Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தலைவர்களின் பெயரால் செய்யப்படும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது: கவுரவத்தையும், கொள்கைகளையும் அவமதிப்புக்கு சமம், ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: தலைவர்களின் பெயரால் செய்யப்படும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்றும், இது, கவுரவத்தையும், கொள்கைகளையும் அவமதிப்பதாகும் என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு தேவர் ஜெயந்தியன்று 3 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு பகுதிகளில் ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவை சேர்ந்தவர்கள் காரில் ஏர்வாடி தர்காவுக்கு சென்று கொண்டிருந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மடை கிராமம் அருகே, கார் மீது 5 பேர் கற்களை வீசி தாக்கினர்.

அந்த தாக்குதலில் காரில் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த அபுபக்கர் என்பவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக முத்து காளீஸ்வரன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிமன்றம், முத்து காளீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து முத்து காளீஸ்வரன், ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

சம்பவம் நடந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் என எப்ஐஆரில் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சிகளுக்கு அடையாளம் தெரியாதவர்கள் என்பதால், போலீசார் அடையாள அணிவகுப்பு கட்டாயம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதுபோல நடத்தவில்லை. முத்து காளீஸ்வரன் மீதான குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. எனவே, மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

உயிரிழந்த அபுபக்கர் விவசாயி, அவரது குடும்பத்தினருக்கு அவர் மட்டும் தான் வருமானம் ஈட்டுபவர் என்பதால், தமிழ்நாடு அரசு நிவாரண நிதியின் கீழ் இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்து வழங்க ராமநாதபுரம் மாவட்ட சட்ட பணிகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துராமலிங்கத்தேவர் உயிருடன் இருந்திருந்தால், இந்த மிருகத்தனமான செயலை கண்டித்திருப்பார்.

ஏனெனில் அவர் விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம் என கூறியுள்ளார். உண்மையில், ஒரு தலைவரின் உண்மையான பார்வை அல்லது சித்தாந்தத்தை பொருட்படுத்தாமல், அவரது பெயரால் செய்யப்படும் எந்தவொரு கலவரம் அல்லது வன்முறைச் செயலையும் நியாயப்படுத்த முடியாது. ஏனெனில், அது அந்தத் தலைவரின் கவுரவத்தையும், அவர் நிலைநாட்டிய கொள்கைகளையும் அவமதிப்பதற்கு சமமாகும் என்பதைச் சுட்டிக்காட்டுவதே பொருத்தமானது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.