‘‘மலராத கட்சியில் என்ன முணுமுணுப்பாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மலராத கட்சி நகர தலைமையில் ஏழுமலை ஆனவர் இருந்தாராம். மாவட்ட தலைமையை கவனித்த ராஜேந்திரன் சமீபத்தில் மாற்றப்பட்டு பிள்ளையார் பெயரை தாங்கியவர் புதுசா வந்தாராம். எளிமையாக இருப்பதாக காட்டி கொண்டு பஸ்சில் சென்றே கட்சி பணிகளை கவனித்தாராம். இதனை அறிந்த கட்சி தலைமை, அவருக்கு காரை வழங்கியதாம். சமீபத்தில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி புரத்தில் நடந்தேற அனைத்து செலவுகளும் திண்டிவனம் நகரத்தின் தலையில் சுமத்தப்பட்டதாம்.
தனது பட்டறை வருவாயால் இதற்கெல்லாம் கப்பம் கட்ட முடியாது என நாசுக்காக நழுவினாராம் ஏழுமலை. மாவட்டத்தை மதிக்கல என பதவியை பிடுங்கினாராம் பிள்ளையார் ஆனவர். தற்போது பல மாதங்களாக அப்பதவியை காலியாகவே வைத்து தானே முன்னின்று கவனித்து வருகிறாராம். தேர்தல் நெருங்கும் நிலையில் நகர தலைமை பதவியை காலியாக வைத்திருப்பதன் மர்மம் என்ன என்ற கேள்வி மலராத நிர்வாகிகளிடம் எழுந்துள்ளதாம். குழப்பத்தில் தொண்டர்களும் முணுமுணுப்பதால் மேலிடத்துக்கு விரைவில் புகார் செல்லலாம் என்கிறார்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி நிர்வாகிகள் அப்செட் ஆக இருக்காங்களாமே..’’ என அடுத்த கேள்வியைத் தொடுத்தார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டில் மலராத கட்சியோட இலைக்கட்சி கூட்டணி சேர்ந்திருப்பதால் சிறுபான்மையினர் ஒட்டு நமக்கு ஒன்று கூட கிடைக்காது என்பதில் இலைக்கட்சி மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் உறுதியாக நம்புகிறார்கள். ஆனா இலைக்கட்சி தலைமையோ தன்னுடைய சொத்துக்களை பாதுகாக்கவும், வழக்கு, ரெய்டுகளில் இருந்து தப்பிக்கவும் மலராத கட்சியோட கை கோர்ப்பது தான் நல்லது என்று நினைக்குது.
பனியன் சிட்டி தெற்கு தொகுதியில் சிறுபான்மையினர் ஓட்டு அதிக அளவில் இருக்கிறதாம். கடந்த எலக்சனில் இந்த தொகுதியில் போட்டியிட இலைக்கட்சியில் கடும் போட்டி இருந்ததாம். அதோட இந்த தொகுதியில் ஏற்கனவே இலைக்கட்சி ஜெயிச்சும் இருக்கு. ஆனா வர்ற எலக்சனில் மலராத கட்சியோட கூட்டணி வெச்சு இருக்கிறதால சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதால் இலைக்கட்சிக்காரங்க யாரும் போட்டியிட ஆர்வம் காட்டாம இருக்கிறாங்களாம். போட்டியிட்டு இருக்கிற பணத்தை செலவு செய்துவிட்டு என்ன செய்வதுன்னு நினைக்கிறாங்களாம்.
இதனால இந்த தொகுதியில் இலைக்கட்சிக்காரங்க பூத் ஏஜென்ட் கூட்டம் கூட நடத்த விருப்பம் இல்லாம இருக்காங்களாம். தொகுதியில் இருக்கிற சூழல், மக்கள் மனநிலை என கிரவுண்ட் ரிசல்ட் பத்தி இலைக்கட்சி தலைமையின் கவனத்திற்கு சமீபத்தில் சில மூத்த நிர்வாகிகள் கொண்டு போனாங்களாம். ஆனா நெகட்டிவ் பதில் வந்ததால் இலைக்கட்சி நிர்வாகிகள் அப்செட்டாக இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாஜி அமைச்சரை நிர்வாகிகள் கிண்டல் அடிக்கிறதா சேதி வருதே.. மேட்டர் என்னா..’’ என்று ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சி சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்ததாம்... இந்த கூட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பெற்றுக்கொண்டு வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ ஆலோசனை வழங்கி இருந்தாராம்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், ஒன்றிய அரசுக்கு மாஜி அமைச்சர் ஏன் ஜால்ரா அடிக்கிறார் என ஏன் தெரிய வில்லை.
மலராத தாமரை கட்சி சார்பில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கூட இந்த அளவுக்கு முக்கிய பொறுப்பாளர்கள் அவர்களது நிர்வாகிகளிடம் பேசவில்லை. ஆனால் மாஜி அமைச்சர் ஒன்றிய அரசுக்கு இப்படி ஜால்டரா அடிக்கிறது தான் தங்களால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை என சொந்த கட்சிக்குள்ளே கமென்ட் அடிக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கோரிக்கை மனுக்களுக்கு ஏற்றபடி பீஸ் வாங்குறாங்களாமே..’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டத்துல லி என்று முடியுற 3 எழுத்து பெயர் கொண்ட தாலுகா இருக்குது. இங்க 2 மாதமாக ஸ்பெஷல் கேம்ப் நடத்தி மக்கள் கோரிக்கைகள் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருது. இதுல சில அதிகாரிங்க இந்த ஸ்பெஷல் கேம்ப்லயும் சம்திங் வேட்டை நடத்துறாங்களாம். கேட்டால், உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கணும்னு சொல்லி சம்திங் வாங்குறாங்களாம். ஒவ்வொரு கோரிக்கைகளுக்கு ஏற்றபடி பீஸ் வாங்குறாங்களாம். சம்திங் குறைச்சி கொடுத்தா வேலை சரியா நடக்குறதில்லையாம்.
அரைகுறை வேலைய செஞ்சிட்டு விட்டுவிடுறாங்களாம். மக்களோட நலனுக்கு அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை சில பேர், செய்ற தவறால, ஒட்டுமொத்தமாக மக்கள் மத்தியில அவப்பெயர் ஏற்படும் நிலைமையாக இருக்குது. இதனால சம்மந்தப்பட்ட அதிகாரிங்க இதுபோல நடக்குற கேம்ப்கள்ல ரேண்டமாக கண்காணிச்சு நடவடிக்கை எடுக்கணும். அப்போதுதான் இதுபோல தவறுகள் நடக்காதுன்னு ஜனங்களோட கோரிக்கை குரல் இருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
