன்னும் விரைவாக பாஜக செல்லலாம் என்று டிடிவி.தினகரன் கூறியிருக்கிறாரே?’ என்ற நிருபர்களின் கேள்விக்கு, ‘‘டிடிவி.தினகரன் எங்களது கூட்டணியில் இருந்தவர் தான்.

கூட்டணி என வரும்போது ஒவ்வொருவரின் ஐடியாவையும் கேட்டுவிட்டு செயல்பட முடியாது. எடப்பாடி பழனிசாமி பிரசாரக் கூட்டத்தில் தவெக கொடி பிடித்தது குறித்து கேட்கிறீர்கள். தொண்டர்கள் அவர்களாகவே சேர்வது தான் இயற்கையான கூட்டணி’ என்றார்.