Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஓலைச் சுவடிகளை பாதுகாக்க தமிழ்நாட்டுக்கு கடந்த 20 ஆண்டுகளில் 1 கோடியே 64 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு ஏன்?.. கனிமொழி எம்.பி. கேள்வி

டெல்லி: ஓலைச் சுவடிகளை பாதுகாக்க தமிழ்நாட்டுக்கு கடந்த 20 ஆண்டுகளில் 1 கோடியே 64 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு ஏன்? என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட பழமையான கையெழுத்து பிரதிகளான ஓலைச் சுவடிகளின் பாதுகாப்பு பற்றி திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. மக்களவையில் சில கேள்விகளை எழுப்பினார். அதில்; “தமிழ்நாட்டிலிருந்து கிடைத்துள்ள பழமையான கையெழுத்துப் பிரதிகளான ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றிற்கு அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதா?

அல்லது மேற்கொள்ள முன்மொழிந்திருக்கிறதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? ஏற்கனவே இருந்த தேசிய ஓலைச் சுவடிகள் இயக்கம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஞானபாரதம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இருந்து எத்தனை கையெழுத்து ஓலைச் சுவடிகள் கையகப்படுத்தப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன? இன்னமும் பல தனிநபர்களிடம் முக்கியமான ஓலைச் சுவடிகள் இருக்கும் நிலையில் அவற்றை கையகப்படுத்த கொள்கை மற்றும் சட்ட தெளிவு இல்லாததால் இன்னமும் அவை தனி நபர்களிடமே இருக்கின்றன. அவர்களின் தயக்கத்தைப் போக்கி அந்த ஓலைச் சுவடிகளை சேகரிக்க அரசு திட்டம் வைத்திருக்கிறதா?

தேசிய ஓலைச்சுவடி இயக்கத்தின் கீழ் குறிப்பாக தமிழ்நாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் என்ன? இந்த இயக்கத்தின் பிராந்திய மையங்கள் அல்லது டிஜிட்டல் மயமாக்கல் மையங்கள் தமிழ்நாட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.