Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இலைக்கட்சி தலைவரின் ஊரில் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சமூகவலைத்தள செய்தியை காட்டி மிரட்டும் டுபாக்கூர்களை கண்டு அரசு அதிகாரிகள் அலறுகிறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மாவட்டத்தில் நிருபர்கள் போர்வையில் சுற்றும் கும்பல் ஒவ்வொரு அரசு அலுவலகமாக சென்று தாங்கள் இன்ன நிருபர் என்று கூறிக் கொண்டு, செல்போனில் பிடிஎப் பைலாக வைத்துள்ள போலி பத்திரிகை பக்கத்தை காட்டி மிரட்டுவது தொடர்ந்து வருகிறது.. குறிப்பாக, இந்த டுபாக்கூர்கள் ஆர்டிஓ சோதனை சாவடிகள், டாஸ்மாக் மண்டல அலுவலகம், பதிவு, மாநகராட்சி, மாநகராட்சி மண்டல, நகராட்சி, பேரூராட்சி, மின்வாரிய, பிடிஓ அலுவலகங்கள் மற்றும் ரேஷன் கடைகள் என எல்லா இடங்களிலும் நுழைந்து பணம் கேட்டு மிரட்டுவதும், பணிய மறுத்தால் வாட்ஸ்அப், பேஸ்புக் என சமூக வலைதள குழுக்களில் தங்களின் பிடிஎப் பத்திரிகையில் குறிப்பிட்ட அதிகாரியை வைத்து கட்டுரையை அடித்து பரப்புவதை முழுநேர தொழிலாக கொண்டுள்ளார்களாம்.. அரசு அதிகாரிகள் மட்டுமின்றி ஊராட்சி மன்ற தலைவர்களையும் இவர்கள் விட்டு வைப்பதில்லையாம்.. அதற்கு பயந்தே அவர்கள் கேட்கும் பணத்தை அவர்கள் குறிப்பிடும் இடத்திலோ அல்லது ஜிபே மூலமோ அனுப்பி வைத்து விடுகிறார்களாம்.. இந்த நிலையில்தான் அரசு அலுவலர் சார்ந்த சங்கங்கள், மின்வாரிய ஊழியர் சங்கங்கள் இணைந்து இப்பிரச்னையை தலைமை செயலகம், உள்துறை செயலகம் வரை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார்களாம்.. இதுபோன்ற டுபாக்கூர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஒலிக்க தொடங்கியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்கா நகரத்து தொகுதிகளை கைவிட்டு, அல்வா மாவட்டத்திற்கு தாவிய டாக்டர் பற்றி சொல்லுங்க..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தூங்கா நகர் இலைக்கட்சியின் இரு மாஜிக்கள் மற்றும் ஒரு எம்எல்ஏவுடன் போராடிய டாக்டரானவர், தனக்கான தொகுதியையோ, கட்சி செயலாளர் பதவியையோ அடைந்து விடமுடியும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டாராம்.. அத்தோடு, தூங்கா நகரத்து தொகுதிகளான வடக்கும், தெற்கும் கூட்டணி பங்கீட்டில் மலராத கட்சிக்கு போய் விடும் என்ற நிலை இருப்பதால், தான் நிற்பதற்கே இடமில்லாத நிலை ஏற்பட்டு விட்டதை நினைத்து ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறாராம்.. எனவே, டாக்டரானவர், இப்போது அல்வா மாவட்டத்து பகுதியில் இறங்கி, அங்கு சீட்டு வாங்கி விடலாம் என்று ஜரூராக வேலை பார்த்து வருகிறாராம்.. அல்வா மாவட்டத்தின் பூத் கமிட்டி பொறுப்பாளராகி இருக்கிற டாக்டரானவர், அங்குள்ள புரத்தில் முடியும் ஐந்தெழுத்து தொகுதியை குறிவைத்து, கமிட்டி பணியுடன், தொகுதிக்கும் சேர்த்து வேலை பார்க்க ஆரம்பித்து விட்டாராம்.. சேலத்துக்காரர் இந்த தொகுதிக்கு சுற்றுப்பயணம் வந்ததை சாதகமாக்கி, தாறுமாறாக செலவழித்து தன்னை அடையாளம் காட்டிக் கொண்டாராம்.. தூங்கா நகரம் புறக்கணித்த சோகத்தில் இருந்தவர், அல்வா நகரத்தை நம்பி, அங்குள்ள பூத்களில் தனது ஆட்களை போட்டது துவங்கி, கொஞ்சமிருக்கும் சமூக ஓட்டுகள் வரை ஒரு சில விஷயங்கள் தனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு காரியமாற்றி வருகிறார் என்கின்றனர் ஆதரவாளர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அலுவலகத்தையே வீடாக மாற்றிய அதிகாரியை கண்டு ஓட்டம் பிடிக்கிறாங்களாமே பெண் ஊழியர்கள்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘புரம் என்ற மாவட்டத்தில் பொதுப்பணியின் நீர்வளத் துறையில் திட்டங்கள் உருவாக்க பிரிவில் பணியாற்றி வருபவர் தனது பெயரிலேயே அழகை வைத்திருப்பவர். இந்த அதிகாரியின் நடவடிக்கையால் பெண் ஊழியர்கள் ஓட்டம் பிடிக்கிறார்களாம்.. 3 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு பணியாற்றும் அதிகாரி அந்த அலுவலகத்திலேயே படுக்கை அறை முதற்கொண்டு வைத்திருக்கிறாராம்.. வாடகை வீடு எடுப்பதற்கு பதிலாக அலுவலகத்தையே வீடாக மாற்றியிருக்கும் அவர், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களை இரவு 10 மணி வரை இருக்கச் சொல்லி தனது வீட்டில் பணியாற்றுவதைபோல் அவர்களை கட்டாயப்படுத்தி வருகிறாராம்.. இதனை வெளியே சொன்னால் சிஆரில் கைது நடவடிக்கை எடுத்து விடுவேன் என்று மிரட்டுவதால் பெண் ஊழியர்களும், கீழ்மட்ட அதிகாரிகளும் வேறுவழியில்லாமல் விழிபிதுங்கி நிற்கிறார்களாம்.. அதேவேளையில் அதிகாரியின் இந்த விநோதங்கள் குறித்து ரகசிய புகார் கடிதங்கள் மேலிடத்துக்கு பறந்துள்ளதாம்.. எப்படியாவது விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையில் அச்சத்துடனேயே பயணிக்கிறாங்களாம் பெண் ஊழியர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மம்மி பிறந்த நாளை கொண்டாட இலைக்கட்சி தலைவரின் ஊரிலேயே அனுமதி இல்லையாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஒரே ஆதங்கமாகவே இருக்காம்.. மாநகர் முழுவதும் வட்டம், பகுதி என எல்லா நிர்வாகிகளும் புதியவர்களாக இருக்காங்களாம்.. அவர்கள் விழுந்து கிடக்கும் கட்சியை மீட்டெடுக்க குதிரை பலங்கொண்டு ஓடிக்கிட்டிருக்காங்களாம்.. இதற்கிடையில் மூத்த நிர்வாகிகள் எல்லோருக்கும் நூறில் ஒன்று என மாநில பதவிகளை கொடுத்து இலைக்கட்சி தலைவர் அழகு பார்க்காறாம்.. ஆனால் அவர்களோ, மாநில பதவி கொடுத்து எங்களை உள்ளூர் அரசியலில் இருந்து ஓரங்கட்டிட்டாங்களேன்னு நொந்துபோய் இருக்காங்களாம்.. கட்சியில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் எங்களை அழைக்காமல் நடத்துறாங்களேன்னு மனம் முழுவதும் விசும்பலாகவே இருக்காங்களாம்.. ஆனால் இவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்க தான் முன்னுக்கு வர்றாங்க.. பத்து பைசா செலவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்காம்.. அதே நேரத்தில் மம்மி பிறந்த நாளுக்கு ஏழைகளுக்கு கொடுப்பதற்காக 2 ஆயிரம் புடவையை வாங்கினாராம் சூரமங்கலத்தில் ஒரு நிர்வாகி. ஆனால் அவருக்கு விழா நடத்தி வழங்க, மேலிடம் அனுமதி வழங்கலையாம்.. இன்று அனுமதி கிடைக்கும், நாளை வாய்ப்பு இருக்குதுன்னு அந்த நிர்வாகியும் காத்துக்கிடந்தாராம்.. இவ்வாறு புடவை வழங்கினால் அந்த நிர்வாகியின் செல்வாக்கு உயர்ந்து போகுமுன்னு நினைத்த பகுதி செயலாளர் ஒருவர் அனுமதி வழங்கவே கூடாதுன்னு ஒத்தைக்காலில் நின்றதோடு அதில் ஜெயிச்சிட்டாராம். ஐந்து மாதமாகியும் வாங்கிய புடவைகள் குடோனிலேயே கிடந்துச்சாம்.. பொறுத்தது போதும் என்ற முடிவுக்கு வந்த அவர், அவரது வார்டில் உள்ள மாரியம்மன் பண்டிகையில் ஏழைமக்களுக்கு வழங்கிட்டாராம். கட்சியை வளர்க்க கைகாசு போட்டு ஏற்பாடு செஞ்சா, அதற்கு அனுமதியே கொடுக்கல. இதெல்லாம் இலைக்கட்சி தலைவருக்கு தெரியுமா என்ற கேள்வியோடு இருக்கிறாராம் அந்த நிர்வாகி..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.