புதுடெல்லி: கடந்த 2001 அக்டோபர் 7ம் தேதி குஜராத் முதல்வராக முதல் முறையாக தலைமைப் பதவியை ஏற்றார் பிரதமர் மோடி. அதன் பிறகு தொடர்ந்து 3 முறை 12.5 ஆண்டுக்கும் மேலாக குஜராத் முதல்வராக இருந்த அவர் 2014ல் பிரதமர் ஆனார். அதன் பிறகு தொடர்ந்து 3 முறை பிரதமர் பதவியில் மோடி நீடிக்கிறார். தற்போது அவர் தலைமைப் பதவியில் தனது 25ம் ஆண்டை தொடங்குகிறார்.
இது குறித்து பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘தலைமைப் பதவியில் எனது 25வது ஆண்டில் நுழைகிறேன். இதற்காக இந்திய மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் தொடர்ச்சியான ஆசீர்வாதங்களுக்கு நன்றி.
இத்தனை ஆண்டுகளிலும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், நம் அனைவரையும் வளர்த்த இந்த மகத்தான நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்கும் நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்’’ என கூறி உள்ளார். பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பதிவில், ‘‘24 ஆண்டுகள் தேசத்திற்கும், பொது சேவைக்கும் தனது வாழ்க்கையை பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளார் ’’ என்றார்.