‘‘டெல்டாவில் குக்கர் கட்சி நிர்வாகிகளை இலை கட்சிக்கு இழுக்கும் மறைமுக வேலையில் மாஜி அமைச்சர் ஈடுபட்டுள்ளாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம், மனுநீதி சோழன் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள குக்கர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை இலை கட்சி பக்கம் இழுப்பதற்கான வேலைகள் மறைமுகமாக நடந்துகிட்டு வருகிறதாம்.. இதற்காக குக்கர் கட்சி நிர்வாகிகள் சிலரை ரகசியமாக அழைத்து முக்கிய நிர்வாகி பேசியிருக்காரு.. இதில் அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்கவும் முக்கிய நிர்வாகியும் கிரீன் சிக்னல் காட்டி விட்டாராம்.. இந்த விஷயத்தில் தலைமையும் முக்கிய நிர்வாகிக்கு ஆதரவு தெரிவித்திருக்கு.. தொடர்ந்து, குக்கர் கட்சியில் எந்தெந்த பகுதியில் பவராக உள்ளவங்க இருக்காங்களோ அவர்களை குறி வைத்து தூக்கும் வேலையும் தீவிரமாக நடந்து வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பனியன் சிட்டியில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறாராமே இன்ஸ் ஒருத்தர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பனியன் சிட்டியில் இரண்டு டிராபிக் போலீஸ் ஸ்டேசன் செயல்படுது.. அதில், தெற்கு பகுதியில் பணிபுரிந்து வரும் ஐந்து எழுத்து பெயர் கொண்ட ஆனந்தமான இன்ஸ் தனி ராஜ்ஜியம் நடத்திட்டு வர்றாராம்.. அவருக்கு தனியாக போலீஸ் ஜீப் கொடுத்து, டிரைவரும் கொடுத்துருக்காங்க... ஆனா அவர், பல நேரங்களில் டிரைவர் இல்லாமல் ஜீப்பை தனியே ஓட்டிட்டு போறாராம்.. இதனால ஒரு விபத்தும் நடந்திருக்குதாம்.. அதையும், சிட்டி போலீஸ் கமிஷனர் கவனத்திற்கு கொண்டுபோகாம சமாளிச்சுட்டாராம்... அதுமட்டுமில்லாமல், அவருகிட்ட வேலை செய்யுற போலீசை தரக்குறைவான வார்த்தைகள் போட்டு திட்டுறாராம்.. அதனால், எல்லோரும் போய் சிட்டி போலீஸ் கமிஷனரை சந்தித்து முறையிட திட்டமிட்டிருக்காங்களாம்.. அதுபோக, ஊர்க்காவல்படையினரை போக்குவரத்து பிரிவுக்கு டியூட்டி போட்டு, அதில் வசூல் எடுக்குறாராம்.. அதனால், ஊர்க்காவல்படையினர் பலரும், தெற்கு பக்கம் போய் டியூட்டி பார்க்க ஆசைப்படுகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாஜி மாநில தலைவர் நிகழ்ச்சியை புறக்கணித்து, வெயிலூர் மலர் பார்ட்டியிலும் கோஷ்டி பூசலை வெளிப்படையாக்கிட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்துல மலர் பார்ட்டியில மலையானவர் மாற்றப்பட்டதும், மாவட்டங்களுக்கும் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டாங்க.. அப்படி கடந்த ஆண்டு வெயிலூர் மாவட்டத்துக்கும் புதிதாக தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அப்போதே மாவட்டத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள் தங்கள் பதவிகளை விட்டு விலகி மாநில தலைமைக்கு கடிதம் அனுப்பி வைச்சாங்க.. இப்போது வரை அவர்கள் மாவட்டத்தில் ரதமானவர் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளை புறக்கணிச்சிட்டு வர்றாங்க.. மாநில தலைமை ஏதாவது போராட்டங்கள் அறிவித்தால் மட்டுமே பெயரளவுக்கு வந்து கலந்து கொள்கின்றனராம்.. சமீபத்துல வெயிலூருக்கு மாஜி மாநில மலர் பார்ட்டி தலைவரும், பெயரில் இசையை வைத்துள்ள பெண் தலைவரும் பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தாங்களாம்.. அந்த நிகழ்ச்சியில் ஓரிரு நிர்வாகிகள் மட்டுமே மாவட்ட தலைவருடன் இருந்தார்களாம்.. பூத் முகவர்களும் 50 முதல் 70 பேர் வரை மட்டுமே இருந்திருக்காங்க.. மற்ற நிர்வாகிங்க கூட்டத்தை புறக்கணிச்சிடாங்களாம்.. இப்படி கோஷ்டி பூசல் மலர் பார்ட்டியில் தொடர்ந்துகிட்டு இருக்கு.. மலர் கட்சியிலும் இப்படி கோஷ்டி கானம் இருந்தா, இலை கட்சி எப்படி நம்மை மதிக்கும்? இதுல இங்க ஆட்சி மாற்றம்னு வேற பேசறாங்களேன்னு மலர் பார்ட்டிகள் புலம்பிக்கிட்டு போனாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கதர் சட்டை சைக்கிள்காரர் இலைக்கட்சி தலைவரை சந்தித்து தாஜா பண்ணிக்கிட்டு இருக்கிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் தயவால் மேல்சபை எம்பியான கதர்சட்டை சைக்கிள்காரர் இலைக்கட்சி தலைவரை தொடர்ந்து தாஜா பண்ணிக்கிட்டே இருக்காராம்.. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் துரோகம் செஞ்சிக்கிட்டு மலராத கட்சி பக்கம் ஓடிட்டாரு.. அங்கு அவரது பருப்பு வேகாம போனாலும், டெல்லியோட ரொம்பவே நெருங்கிய தொடர்பில் இருப்பதாக அவரது கட்சிக்காரங்க சொல்றாங்க.. தற்போதுள்ள நிலையில் இலைக்கட்சியை அண்டிபோனால் தான் ஏதாவது தேறும் என்ற நிலைக்கு வந்துட்டாராம் சைக்கிள்காரர்... ரொம்ப காலமாகவே அவரோடு பயணம் செஞ்சிக்கிட்டிருக்கும் பத்து பேரை கூட்டிக்கிட்டு இலைக்கட்சி தலைவர் வூட்டுக்கு போய் சந்திச்சி பேசியிருக்காரு.. எல்லோரையும் அறிமுகம் செஞ்சிவச்சதோடு தனியாக இலைக்கட்சி தலைவருடன் பேசியிருக்காரு.. இம்முறை நீங்கள்தான் அசைக்கமுடியாத சிஎம் என உசுப்பேத்தியிருக்காரு.. டெல்லியோட பேசுவதற்கு நான் தூதுவராக இருக்கேன் என சொன்னதோடு, சட்டமன்ற தேர்தலில் சைக்கிளில் போட்டியிடும் வகையில் ஒரு பத்து சீட்டாவது ஒதுக்குங்கன்னு நூல்விட்டதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. குறிப்பாக மாங்கனி மாவட்டத்துல ஓமலூர் தொகுதியை ஒதுக்கிக்கொடுத்தா ரொம்ப ஹேப்பியாக இருப்போமுன்னு சொல்லியிருக்காரு.. இப்போதிருக்கும் அரசியல் நிலவரத்தில் கூட்டணி சேர ஆட்களே வராத நிலையில் மறுத்துட்டா உள்ளதும் போயிடுமின்னு இலைக்கட்சி தலைவர் மவுனமாகவே இருந்தாராம்.. வேட்பாளருக்கே கடன் கேட்கும் நிலையில் இருக்கும் சைக்கிளுக்கு பத்து சீட்டா என கேள்வி எழுப்பும் ரத்தத்தின் ரத்தங்கள் அதிகபட்சமாக ரெண்டு சீட் தான் வழங்கப்படுமுன்னு சொல்றாங்க.. அதே நேரத்தில் இந்த சைக்கிள்காரர் மலராத கட்சியின் கையாள் என்பது இலைக்கட்சி தலைவருக்கு ரொம்ப நல்லாவே தெரியுமாம்.. என்றாலும் கூட்டணிக்காக இலைக்கட்சி தலைவர் பல்லை கடிச்சிக் கிட்டிருக்காரு.. இவராவது சொல்லிக்கிட்டு மலராத கட்சியுடன் கூட்டணிக்கு போனாரு.. ஆனால் மாங்கனியோ இரவு வரை கூட்டணியில இருப்போமுன்னு சொல்லிக்கிட்டு, விடிந்ததும் மலராத கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததை நினைத்து பார்த்தாலோ அவமானமாக இருக்குது.. இதுவும் தலைவருக்கு தெரிந்திருந்தாலும் அவர்களுடன் கூட்டணி சேரும் பரிதாப நிலையில் தான் இருக்கோமுன்னு ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க.. தற்போது தங்களுடன் இருப்பது துரோகிகள் என்றாலும், இதையெல்லாம் சகித்துக்கொண்டு செல்வதை தவிர வேறு வழியில்லையாம் இலைக்கட்சி தலைவருக்கு..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.


