‘‘வசூலில் கொடி கட்டிப் பறக்கும் பெண் ஊழியரை பற்றிச் சொல்லுங்க..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ள மண்டல அலுவலகத்தில் நான்கு எழுத்து பெயர் கொண்ட ஒரு பெண் வரி வசூலர் உள்ளார். இவர் மீதும் மற்றும் கிளார்க்குகள் மீதும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. வரியில்லா இனம் மற்றும் குத்தகை இனம் தொடர்பான பணியை கவனித்துக்கொள்ளும் இந்த பெண் ஊழியர், கூடுதலாக இரண்டு வார்டு பணிகளையும் பெற்றுள்ளாராம்.
நிர்வாக ரீதியாக இந்த பெண் ஊழியருக்கு வருவாய் அலுவலர் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறாராம். ஏற்கனவே, இந்த பெண் ஊழியர் குத்தகை இனம், வரியில்லா இனம் பணியின்போது, கடைகளுக்கு ஏலம் கொடுத்த வகையில், ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களுக்கு மட்டும் கடைகள், பார்க்கிங் ஆணை வழங்கியுள்ளாராம். இதில், லட்சக்கணக்கில் பணம் கைமாறி உள்ளதாம். இந்த பெண் ஊழியருக்கு, மீண்டும் வரி வசூல் பணியும் வழங்கியதால், மேலும் தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த பெண் ஊழியர், ஏற்கனவே ஒரு மண்டலத்தில் பணிபுரியும்போது பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, அதன் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டு, இம்மண்டலத்துக்கு வந்தார். இங்கும், அதே பாணியில் வசூலில் கொடி கட்டி பறக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘யானை விவகாரத்துல விசாரணை வளையத்தை விரித்து களமிறங்கிட்டாங்களாமே வனத்துறை..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாடு- ஆந்திரா பார்டர்ல இருக்குற ஏரியாதான் குடியேற்றமும், பெயர்ல பட்டு என்று முடியுற பகுதியும்.
இதுல பட்டு என்று முடியுற பகுதியில பார்டர் வழியாக கடத்தல்கள் அதிகளவுல நடக்குறதாக புகார் குரல்கள் ஒலித்து வர்ற நிலையில, பட்டு மலைப்பகுதியில அருகருகே 5 யானைகள் மர்மமான முறையில இறந்துகிடந்துச்சு. ஒரு மாதம் இடைவெளியில 5 யானைகள் இறந்து போன சம்பவம் தான் இப்ப, பேசு பொருளாக மாறியிருக்குது. அதோட, ஒரே ஏரியாவுல இத்தனை யானைகள் எப்படி இறந்திருக்கும்னு பெரிய கேள்வியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்குது. யானை தந்தத்திற்காக இந்த கொடூர செயல்கள் நடந்ததா?
யானையின் வேறு எந்தெந்த பாகங்களுக்காக வேட்டை நடத்தப்பட்டதான்னு ஏகப்பட்ட கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்திருக்குது. இதனால, வனத்துறை தந்தம் கடத்தல் தொடர்பாகவும், விசாரணை வளையத்தை விரிச்சிருக்காங்களாம். அதோட இதுக்கு முன்னாடி தந்தம் கடத்தல் நடத்தி சிக்கியவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்குறதா விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஊத சொல்லும் போலீசாரிடம் குடிமகன்கள் டான்ஸ் ஆடி கலாய்க்கிறார்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் கடந்த பல ஆண்டுகளாக டிராபிக் போலீஸ் தலைமையகத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஆல்கஹாலிக் மீட்டரை காவலர்கள் கடந்த சில வாரங்களாக கையில் எடுத்துள்ளனர். ஏற்கனவே ரெஸ்ட்டோ பார், மொத்த மதுபான கடை, சில்லரை கடை, பப் என தெருவுக்கு பத்து கடை புதுச்சேரியில் திறக்கப்பட்டுள்ளது. புல்லட்சாமி ஆட்சிக்கு வந்ததும், இதன் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துவிட்டது. ஒயிட் டவுன் பகுதியில் கோயில், சர்ச், மசூதி, பள்ளிக்கூடம், மருத்துவமனை அருகிலே திரும்பும் திசையெங்கும் மதுக்கடைகள்தான்.
வெளியூரில் இருந்து புதுச்சேரிக்கு வருமானத்தை தரும் குடிமகன்களை டிஸ்டர்ப் செய்யக்கூடாது என புல்லட்சாமி போலீசுக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். ஆனால் போலீஸ் உயரதிகாரிகள் புல்லட்சாமி உத்தரவை மீறி இரவு 8 மணிக்கே ஆல்கஹாலிக் மீட்டரை கையில் கொடுத்து, புதிதாக பயிற்சி முடித்து வந்த போலீசாரை, மதுக்கடை வாசலுக்கு அனுப்புகிறார்களாம். கடையின் சில அடிதூரத்தில் குடிமகன்களை நிற்க வைத்து, ஊது, ஊது என சொல்கிறார்கள்.
மதுபோதை உச்சத்தில் வெளியே வருபவர்கள் ஊத சொல்லும் காவலரிடம் டான்ஸ் ஆடிக்காட்டுவதும், பாட்டு பாடுவதும் என காமெடி செய்து வருகிறார்களாம். நிதானமாக வருவோர், கடையின் வாசலிலே பிடிப்பதா, தள்ளிப்போய் பிடிப்பா.. எங்கப்பா உங்க அதிகாரி, வரச்சொல்லுபா என லந்து கொடுக்கிறார்களாம். மேலும் வாங்க ஜிஎச் போய் டெஸ்ட் எடுக்கணும் என கடந்த சில வாரங்களாக ஒரே அலப்பறையா இருக்கிறது. தொல்லை இல்லாம உங்க ஊருக்கு குடிக்க வந்தா ஏன் தொல்லை கொடுக்கிறீங்க, சிம்கிட்ட சொல்லுவேன் என போலீசையே குடிமகன்கள் மிரட்டுகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைவருக்காக வசூல் மீட்டிங் நடந்துச்சாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘டெல்லியின் தொடர் மிரட்டலுக்கு பதில் மிரட்டல் கொடுக்கும் வகையில் இலைக்கட்சி தலைவர் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டாரு.. இதன்படி நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு சென்ற நேரத்தில், கரூரில் நடிகரின் கூட்டத்துல 41 அப்பாவி மக்கள் நசுங்கி இறந்துபோனாங்க..
இதன்பிறகு எங்களிடம் கேட்காமல் பயணத்தை தொடங்க கூடாதுன்னு டெல்லி உத்தரவு போட்டிருச்சு.. அதன்பிறகு ஏதாவது ஒரு இடத்தில் சுந்தரா டிராவல்ஸ் வண்டியில நின்று குரலை உயர்த்தி பேசிக்கிட்டு இருக்காரு இலைக்கட்சி தலைவர்.. அதே நேரத்துல அவரது சொந்த ஊரில் இன்னும் பயண கூட்டத்தை நடத்தலையாம்.. இதனால அவரது நிழலான புறநகர் மாவட்ட செ.வை கூப்பிட்டு, வரும் 4ம் தேதி கூட்டத்தை நடத்துவோமுன்னு சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவு போட்டிருக்காரு..
மாங்கனி புறநகர் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் 8 தொகுதி இருக்கு.. இதில் 4 தொகுதிக்குள்ளாற நிழலானவரால் செல்ல முடியாதாம்.. என்றாலும் கூட்டத்தை எப்படி நடத்துவது என்பது குறித்தான வசூல் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செஞ்சிருக்காரு.. அனைத்து செலவையும் இலைக்கட்சி தலைவரே செய்து விடுவார் என்றாலும், நமது பங்கை செலுத்தியே ஆக வேண்டும் என நிழலாவனர் உறுதியா செல்லியிருக்காரு..
ஒவ்வொருவரும் பெரும் தொகையை அள்ளிக்கொடுக்க வேண்டும் என நிர்வாகிகளை பார்த்து சொல்லியிருக்காரு.. அவர்களில் பெரும்பாலானவர்கள் பல ஆண்டுகளாகவே சீட் கிடைக்கும் என்ற ஆவலில் பல லகரங்களை செலவு செஞ்சி ஆண்டியாகியிருக்காங்களாம்... அவர்களிடமே துட்டு என கேட்டுள்ளதால் விழிபிதுங்கிபோயிருக்காங்களாம்.. என்றாலும் ஒரு ‘சி’ வசூல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.


