டாக்கா: வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி வந்தார் ஷேக் ஹசீனா. அப்போது, மாணவர் போராட்டங்களை ஒடுக்க மனிதாபிமான மீறல் குற்றங்களை ஏவியதாக புதிதாக அமைந்த இடைக்கால அரசு, ஷேக் ஹசீனா மீது குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக ஷேக் ஹசீனா மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்குகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், போராட்டம் நடத்தும் மாணவர்களை ஒடுக்க ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தவும், போராட்டக்காரர்களை சுடவும் பாதுகாப்பு படையினரிடம் ஹசீனா கூறிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிபிசி உறுதிப்படுத்திய ஆடியோவின்படி, அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துமாறு அவர் நேரடியாக கட்டளையிட்டார். இந்த ஆடியோ, ஜூலை 18ம் தேதி டாக்காவில் உள்ள வங்கதேச பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான கணபவனில் இருந்து செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பின்போது பதிவு செய்யப்பட்டது. இந்த அழைப்பிற்கு பிறகு டாக்கா முழுவதும் ராணுவ நிலை துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் பதிவுகளை மேற்கோள் காட்டியுள்ளது. இந்த வன்முறையில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐ.நா. உண்மை கண்டறியும் குழு கண்டறிந்துள்ளது.
தடயவியல் ஆய்வாளர்களும் இந்த ஆடியோ உண்மையானது என்பதை உறுதிப்படுத்தினர். ஷேக் ஹசீனா, தற்போது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் இனப்படுகொலைக்காக விசாரணையில் உள்ளார். குற்றவாளிஎன நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது.