இலைக்கட்சி நிர்வாகிகளுக்குள் பூசலை ஏற்படுத்த சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மாஜி மா.செ.வை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘கோபிகாரருக்கு ஆதரவு கொடுக்கலாமா என ரெண்டு மாஜி அமைச்சர்கள் தனித்தனியாக ஆதரவாளர்களோடு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்காங்களாமே தெரியுமா..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் இருந்து பிரிந்து சேலத்துக்காரர் அணிக்கு தாவிய மாஜி அமைச்சர், தேனிக்காரர் மீது விசுவாசம் தான் வைத்துள்ளாராம்.. இலை கட்சியில் இருந்து பிரிந்தவர்களை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என ஆதரவு குரல் கொடுத்து வரும் கோபிகாரருக்கு தேனிக்காரர் ஆதரவு தெரிவித்தால் தேனிக்காரர் பக்கம் தாவிவிடலாம் என மாஜியானவர் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளாராம்.. இதற்கிடையே கடலோர மாவட்டத்தில் மற்றொரு மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ ஆரம்பம் முதல் சேலத்துக்காரர் அணியில் இருந்து வருகிறார். ஆனால் அவர் சேலத்துக்காரருடன் இருந்தால் அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருக்குமா என சந்தேகத்தில் கோபிகாரருக்கு ஆதரவு கொடுக்கலாமா என தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் இருந்து வருகிறாராம்.. இந்த டாப்பிக் தான் கடலோர மாவட்ட இலை கட்சியின் தொண்டர்கள் மத்தியில் ஓடிக்கொண்டு இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாங்கனி கட்சிக்குள் புதிய சர்ச்சை கிளம்பியிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி கட்சியில் தந்தை, மகன் உறவின் விரிசலுக்கு இதுவரை தீர்வு கிடைத்தபாடில்லை.. நிரந்தரமாக மகனை ஒதுக்கும் முடிவுக்கு தந்தையானவர் வந்து விட்டதாக தகவல் பரவினாலும் கட்சியில் எப்படியாவது நீட்டிக்க செய்யும் வகையில் அடுத்தடுத்த வாய்ப்புகளை தானாக உருவாக்கி கொடுத்து வருகிறாராம்.. ஆனால் மகனோ தனது ரூட்டில் தெளிவாக சென்றபடி உள்ளாராம்.. கட்சியின் நிலைமை இப்படியிருக்க, மகளை தனக்கு பதிலாக களத்தில் தந்தை இறக்க, குடும்பத்தில் நடக்க இருந்த முதல் பொதுநிகழ்வோ கோணலாக முடிந்துவிட்டதாம்.. குண்டு வீச்சு சம்பவத்தால் விழா ரத்தாக, மகளும் அப்செட் ஆகியதால், விசாரணையை தைலாபுரம் தோட்டத்தில் இருந்தே முடுக்கி விட்டுள்ளார்களாம்.. ஏற்கனவே ஒட்டுகேட்பு விவகாரம் உள்ளிட்டவை சர்ச்சையை எழுப்பியிருந்த நிலையில், கடைசியாக அன்பின் மணியானவர் மீது பழிசுமத்தப்பட்டதாம்.. தற்போது தந்தையின் ஆதரவு நிர்வாகியை கொல்ல முயற்சி நடந்திருக்க, குண்டு தயாரித்து கொடுத்தவரோ தற்கொலை செய்துள்ளது மாங்கனி கட்சிக்குள் புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி கோஷ்டி அரசியலில் மாஜி அமைச்சரும், சிட்டிங் எம்எல்ஏவும் அதிவேகத்தில் போய்க்கிட்டு இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்ட இலைக்கட்சியில் கோஷ்டி மோதல் உச்சகட்டத்திற்கு வந்துள்ளதாம்.. குறிப்பாக மாஜி மீசைக்காரரின் புலம்பல் அதிகரித்துள்ளதாம்.. அமைச்சராக இருந்த மீசைக்கே கடந்த முறை சீட் மறுக்கப்பட்ட நிலையில், கட்சி பதவியும் கொடுக்காததால் அவர் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்.. இந்நிலையில் அவரை ஓவர்டேக் செய்து சிட்டிங் எம்எல்ஏ அதிகாரம் செலுத்தி வருகிறாராம்.. சிட்டிங் தரப்பில் ஏற்பாடு செய்யும் எந்த நிகழ்ச்சியிலும் மாஜியின் பெயரோ, முகமோ தெரிந்து விடக் கூடாது என்பதில் சிட்டிங் தரப்பு ரொம்ப கவனமாக செயல்படுகிறதாம்.. இருவர் தரப்பில் நடக்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மற்றவரை அழைப்பதில்லை என இருவரும் கோஷ்டி அரசியல் செய்து வருகின்றனராம்.. தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எப்படியாவது மீண்டும் சீட்டை கைப்பற்றி விட வேண்டுமென்ற வேகத்தில் மாஜி மீசைக்காரர் பைபாஸில் சென்று கொண்டிருக்கிறாராம்.. இதனால், இங்கு யார் பெரியவர் என்ற கோஷ்டிமோதல் உச்சகட்டத்திற்கு போய்கொண்டிருக்கும் நிலையில் சீட் கிடைத்து விடக் கூடாது என்பதற்காக ஒருவரையொருவர் காலை வாரிவிடும் வியூகம் களைகட்டிக் கொண்டிருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பகீரத பிரயத்தனம் செய்தும் பதவி கிடைக்காததால் இலைக்கட்சி நிர்வாகிகளுக்குள் பூசலை ஏற்படுத்த சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறாராமே மாஜி மா.செ. ஒருத்தர்’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தில் இலை கட்சியில் மாஜி மா.செ.ஆக இருந்த மன்னர் பெயரை கொண்டவர், தேனி அணியில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் மீண்டும் சேலத்துக்காரர் அணியில் சேர்ந்துவிட்டார். மீண்டும் இலை கட்சியில் பதவியை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்பதற்காக பகீரத பிரயத்தனங்கள் செய்தாராம்.. ஆனாலும் எந்தவித பலனும் இல்லையாம்.. இதனால் தற்போதைய நிர்வாகிகளை சமூக வலைதளங்களில் வசைப்பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளாராம்.. ஒருமுறை இவர்களை ஒன்றுபடுத்த மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் பலன் அளிக்காத நிலையில் இலை கட்சியில் மாநில அளவில் உள்ள பூசலுக்கு நிகராக மாவட்ட அளவில் இவர்களது பூசல் எல்லை மீறி போயிட்டு இருக்காம்.. ஆனால் முக்கிய நிர்வாகிகள் யாரும் இவரது வசைபாடலை சட்டை செய்யாமல் கடந்து சென்று கொண்டிருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பள்ளியில பாடம் எடுக்க வேண்டிய தலைமை ஆசிரியருக்கு ஜெயில்ல பாடம் எடுக்குறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல 4 எழுத்து பிரியாணி ஊர்ல குப்பம்னு முடியுற ஊர் ஆட்சியில தொடக்க பள்ளி இயங்கி வருது.. இந்த பள்ளியில கடந்த மாதம் தலைமை ஆசிரியர் ஒருத்தரு டிரான்ஸ்பர்ல வந்திருக்காரு.. இவரு பள்ளி வளாகத்துலயே மது அருந்துவதாகவும் புகார்கள் எழுந்ததாம்.. இந்த புகார் மறைவதுக்குள்ளாகவே, கடந்த வாரம் பள்ளியில படிக்குற 4வது வகுப்பு மாணவிகிட்ட பாலியல் சீண்டல்ல ஈடுபட்டிருக்குறாரு.. அப்புறம் மாவட்ட எஸ்பி நேரடி விசாரணை நடத்தியிருக்காங்க.. கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில நடந்த விசாரணைக்கு அப்புறமாக, தலைமை ஆசிரியருக்கு, கைவிலங்கு மாட்டினாங்க.. இப்ப பாடம் எடுக்க வேண்டிய தலைமை ஆசிரியருக்கு ெஜயில்ல பாடம் எடுக்குறாங்களாம்.. மிஸ்டர் பத்தூர் மாவட்டம் மட்டுமில்லாம, ஒவ்வொரு பள்ளிகள்லயும், புகார் பெட்டிகள் செயல்பாடு, அதிகாரிகள் ஆய்வு, ஆய்வு செய்ற அதிகாரிகளை கண்காணிக்குறதுன்னு அதிரடியா இருந்தால்தான், இதுபோன்ற மன்னிக்க முடியாத தவறுகளை தடுக்க முடியும்னு சம்பந்தப்பட்ட துறையிலயே பரபரப்பா பேசிக்கிறாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.