Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலைக்கட்சியில் ரகசியமாக நடந்து வரும் ஓரங்கட்டும் நகர்வுகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘விவசாய பல்கலையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தப்பட்டிருப்பதாக பேச்சு அடிபடுதே தெரியுமா..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘மான்செஸ்டர் மாநகரில் செயல்பட்டு வருகிற விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பல்கலையில் பல கோடி மதிப்பிலான மரங்கள் சமீப நாட்களில் மாயமாகி இருக்கிறதாம்.. இந்த பல்கலைக்கழகம் 535 ஹெக்டர் பரப்பில் இருக்கு.. பல்கலைக்கழக வளாகத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் இருந்ததாம்.. இதுல 12,500 மரங்கள் நம்ம ஊரு மரங்கள், 3,500 மரங்கள் அழகிற்காக வளர்க்கும் வெளிநாட்டு மரங்களாம்..

துணைவேந்தர் இல்லாத நிலையில், இப்போ பல்கலை வளாகத்தில் இருக்கிற மரங்களை சிலர் வெட்டி கடத்தி விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்திருக்கு.. நானோ டெக்னாலஜி, பொறியியல் கல்லூரி, பல்கலை நுழைவாயில் பகுதியில் இருந்த மரங்கள் எல்லாம் மாயமாகி இருக்காம்.. மாயமான மரங்கள் எல்லாம் பழமையான மரங்களாம்.. இதுவரைக்கும் பல கோடி ரூபாய் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டிருக்கலாம்னு சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பவுடர் மேட்டர்ல பேரம் பேசி வாங்கிய மூன்று பேரை மாத்தின மேட்டர்தான் இப்போ பரபரப்பு பேச்சாக போய்கிட்டிருக்குதாமே..’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மாவட்டத்துல இருக்குற குடியேற்றம் நகரம், தமிழ்நாடு ஆந்திரா ஸ்டேட் பார்டர்ல இருக்குது.. இதனால போதை வஸ்துக்கள், போதை ஊசின்னு சேல்ஸ் அதிமாக நடக்குதாம்.. இதனை தடுக்க காக்கிகள் கண்காணிச்சு நடவடிக்கை எடுத்து வர்றாங்க.. இந்த நிலையிலத்தான் போதை பவுடர் கடத்தல் சம்பவத்துல பல கிலோ பவுடர் பறிமுதல் செய்து குடியேற்றம் காக்கிகள் ரெண்டு பேரை கைது செஞ்சாங்க.. பவுடர் விலை பல லட்சமாம்.. இதனால கணக்கு காட்ட சில கிராம் பவுடரைத்தான் கணக்கு காட்டுனாங்களாம்.. இந்த பவுடர் கடத்தல்ல குடியேற்றத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பேரனுக்கு தொடர்பு இருக்குறதாக விசாரணையில திடுக் தகவல் வந்துச்சாம்.. அப்புறம், அந்த லிமிட் ஸ்டார் காக்கிகள் தொழிலதிபர்கிட்ட பேரம் பேசி, பல லட்சங்களை வாங்கிட்டாங்களாம்.. இந்த வீடியோவும் தகவலும், மாவட்ட அதிகாரிக்கு ரகசியமாக போய்டுச்சாம்.. அப்புறம், பேரம் பேசி வாங்கி 3 காக்கி அதிகாரிகளையும் ஏஆர்க்கு மாத்திடிட்டாங்களாம்.. காக்கிகள் மேல நடவடிக்கை எடுத்தாங்க.. ஆனால தொடர்புள்ள நபர் மேல என்ன நடவடிக்கை எடுத்தாங்கன்னு பொருத்திருந்துதான் பார்க்கணும்னு விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்கிறாங்க.. இந்த பவுடர்மேட்டர் தான் இப்போ பரபரப்பு பேச்சாக போய்கிட்டிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சியில் ரகசியமாக நடந்து வரும் நகர்வுகளால் தலைமை மீது மூத்த நிர்வாகிகள் எல்லாம் ரொம்பவே அதிருப்தியில் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தில் இலை கட்சியில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்ட தலைமை முடிவு செய்திருக்காம்.. அதற்கான வேலைகளும் ரகசியமாக நடந்துகிட்டு வருதாம்.. ரகசியமாக நடந்து வரும் நகர்வுகளால் மூத்த நிர்வாகிகள் தலைமை மீது அதிருப்தியில் இருக்காங்களாம்.. அதுவும் மாநகர முக்கிய நிர்வாகியின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்காம்.. இவர் கொடுக்கும் ரிப்போர்ட் படி தான், நெற்களஞ்சியம் மாவட்டத்தில் இலை கட்சியில் ஓரங்கட்டும் வேலைகளும் நடக்குதாம்.. தனக்கு வேண்டிய நபர்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்க சேலத்துக்காரரும் முடிவு செய்திருப்பதாக இலைகட்சிக்குள்ளேயே அரசல் புரசலாக பேச்சு அடிபடிகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பார் காரங்கக்கிட்ட மூவாயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம்னு கூட்டிட்டே போய்க்கிட்டிருக்கும் க்ரைம் காக்கி இன்ஸ்.. தொல்லை தாங்க முடியலையாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘பனியன் சிட்டி வடக்கு க்ரைம் போலீசில் கறாரான இன்ஸ்.., ஒருத்தர் இருக்காரு.. அவரு வேலைன்னு வந்துட்டா தீயா... மாறிடுவாரு... இந்த சூழல்ல, எல்லை தாண்டி, வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்டு இருக்கிற ‘பார்’ல வசூல் வேட்டையில ஈடுபட்டிருக்காரு.. வழக்கமா ‘பார்’...காரங்க ஒவ்வொரு கடைக்கும் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்.,க்கு தான் கவனிப்பு செய்து வந்திருக்காங்க.. வேற வழி தெரியாம ‘பார்’..காரங்க மாதம் மூன்றாயிரம் கொடுத்துருக்காங்க.. ஆனாலும், அந்த இன்ஸ்..க்கு ஆசை விடலை... அடுத்த மாசத்துல இருந்து ஐந்தாயிரமா கொடுக்கணும்...ன்னு ஆர்டர் போட்டுக்காரு...

அதையும் ‘பார்’..காரங்க ஏத்துகிட்டு ஐந்தாயிரமா கொடுத்துருக்காங்க... மறுபடியும் அந்த இன்ஸ்., ‘பார்’காரங்க கிட்டபோய், இனி பத்தாயிரம் கொடுக்கணும்... இல்லைன்னா பொய் கேஸ் போட்டு, ரிமாண்ட் பண்ணீருவேன்.. னு மிரட்டியிருக்காரு... உடனே கோபப்பட்ட ‘பார்’...காரங்க அதெல்லாம் தரமுடியாதுனு சொல்லிட்டாங்களாம்.. அதனால.. கோபம் அடைந்த க்ரைம் இன்ஸ்., இரவு ரோந்து பணியின்போது, ஒரு ‘பார்’க்குள் புகுந்து ஊழியரை தர்மஅடி கொடுத்து இழுத்துட்டு வந்துருக்காரு.. இந்த சிசிடிவி கேமரா காட்சி வைரலாகிவிட்டதாம்.. இதையடுத்து, நடந்தது என்ன...ன்னு போலீஸ் கமிஷனர் விசாரித்து, அவரு மேல நடவடிக்கை எடுத்தாராம்... ஆனாலும் இன்ஸ்... திருந்தவில்லையாம்.. தொல்லை மீண்டும் தொடருதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.