இலைக்கட்சி தலைவருக்கு போட்டியா அவரது ஊருக்கே போய் கெத்துக்காட்ட திட்டமிட்டிருக்கும் கோபிக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘பல்கலை தொலைநிலை கல்வி இயக்கக தனியார் வங்கி கணக்கில் பல கோடி முறைகேடு நடந்த விவகாரத்தில் சிலர் சிக்கப் போறதா சொல்றாங்களே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் கடந்த 2013 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் அக்கல்வி இயக்க தனியார் வங்கி கணக்கில் இருந்து போலி பில்கள் மூலம் சுமார் ரூ.60 கோடி அளவிற்கு முறைகேடு நடந்ததாக புகார்கள் கிளம்பின.. சில மாதங்களுக்கு முன்பு நடந்த தணிக்கை ஆய்வில் இது வெளிவந்தது.. இந்த விவாகரத்தை மூடி மறைக்க தணிக்கைத் துறையில் உள்ள மகிழ்ச்சியின் பெயர் கொண்ட முக்கிய அதிகாரி ஒருவர் சுமார் ரூ.10 கோடி வரை பேரம் பேசி வருகிறாராம்.. இதுவும் பல்கலைக்கழக சுவருக்குள் சுற்றி முடித்து தற்போது விஜிலென்ஸ் வரை சென்றுள்ளதாம்.. இதில் முதல்கட்டமாக சிலருக்கு பங்கும் பிரிக்கப்பட்டுள்ளதாம்.. அதில் அந்த எல்லைக்கு உட்பட்ட காவல்துறையை சேர்ந்த சிலருக்கும் நடவடிக்கை எடுக்காமல் இருக்க பங்கு சென்றுள்ளதாக விவரமறிந்தவர்கள் சொல்றாங்க.. விரைவில் பல்கலைக்கழகத்தில் இந்த விவகாரத்தில் சிலர் சிக்குவார்கள் என முணுமுணுப்புகள் சத்தமாக ஒலிக்க துவங்கியுள்ளது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நடிகர் கட்சியில் இணையும்படி இலை கட்சியில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிக்கு மாஜி அமைச்சர் ஆசைகாட்டினாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்ட இலை கட்சியில் அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவரிடம், நடிகர் கட்சியில் சமீபத்தில் இணைந்த மாஜி அமைச்சர், ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.. இலை கட்சியில் உங்களுக்கு தற்போது மரியாதை கிடைக்கவில்லை என எனக்கு தெரியும். நான் சொல்வதை கேட்டால், நடிகர் கட்சியில் உங்களுக்கு அனைத்தையும் செய்து தருவதாக அந்த மாஜி அமைச்சர் ஆசைவார்த்தை கூறியிருக்காரு.. நடிகர் கட்சியில் இணையும்படி சொன்ன அனைத்தையும் முக்கிய நிர்வாகி ேகட்டுக்கொண்டாராம்.. இதுதொடர்பாக தனது ஆதரவாளர்களிடம் தீவிர ஆலோசித்து விரைவில் சொல்லுவதாக கூறியிருக்காரு.. தற்போது டெல்டா மாவட்டம் முழுவதும் இலை கட்சியில் இந்த டாப்பிக் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைவருக்கு போட்டியா அவரது ஊருக்கே போய் கெத்துக்காட்டப் போறாராமே கோபிக்காரர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியிலிருந்து தூக்கி எறிப்பட்ட கோபிக்காரர், நடிகர் கட்சியில் சேர்ந்துட்டாரு.. அதே நேரத்துல அந்த ஊருல கோபிக்காரருக்கென்று கொஞ்சம் செல்வாக்கு இருக்குதுன்னும் சொல்றாங்க.. அந்த செல்வாக்கை உடைத்து இலைக்கட்சிக்கு வாக்கை கூட்டணுமுன்னு இலைக்கட்சி தலைவர் பொதுக்கூட்டத்தை நடத்தியிருக்காரு.. கட்டுக்கடங்காத கூட்டமா இருக்கணுமுன்னு கட்சிக்காரங்கக்கிட்ட சொல்லியிருக்காரு.. என்றாலும் நம்பிக்கையில்லாத நிலையில் அவரது மைத்துனரிடம் பொறுப்பை ஒப்படைச்சிருக்காரு.. அவரும் இடைப்பாடி, சங்ககிரி ஆகிய பகுதிகளிலிருந்து சத்தமில்லாமல் ஆட்களை திரட்டிக்கிட்டு போனதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. இதற்காக சேலையும், 200 ரூபாயும் கொடுத்து அழைச்சிக்கிட்டு போனாங்களாம்.. என்றாலும் அவர் நினைத்த அளவுக்கான கூட்டத்தை கொண்டு வரமுடியலைன்னும் சொல்றாங்க.. அதே நேரத்துல ஈரோட்டில் உள்ள இலைக்கட்சி தலைவரின் நெருங்கிய உறவுக்காரரை வைத்து கோபிக்காரருக்கு நெருக்கடி கொடுத்ததே இலைக்கட்சி தலைவருன்னு மஞ்சள் நகரத்துக்காரங்க பேசிக்கிறாங்க.. இதற்கிடையில் இளவல் கட்சியில் சேர்ந்த வேகத்தோடு, எல்லா நிர்வாகிகளையும் சந்தித்து இலைக்கட்சியில் இருந்து தான் எதற்காக சென்றேன்னு சொல்லிக்கிட்டிருக்காராம் கோபிக்காரர்.. அதோடு தனது கோட்டையில் வந்து இலைக்கட்சி தலைவர் கெத்துக்காட்டிக்கிட்டு போனதால், இலைக்கட்சி தலைவர் ஊருக்கு சென்று கெத்துக்காட்ட வேண்டும் என்பதில் கோபிக்காரர் ரொம்பவே தீவிரமாக இருக்காராம்.. இதற்காக நடிகரிடம் உத்தரவு கேட்டிருப்பதாக அவரோட அடிப்பொடிகள் சொல்றாங்க.. அனுமதி மட்டும் கிடைக்கட்டும். அதற்கு பிறகு நாங்கள் யாரென காட்டுவோமுன்னு அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்க..’’ என்றார்.
‘‘மலராத தேசிய கட்சியின் ‘பி’ டீம் கொடுத்த பணியை கச்சிதமாக முடித்துள்ளதா கூறி அல்வா ஊர்க்காரர் ஆதரவாளர்கள் கொண்டாடுறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில், சேலம்காரரை டெல்லி தலைமை உருட்டி, மிரட்டி கூட்டணிக்கு பணிய வைத்து விட்டது.. என்னதான் கூட்டணி என்றாலும் கானல் நீர் போலத் தான் இலை கட்சியும், மலராத தேசிய கட்சியும் உள்ளனவாம்.. இந்த கூட்டணியை இலை கட்சியின் தொண்டர்களே விரும்பவில்லையாம்.. இதனால் இலை கட்சியில் இருந்து பலரும் வாக் அவுட் செய்து வருகின்றனராம்.. இலை கட்சி, நடிகர் கட்சியுடன் கூட்டணி அமைக்க ரகசிய பேரம் நடத்தியதாம்.. இதை மோப்பம் பிடித்த டெல்லி தலைமை கோபியாரின் கோபத்தை பயன்படுத்திக் கொண்டதாம்.. கோபியாரை நடிகரின் கட்சியில் இணைய வைத்ததுடன் முக்கிய பதவியும் அவருக்கு தரப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் நடிகர் மட்டுமே முடிவு செய்யும் அளவுக்கு அவருக்கு அரசியலில் அனுபவம் கிடையாது. எனவே கூட்டணி, தொகுதி பங்கீடு, பேச்சுவார்த்தை என்பதையெல்லாம் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை பெற்றுள்ள கோபியாரிடம் ஒதுக்கி விட்டாராம்.. இனிமேல் இலை கட்சி நடிகர் கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டாலும், கோபியாரின் காலை தான் பிடிக்க வேண்டுமாம்.. அதை சேலம்காரர் விரும்ப மாட்டார். அவரது ஈகோ இடம் தராது. இதன் மூலம் சேலம்காரரின் மாஸ்டர் பிளானுக்கு டெல்லி தலைமை முடிவு கட்டி விட்டதாம்.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்து விட்டோம், ஒன்று பி டீம் வேலை ஓகே. மற்றொன்று சேலம்காரருக்கு ‘செக்’ என டெல்லி தலைமை சிலாகித்துக் கொண்டதாம்.. இதை அல்வா ஊரின் எம்எல்ஏ ஆதரவாளர்கள் செண்டை மேளம் கொட்டி கொண்டாடுகின்றனராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

