Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எதிர்கட்சி தலைவராக கூட எடப்பாடி வர முடியாது அதிமுகவே இப்ப இல்ல... இதிமுக பற்றி கேளுங்க... டிடிவி ஒரே போடு

அம்பை: நெல்லை மாவட்டம், அம்பை அருகே அயன்சிங்கம்பட்டிக்கு நேற்று வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: எதையும் ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படும் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, திமுகவில் இணைந்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் ஆட்டத்தால் பாதிக்கப்பட்ட, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான முடிவுகளை எடுக்க நேரிடுகிறது. பழனிசாமியின் தவறான செயல்பாடுகளால் மனமுடைந்துதான் மனோஜ் பாண்டியன் திமுகவில் சேர்ந்திருப்பார். அதிமுக என்பதே இப்போது இல்லை, அது தற்போது இபிஎஸ் திமுகவாக மாறிவிட்டது. இதிமுக பற்றி கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன். இதைக் கூறினால், என் மீது முன்னாள் அமைச்சரான தம்பி உதயகுமார் கோபப்படுகிறார்.

அதிமுகவினர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு திரிகின்றனர். கடந்த தேர்தலில் நாங்கள் எம்எல்ஏவாகவோ, எம்பியாகவோ ஆகவில்லை என்பது உண்மைதான். ஆனால், பல்லாயிரம் கோடிகளைச் செலவு செய்த உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததா? உங்களால் எதிர்க்கட்சித் தலைவராகத்தான் ஆக முடிந்தது. ஆனால், தமிழ்நாட்டில் 2026ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வர முடியாது. தமிழ்நாட்டு மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால், நீங்கள் திருந்தப் போவதில்லை.

கடந்த கால தேர்தலுக்காகச் செலவு செய்த பணத்தில் தமிழகம் முழுவதும் 10 தொழிற்சாலைகளைக் கட்டி இருந்தால் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்திருக்கலாம். எனவே, அமமுக தனித்துப் போட்டியிடுவது என்பது கடைசி வாய்ப்பாகத்தான் இருக்கும். ஆனால், எங்கள் தலைமையில் கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது. வரும் தேர்தலில் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு கூட்டணி அமையும். அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். நான் எதையும் உறுதி செய்யாமல் பேசுவதில்லை. பழனிசாமியைப் போல தொண்டர்களையோ, நிர்வாகிகளையோ ஏமாற்ற மாட்டேன். தவெகவுடன் கூட்டணி குறித்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. அதற்கு இன்னும் காலம் உள்ளது. இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.