Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு சபாநாயகர் தலைமையில் இன்று கூடுகிறது: குளிர் கால கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை

சென்னை: சட்டசபை அலுவல் ஆய்வு குழு சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று கூடுகிறது. இதில் சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 6ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி, தனது உரையை வாசிக்காமல் சென்று விட்டார். தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்றது.

அதன்பிறகு, மார்ச் 14ம் தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. அதனை தொடர்ந்து, மார்ச் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை இரண்டு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது. அதன் பின்னர், மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. மொத்தம் 55 துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று முடிந்தது.

அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. அதன் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் 14ம் தேதி கூடும் என்று சபாநாயகர் அறிவித்து இருந்தார். இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று(திங்கட்கிழமை)நடக்கிறது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இதில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பார். அலுவல் ஆய்வுக்குழு எடுக்கும் முடிவுகளின்படி சட்டசபை கூடும் நாட்கள் நிர்ணயம் செய்யப்படும். அநேகமாக 3 அல்லது 4 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

நாளை காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியதும், மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 8 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். மேலும், வால்பாறை எம்.எல்.ஏ.அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும் கடந்த 27ம் தேதி கரூரில் தவெக கூட்டத்தில் விஜய் பேசியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரின் மரணம் தொடர்பான இரங்கல் குறிப்பையும் சபாநாயகர் அப்பாவு வாசிப்பார் என்றும், அவர்களுக்கும் சட்டசபையில் அஞ்சலி செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த இரங்கல் நிகழ்ச்சியோடு அன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். அதைத்தொடர்ந்து அவை நடக்கும் நாட்களில் பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முக்கிய பிரச்னைகளில் அரசின் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய வாய்ப்பு உள்ளது. 2025-2026ம் ஆண்டு கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை, சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

அது மட்டுமல்லாமல் பாமகவில் பிளவு ஏற்பட்ட பிறகு அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திக்கும் முதல் சட்டமன்றம் கூட்டத்தொடர் இதுவாகும். அதுபோல, அதிமுக தலைமையுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் சந்திக்கும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரும் இதுவாகும். மேலும் கரூரில் 41 பேர் பலியான சம்பவம் குறித்தும் அவையில் குரல் எழுப்பப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த கூட்ட தொடரில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது.

* தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 6ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி, தனது உரையை வாசிக்காமல் சென்று விட்டார்.

* மார்ச் 14ம் தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது.

* 6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. அதன் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் 14ம் தேதி(நாளை) கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருந்தார்