‘‘மான்வேட்டை ஜோரா நடக்குதாமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலுக்கு பெயர் போன மாவட்டத்துல ஒடுக்கமான ஊர் இருக்குது. இங்கு மலைகள், காடுகளில் மான்கள், மயில்கள், காட்டு பன்றிகள், காட்டெருமைகள், பாம்பு, காட்டு முயல்கள்னு ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. இதுல மான்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது. போறபோக்கை பார்த்தா மான் இனமே அழிஞ்சுடும்போல இருக்குதேன்னு பேசிக்கிறாங்க. இங்க ஏராளமான கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டியவாறு இருக்குறதால அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி மான்கள் கூட்டம் கூட்டமாக ஊருக்கு நுழையுது.
இப்படி ஊருக்குள் வர்ற மான்களை சிலர் இறைச்சிக்காக சட்டவிரோதமாக வேட்டையாடி வர்றாங்களாம். அதோட இரவு நேரங்களிலும் சமூக விரோதிகள் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மான், முயல், முள்ளம்பன்றி, காட்டு பன்றிகளை இறைச்சிக்காக வேட்டையாடி வர்றாங்களாம். இதனை தடுக்க வேண்டிய வனத்துறைக்கு யாராவது தகவல் கொடுத்தால் தான் கைது நடவடிக்கை எடுக்குறாங்களாம். இதுவரைக்கும் இவங்களாக நேரடியாக போய் யாரையும் பிடிச்சு கைவிலங்கு போட்டது கிடையாதாம். இரவு ரோந்து இல்லையாம்.
இதனாலத்தான் மான்களோட எண்ணிக்கை வேகமாக குறைந்து வருதாம். இந்த புகார்களுக்கு எல்லாம், புதுசா வந்திருக்குற அதிகாரி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்னு கோரிக்கை குரல் ஒலிக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஓபிஎஸ் ஆளே காணாம இருக்காரே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மன்னர் மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ் நிர்வாகிகள் ஓபிஎஸ்சிடம் முறையிட்டு மாற்று கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக ஓபிஎஸ் எங்கு இருக்கிறார் என தெரியவில்லையாம்.
அரசியலில் இருக்காரா? இல்லை கேரளா எல்லையில் ஏலக்காய் விவசாயத்திற்கு சென்றுவிட்டாரான்னு தெரியல. நமக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கை இல்லை. பலமுறை மாவட்ட அரசியல் தகவல்களை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இறுதியாக சமீபத்தில் மன்னர் மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் நேரில் சென்று ஓபிஎஸ்டம் முறையிட்டும் பயன் இல்லை. இப்பவும் தீர்வு கிடைக்காததால், மன்னர் மாவட்டத்தை சேர்த்த நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களின் இந்த செயலை கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் ஓபிஎஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஓபிஎஸ்ஸிடம் எந்த ரெஸ்பான்சும் இல்லை என்று கூறப்டுகிறது. சிலர் இந்த கட்சியில் இருப்பதும் ஒன்னுதான் இல்லாததும் ஒன்னுதான் என நிர்வாகிகள் சகாக்களிடம் கூறியுள்ளனர்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தெருப்பயணத்துக்கே கூட்டம் சேர்க்க முடியாமல் திணறுகிறார்களாமே..’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைமையான சேலத்துக்காரர், ஊர் ஊருக்கு வாகனத்தில் பயணம் சென்று வருகிறார்.
ஆனால், செல்லும் இடமெல்லாம் ஆட்கள் கூட்டமின்றி வெறிச்சோடி பயணம் தளர்ந்து கிடக்கிறது. இது இலைக்கட்சி நிர்வாகிகளை பெரும் கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது. சரி... பணம், பிரியாணி என ஆசை காட்டியாவது ஆட்களைத் திரட்டலாம் என திட்டமிட்டு, தூங்கா நகரத்து கிராமங்களில் இப்போதே அன்னதானத்துடன், நலத்திட்ட உதவிகள், ஊர்கள்தோறும் போய் இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட், பால், டென்னிஸ் ராக்கெட் கொடுத்தும் இலைக்கட்சியின் மாஜியான உதயமானவர் ஆள் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
‘நம்ம ஏரியாவுக்கு பிரசாரத்துக்கு சேலத்துக்காரர் வர ஆகஸ்ட் இறுதியாயிடுமே... ஒன்றரை மாசம் கிடக்குறப்போ, அதுக்குள்ள இப்படி போட்டி போட்டு களமிறங்கினா செலவு அதிகமாகுமே...? கொஞ்ச நாள் கழித்து ஆரம்பிச்சிருக்கலாமே? கடைசி நேரத்துல காசு தந்து ஆள் பிடிச்சாத்தானே களத்துக்கு கூட்டி வரலாம்’ என்று தூங்கா நகரத்தின் சக இலைக்கட்சி நிர்வாகிகளான மாஜி தெர்மோகோலும், செல்லமானவரும் ரொம்பவே புலம்பித் தவித்து வருகின்றனராம்...
இதனை கேட்ட மாஜி உதயமானவரின் ஆதரவாளர்களோ, ‘‘சேர்த்த காசை செலவழிக்காம வச்சா, யாரோ சிலர்தான் உள்ளே புகுந்து அடிச்சுட்டுப் போவானுங்க...’’ என தெர்மோகோலின் ஆதரவாளர்கள் காதில் விழும்படி கமெண்ட் செய்கின்றனராம்... மலராத கட்சிக் கூட்டணியால் இலைக்கட்சியின் மவுசு குறைந்து, ஒரு தெருப்பயணத்திற்கே கூட்டம் சேர்க்க முடியாத அளவு கட்சி திக்கித்திணறுதே என கட்சி முன்னோடிகளின் முணுமுணுப்பும் காதுகளில் விழுகிறது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘காக்கித்துறை சேதி என்ன இருக்கு..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் மாநகர் சென்சிடிவ் பகுதியாக இருப்பதால் எப்போதும் போலீஸ் பரபரப்பாவே இருந்துட்டு இருப்பாங்க. அதிலும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ரகசிய நடவடிக்கைகள், மத தலைவர்கள் வருகை, நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளை கண்காணிக்கிற வேலையை சிறப்பு புலனாய்வு பிரிவு செய்திட்டு வர்றாங்க. இவர்களுக்கான அலுவலகம் போலீஸ் பயிற்சி பள்ளி பக்கத்தில் செயல்பட்டு வருது.
இந்த பிரிவில் 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்துட்டு வர்றாங்க. ஆனா இவங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாக இருக்குது. குறிப்பாக வாகன பிரச்னை பெரும் பிரச்னையா இருக்குதாம். ஒரே ஒரு போலீஸ் வாகனம் மட்டுமே இருக்குதாம். சொந்த வாகனங்களை தான் பயன்படுத்திட்டு வர்றாங்களாம்.
ஆனா சட்டம் ஒழுங்கு கவனிக்கிற இன்ஸ்களுக்கு எல்லாம் தனி வாகனம், ஸ்டேசனுக்கு 4 பைக் என இருக்கும் போது சிட்டியில் நடக்கிற அத்தனை நடவடிக்கைகளையும் கண்காணிச்சு தகவல்களை சேகரிக்கிற இந்த இன்ஸ்களுக்கு வாகனங்கள் இல்லாம இருக்கிறது பெரும் குறையாக இருக்குதாம். இன்ஸ் ரேங்கில் உள்ளவர்களுக்கு 4 சக்கர வாகனமும், எஸ்ஐ ரேங்கில் உள்ளவர்களுக்கு பைக்கும் ஒதுக்கினா வசதியா இருக்கும்னு எதிர்பார்க்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.