Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தின்போது அரசியல் கட்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்: வரைவு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு, அனைத்துக்கட்சி கூட்டத்தில் பரபரப்பு விவாதம்

சென்னை: கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்ததையடுத்து, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், பிரசாரம் மேற்கொள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது குறித்து அனைத்துக்கட்சி கட்சிகளுடன் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடந்தது. கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு புதிய வரைவு வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் தவெக கட்சி தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். 150க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் போலீசார் கொடுத்த நிபந்தனைகளை பின்பற்றாமல் இருந்ததால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, மாலை 3 மணி முதல் 10 மணி வரை கூட்டம் நடத்த அனுமதி வாங்கிவிட்டு, பகல் 12 மணிக்கு நடிகர் விஜய் வருவதாக தவெக தரப்பில் திடீரென அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் காலை முதலே கூட்டம் அதிகமாக கூட தொடங்கியது.

ஆனால் நடிகர் விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், காலையில் இருந்து காத்திருந்த பெண்கள், குழந்தைகள் தண்ணீர் இல்லாமலும், உணவு அருந்தாலும் இருந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது மயங்கி கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் பலர் கூட்ட நெரிசலில் மிதிபட்டும் உயிரிழந்தனர். சம்பவம் நடந்தவுடன், விஜய் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், முக்கியமான தலைவர்கள் பிரசாரத்தின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரங்கள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் 6ம் தேதி தலைமை செயலகத்தில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, நேற்று (6ம் தேதி) காலை 10.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அரசு சார்பில் தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ்குமார், டிஜிபி வெங்கட்ராமன், ஏடிஜிபி சட்டம்-ஒழுங்கு டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரும்,

அனைத்துக்கட்சிகள் சார்பில் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ (திமுக), ஜெயக்குமார், இன்பதுரை (அதிமுக), செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார் (காங்கிரஸ்), முரளிசங்கர், வி.எஸ்.கோபு (பாமக), எஸ்.எஸ்.பாலாஜி, சிந்தனைச்செல்வன் (விசிக), வி.பி.துரைசாமி, பாலச்சந்திரன் (பாஜ), கே.பாலகிருஷ்ணன், வி.பி.நாகைமாலி (மார்க்சிஸ்ட்), வீரபாண்டியன், மாரிமுத்து (இந்திய கம்யூ.), சதன் திருமலைக்குமார், பூமிநாதன் (மதிமுக),

எம்.எச்.ஜவாஹிருல்லா, குணங்குடி ஹனீபா (மமக), வி.ஆர்.பாலசுப்பிரமணியன், தனஞ்செயந்த் (கொமதேக), வேல்முருகன், உ.கண்ணன் (தவாக), பாரதிதாசன், ருசேந்திரகுமார் (புரட்சி பாரதம்), செந்தில்குமார், சங்கர் (நாம் தமிழர் கட்சி), மவுரியா, செந்தில் ஆறுமுகம் (மநீம), அபுபக்கர், நவாஸ் கனி (இ.யூ.மு. லீக்), வி.சந்திரன், கே.நல்லதம்பி (தேமுதிக), ஆனந்தன், கினோஸ் ஆம்ஸ்ட்ராங் (பகுஜன் சமாஜ் கட்சி), வசீகரன், பன்னீர்செல்வம் (ஆம் ஆத்மி கட்சி), சீனிவாசன், எஸ்.கார்த்திக் (தேசிய மக்கள் கட்சி) உள்ளிட்ட 20 கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், கடந்த 27.9.2025 அன்று கரூரில் நடந்த அரசியல் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தங்கள் கட்சி சார்பில் கருத்துகள் தெரிவிக்க வேண்டும் என்று அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும், கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக்கட்சி நிர்வாகிகளுக்கும், அரசியல் கூட்டங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படுதற்கான பின்னணி என்ன? நிலையான வழிகாட்டு நெறிமுறைக்கான நோக்கம், எத்தகைய நிகழ்வுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும் மற்றும் பொருந்தாது என்பது குறித்து அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட முன்மொழிவு குறித்த கையேடு வழங்கப்பட்டது.

அதை மேற்கோள்காட்டி, கூட்டத்தில் பங்கேற்ற திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் தங்களது கருத்துகளை எடுத்துக் கூறினர். கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில் தமிழக அரசு, இனி வருங்காலங்களில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பிரசாரம் மற்றும் ரோடு ஷோ போன்ற நிகழ்ச்சிகள் நடத்த தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து உயர் நீதிமன்றத்துக்கு அளிக்கும்.

பின்னர் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பில் அடிப்படையில், தமிழகத்தில் பொதுக்கூட்டம், பரப்புரையின்போது புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்துக்கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

அரசு முன்மொழிந்துள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு அரசு சார்பில் கையேடு வழங்கப்பட்டது. அதில் தற்போது ஒரு அரசு வரைவு வழிகாட்டு நெறிமுறையை உருவாக்கியுள்ளதாகவும், அதை மேற்கோள் காட்டி பேசும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, அரசு முன்மொழிந்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் விவரம்:

* கூட்டம் நடத்தும் இடங்களை காவல் துறை மற்றும் அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் தேர்வு செய்து அறிவிப்பார்.

* 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை கூட்டம் வந்தால் ரூ.1 லட்சம், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ரூ.3 லட்சம், 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை ரூ.8 லட்சம், 50 ஆயிரத்துக்கு மேல் ரூ.20 லட்சம் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். இந்த தொகை பொதுக்கூட்டத்தின்போது சேதங்கள் ஏற்பட்டால் ஈடுசெய்ய பயன்படுத்தப்படும்.

* நிகழ்ச்சி நடத்துபவர்கள் உரிய படிவத்தில் மனுவை சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதில் இடம், நேரம், கூட்டம், பேச்சாளர், வாகனங்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும்.

* அங்கீகரிக்கப்படாத இடமாக இருந்தால் அந்த இடத்தின் வரைபடம், அவசர கால வழி, நில உரிமையாளரின் ஒப்புதல் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.

* அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு 10 நாட்களுக்கு முன்பும், அங்கீகரிக்கப்படாத மாற்று இடத்திற்கு 21 நாட்களுக்கு முன்பும் மனு கொடுக்க வேண்டும். கூட்டத்தினாின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்துபவர் பெயர், அடிப்படை வசதிகளை மேற்கொள்பவர் பெயர் விவரங்களை குறிப்பிட வேண்டும்.

* நிகழ்ச்சியை குறிப்பிட்ட நேரத்தில் நடத்துதல், கூட்டத்தினரின் பாதுகாப்பு, பொது மற்றும் தனியார் சொத்துக்கு சேதம் ஏற்பட்டால் பொறுப்பேற்பது, அவசரகால ஊர்திகள் இடையூறின்றி செல்ல வழி, கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடம் ஒதுக்கி பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்க வேண்டும்.

* ரோடு ஷோ நடத்தவுள்ள வழித்தடம், உரை நிகழ்த்தவுள்ள இடம், துவங்கும் இடத்திற்கும் முடிவுறும் இடத்திற்கும் சிறப்பு விருந்தினர் வருகை தரக்கூடிய நேரம், எதிர்பார்க்கப்படும் கூட்டம் மனுவில் தெளிவாக குறிப்பிட வேண்டும். அங்கீகரிக்கப்படாத இடமாக இல்லாவிட்டால் தேசிய நெடுஞ்சாலை துறை அல்லது மாநில நெடுஞ்சாலை அல்லது உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக அனுமதி வாங்க சமர்ப்பிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே உரை நிகழ்த்த வேண்டும். சிறப்பு அழைப்பாளரின் வாகனத்தை பின்தொடர்ந்து மக்கள் செல்வதை தவிர்க்க தன்னார்வலர்களை நியமித்து கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.

* ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் ஒரே இடத்திற்கு, ஒரே நேரத்திற்கு பெறப்பட்டால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை வழங்கப்படும். குறிப்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

* நிகழ்ச்சி அமைப்பாளர்கள் குறிப்பிட்டதைவிட 50 சதவீதத்துக்கும் அதிகமாக கூட்டம் கூடினால், அது தீவிர விதிமீறலாக கருதப்பட்டு டெபாசிட் தொகை பிடித்தம் மட்டுமின்றி, சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும்.

* நிகழ்ச்சிக்கு முன்பாக 2 மணி நேரத்திற்கு மேலாக மக்கள் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

நிகழ்ச்சியின்போது 100 பேருக்கு 1 தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும். குடிநீர், சுகாதாம், நடமாடும் கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விரிவான திட்டம் வகுக்க வேண்டும்.

* முக்கிய நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்களை எளிதில் அடையாள காணும் வகையில் அடையாள அட்டை அல்லது பேட்ஜ் வழங்குவதுடன், அவர்கள் காவல் துறையுடன் இணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் தேவையான அளவு சிசிடிவி கேமராக்களை நிறுவுவதுடன், அதனை காவல் துறையினர், மாவட்ட நிர்வாகம் நேரடியாக கண்காணிக்க வகை செய்ய வேண்டும்.

* போதுமான காவலர்களை பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறை பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். நிகழ்ச்சிகளின் ஆபத்து வரையறைகளுக்கேற்ப காவலர்கள் நியமிக்க வேண்டும். குறைந்த ஆபத்து என்றால் 200 பேருக்கு 1 காவலர், மிதமான ஆபத்து 100 பேருக்கு 1 காவலர், அதிக ஆபத்து 50 பேருக்கு 1 காவலர் பணியில் அமர்த்திட வேண்டும்.

* இந்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள், விதிகள், அரசின் அறிவுறுத்தல்கள் போன்றவற்றுடன் கூடுதலாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழிநாட்டு நெறிமுறைகளைப் பார்த்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பேசும்போது, ‘தவெகவால்தான் பிரச்னை. இதுவரை எந்த அரசியல் கட்சிக் கூட்டத்திலும் இதுபோன்ற நிகழ்வு நடைபெறவில்லை. யாரால் பிரச்னை ஏற்படுகிறதோ அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதியுங்கள்.

பிரச்னை ஏற்பட்டவுடன் விஜயும் அவரது கட்சியினரும்தான் ஓட்டம் பிடித்தனர். இதனால் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் நடந்த பிரச்னைகளுக்கு மற்ற அரசியல் கட்சிகள் எப்படி பொறுப்பாக முடியும்.

இதனால், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். முன் பணம் கட்ட வேண்டும் என்பதற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

* கூட்டத்திற்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை வந்தால் ரூ.1 லட்சம், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ரூ.3 லட்சம், 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை ரூ.8 லட்சம், 50 ஆயிரத்துக்கு மேல் ரூ.20 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும்.

* அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு 10 நாட்களுக்கு முன்பும், அங்கீகரிக்கப்படாத மாற்று இடத்திற்கு 21 நாட்களுக்கு முன்பும் மனு கொடுக்க வேண்டும்.

* ரோடு ஷோ வழித்தடம், உரை நிகழ்த்தும் இடம், சிறப்பு விருந்தினர் வரும் நேரம், எதிர்பார்க்கப்படும் கூட்டம் மனுவில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

* ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் ஒரே இடத்திற்கு, ஒரே நேரத்திற்கு பெறப்பட்டால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.